பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் நரேந்திர மோதி குறித்து தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.
அந்த பதிலில், கார்கேவுக்கு ‘பதிலளிக்க மிகக் குறைந்த நேரமே வழங்கப்பட்டது’ என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
“நோட்டீஸில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் தலைவருக்கு வழங்கப்பட்ட நேரம் மிகவும் குறைவு. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் பல தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக இருக்கும்போது, இந்த நேரம் நிச்சயமாகப் போதாது,” என்று காங்கிரஸ் கூறுகிறது.
இதனுடன், தேர்தல் ஆணையம் ‘வெறும் சம்பிரதாயங்களை மட்டுமே பின்பற்றுகிறது’ என்று குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ், பதிலளிக்க கார்கேவுக்கு ஒரு வார கால அவகாசம் கோரியுள்ளது.
“காங்கிரஸ் தலைவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒரு வழியைக் கண்டுபிடிப்பதற்காக, (கார்கேவின்) இந்த வார்த்தைகள் எந்தச் சூழலில் கூறப்பட்டன என்பதற்கான தெளிவான மற்றும் சந்தேகத்திற்கு இடமில்லாத விளக்கம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்படுவதாகத் தெரிகிறது,” என்று காங்கிரஸ் கூறியுள்ளது.
மேலும், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருக்கு எதிராகத் தங்கள் கட்சி பல புகார்களை அளித்திருந்தும், தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
பிரதமர் நரேந்திர மோதியை ‘தீவிரவாதி’ என்று கார்கே கூறியதை தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு, 24 மணி நேரத்திற்குள் தனது தரப்பை முன்வைக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
கார்கேவின் இந்த அறிக்கையை பல பாஜக தலைவர்கள் எதிர்த்தனர், அதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ஒரு விளக்கத்தை வெளியிட்டார்.
அவர் கூறியதாவது, “நான் பிரதமருக்கு எதிராகப் பேசவில்லை. பிரதமர் தலைவர்களையும் வேட்பாளர்களையும் அச்சுறுத்துகிறார், இந்தச் சூழலில்தான் ‘வரிப் பயங்கரவாதம்’ நடக்கிறது என்று நான் கூறினேன்.”
“அமலாக்கத்துறை சோதனைகளை நடத்துகிறது, வருமான வரித்துறை சோதனைகளை நடத்துகிறது, சிபிஐ சோதனைகளை நடத்துகிறது. இந்த ‘தீவிரவாதத்தை’ பிரதமரே மேற்கொள்கிறார்.நான் அவரை தீவிரவாதி என்று அழைக்கவில்லை, மக்களைப் பயமுறுத்துவதற்காக அவர் அத்தகைய சூழலை உருவாக்குகிறார்.” என்றார் கார்கே.
“சோதனைகள் மூலம் எதிர்ப்பாளர்களை அமைதியாக்கி, தேர்தலில் அவர்களைத் தோற்கடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். இதைத்தான் நான் சென்னையில் கூறினேன்,” என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார்.