WTC Final நாள் 3 | அணியை மீட்கும் ரஹானே அரைசதம்; உறுதுணையாக களத்தில் ஷர்துல்! | Ajinkya Rahane haf century in WTC Final against australia in oval test

Share

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் ரஹானே பொறுப்புடன் விளையாடி அரைசதம் விளாசினார். இதன் மூலம் அவர் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ரன்களை கடந்துள்ளார்.

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. ட்ராவிஸ் ஹெட் சதமடித்தார். முதல் ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இரண்டாவது நாளில் ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா எல்பிடபள்யூ முறையில் 15 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுப்மன் கில் 13 ரன்களில் போல்டானார். புஜாராவும் 14 ரன்களில் போல்டாக விராட் கோலி மீது ரசிகர்கள் நம்பிக்கை வைத்திருந்தனர். ஆனால் கோலிக்கு புஜாரா மீது அப்படி என்ன பாசமோ தெரியவில்லை, புஜாரா எடுத்த அதே 14 ரன்களை எடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதன்பின் ரஹானே – ஜடேஜா இணைந்து அணியை மீட்டெடுக்கும் பணியை மேற்கொண்டனர். சீரான வேகத்தில் பவுண்டரிகளை விளாசிய ஜடேஜா 48 ரன்கள் சேர்த்த நிலையில் நாதன் லயன் சுழல்பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரஹானே – ஜடேஜா இணை 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் மூலம் எடுத்தது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 38 ஓவருக்கு 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்திருந்தது. ரஹானே 29 ரன்களும், ஸ்ரீகர் பரத் 5 ரன்களும் எடுத்து நாட் அவுட் பேட்ஸ்மானாக இருந்தனர்.

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் தொடங்கியதுமே ஸ்ரீகர் பரத் போல்டானார். களத்திற்கு வந்த ஷர்துல் தாக்கூர் ரஹானேவுடன் கைக்கோத்தார். இன்றை ஆட்டத்தில் ரஹானே பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்துள்ளார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ரஹானே 5 ஆயிரம் ரன்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு துணையாக ஷர்துல் தாக்கூரும் தேவையான நேரங்களில் பந்தை பவுண்டரிக்கு அனுப்பி ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்து வருகிறார். இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 260 ரன்களுடன் விளையாடி வருகிறது. ரஹானே 89 ரன்களுடனும், ஷர்துல் தாக்கூர் 36 ரன்களுடனும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com