பட மூலாதாரம், ANI
-
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
பிரசுரிக்கப்பட்டது
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அவருக்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லியின் ஜந்தர் மந்தரில் நடந்து வந்த போராட்டத்தைத் தொடர்ந்து இன்று (ஜூலை 25) பதவியில் இருந்து விலகியுள்ளார்.
ஒரு போராட்டத்தின் காரணமாக தனது அமைச்சரவையில் இருந்த அமைச்சர் ஒருவர் பதவியைத் துறக்க நேரிட்டது இதுவே முதல் முறை என்பதால் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா மோதி அரசுக்கு ஒரு பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பும் பல சந்தர்ப்பங்களில் எதிர்க் கட்சிகள் மத்திய அரசு மற்றும் அதன் அமைச்சர்கள் மீது பல்வேறு விவகாரங்களில் அழுத்தம் கொடுத்திருக்கின்றன. ஆனால் அதன் தாக்கம் பெரியளவில் இருந்ததில்லை.
இந்த விவகாரத்தில், “மோதி அரசில் ராஜிநாமாக்கள் நடப்பதில்லை” என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்த கருத்து பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது. மற்றொரு புறம், பாஜக தலைவர் நிதின் நபின் தனது எக்ஸ் பதிவில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பாராட்டியுள்ளார்.
“மத்திய கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் இந்தியாவின் கல்வி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதிலும், வரலாற்றுச் சிறப்புமிக்க தேசிய கல்விக் கொள்கையை வெற்றிகரமாக அமல்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகித்தார். இது தவிர, அவர் பல முக்கியமான முயற்சிகளையும் முன்னோக்கி எடுத்துச் சென்றார்” என நிதின் நபின் பதிவிட்டுள்ளார்.
இந்த நிலையில், தர்மேந்திர பிரதான் குறிப்பாகத் தற்போது ராஜிநாமா செய்ததன் அர்த்தம் என்ன என்ற கேள்விக்கான பதிலை சில நிபுணர்களுடன் கலந்துரையாடி கண்டுபிடிக்க முயன்றோம்.
‘மாணவர்கள் போராட்டத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி’
கடந்த 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு, மோதி அரசின் கொள்கைகள் அல்லது ஏதேனும் ஒரு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை முற்றுகையிட்ட பல சந்தர்ப்பங்கள் வந்தன.
பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு மற்றும் வேலை வாய்ப்புக்கான தேர்வுகள், சிஏஏ-என்ஆர்சி மற்றும் எஸ்ஐஆர் போன்ற பல விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் மோதி அரசுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராடினர்.
ஆனால், இத்தகைய எதிர்ப்புகளோ அல்லது போராட்டங்களோ அரசாங்கத்தின் மீது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. பிரதமர் மோதி மற்றும் அமித் ஷா தலைமையிலான பாஜக, அடுத்தடுத்து பல தேர்தல்களில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே இருந்தது. மேலும் அவர்களுக்கு எதிரான ஒவ்வொரு விவகாரமும் முறியடிக்கப்பட்டது.
இப்படிப்பட்ட நிலைத்தன்மையுடன் பாஜக இருந்த நிலையில்தான், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டம் ஜூன் 20 முதல் நடந்து வந்தது.
பட மூலாதாரம், Getty Images
இருப்பினும், ஜூலை 17 வரை இந்தப் போராட்டங்களின் தாக்கம் பெரிய அளவில் காணப்படவில்லை. ஆனால், ஜூலை 18 காலையில் டெல்லி காவல்துறை சோனம் வாங்சுக்கை ஜந்தர் மந்தரின் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் மாணவர்களின் கோரிக்கைகளுக்குப் பெருமளவிலான இளைஞர்களின் ஆதரவு கிடைத்தது. இதன் பின்னர், ஜூலை 20 அன்று சிஜேபி-யின் நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியின்போது காவல்துறை நடத்திய நடவடிக்கை குறித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்தனர்.
இதன் காரணமாக அரசியல், விளையாட்டு, திரைப்படம், கலை மற்றும் பல துறைகளில் இருந்து அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கத் தொடங்கியது. அதன் விளைவாக ஜூலை 25 சனிக்கிழமை அன்று கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
பட மூலாதாரம், ANI
மூத்த பத்திரிகையாளர் லவ் குமார் மிஸ்ராவின் கூற்றுப்படி, “இது மாணவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. ஜே.பி.யின் (ஜெயபிரகாஷ் நாராயணன்) போராட்டத்திற்குக்கூட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகுதான் வெற்றி கிடைத்தது, 1977ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தியின் அரசை தோற்கடித்த போதுதான் அது சாத்தியமானது. ஆனால் இங்கே, வெறும் 36 நாட்களில் அவர்கள் அரசாங்கத்தைத் தங்களது கோரிக்கைகளுக்குப் பணிய வைத்துள்ளனர்.”
மேலும் அவர், “அடிப்படையில் இது கடந்த 4-5 நாட்களாகக் கொடுக்கப்பட்ட அழுத்தத்திற்குக் கிடைத்த வெற்றி. மாணவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. மும்பை, புனே, லக்னௌ, ஜெய்ப்பூர் என எல்லா இடங்களிலும் போராட்டங்கள் தொடங்கின. பிகாரில் பாட்னா போன்ற பெரிய நகரங்களை விட்டுவிடுங்கள், ககௌல் போன்ற சிறிய இடங்களில்கூட இளைஞர்கள் வீதிகளில் இறங்கிவிட்டனர். தர்பங்கா, சிவான், சப்ரா, ஔரங்காபாத், ஜெஹானாபாத், ஷேக்புரா எனப் பல இடங்களில் மாணவர்கள் வீதிகளில் போராடினர்” என்று தெரிவித்தார்.
‘அரசுக்குப் பெரிய பின்னடைவு, அதே நேரத்தில் ஒரு வாய்ப்பும்கூட’
மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சௌத்ரியின் கூற்றுப்படி, இது எதிர்க்கட்சிகள் முதல் மாணவர்கள் வரை அனைவருக்கும் வெற்றிகரமான ஒரு சூழ்நிலை.
“இது பிரதமர் மோதிக்கும் அரசுக்கும் ஒரு மிகப்பெரிய பின்னடைவு. தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா நடக்காமல் இருந்திருந்தால், இந்தப் போராட்டம் இன்னும் தீவிரமடைந்திருக்கும். இளைஞர்களின் ஆக்ரோஷத்தை தணிக்க அவருடைய ராஜினாமா அவசியமான ஒன்றாக இருந்தது” என்று அவர் கூறினார்.
ஜனநாயக வழியில் மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை இந்த இயக்கம் உணர்த்துவதாக நீர்ஜா சௌத்ரி நம்புகிறார்.
இருப்பினும், மூத்த பத்திரிகையாளர் ரஷீத் கித்வாய் இதில் அரசுக்கு பின்னடைவு ஏற்பட்டிருப்பதுடன் சேர்த்து ஒரு வாய்ப்பும் உருவாகியுள்ளதாகப் பார்க்கிறார்.
“இந்தச் சூழ்நிலை நிச்சயமாக மோதி அரசுக்குப் பெரிய பின்னடைவுதான். ஆனால் இதில் பிரதமர் மோதிக்கு ஒரு வாய்ப்பும் உள்ளது. இதற்கான பெருமையைத் தேடிக் கொள்வதில் மாணவர்கள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு இடையே போட்டி ஏற்பட்டால் அரசு அந்தப் பிளவை மேலும் அதிகரிக்கத் தயங்காது” என்று அவர் கூறினார்.
அதோடு, “அப்படி ஏதேனும் நடந்தால், மத்திய அரசு நாடாளுமன்றத்தின் இதே கூட்டத் தொடரில் தொகுதி மறுசீரமைப்பு போன்ற பல மசோதாக்களை நிறைவேற்றிவிடும். மேலும் இது அவர்களுக்குத் தோல்வியடைந்த பந்தயத்தில் வெற்றி பெறுவது போன்ற ஒரு சூழ்நிலையாக மாறிவிடும்” என ரஷீத் கித்வாய் கூறுகிறார்.
பட மூலாதாரம், @narendramodi Instagram/ANI Video Grab
மத்திய அரசுக்கு வெள்ளிக்கிழமை மிகவும் சவால்கள் நிறைந்த நாளாக இருந்தது. ஒருபுறம், அதன் பிரதிநிதிகளுக்கும் சிஜேபி அமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை எந்தவொரு முடிவும் எட்டப்படாமலே முடிந்தது.
மாலையில், ராகுல் காந்தியும் பெல்லட் துப்பாக்கியால் காயமடைந்த ஒரு நபரை அழைத்துக் கொண்டு ஊடகங்களின் முன்பாக வந்துவிட்டார். மத்திய அரசுக்குக் கொடுக்கப்பட்ட இந்த அழுத்தம் சனிக்கிழமையும் நீடித்தது.
அதே நேரத்தில், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் டெல்லியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘விஸ்வ மாங்கல்ய சபா’ நிகழ்ச்சியில் பேசுகையில், “நாம் சிறியவர்களாக இருந்தபோது, பெற்றோர் கூறுவதற்கு எதிராக எந்தவொரு விவாதமும் செய்ய மாட்டோம். அமைதி என்றால் அமைதிதான். ஆனால் இப்போது அப்படி இல்லை, புதிய தலைமுறை கேள்விகளைக் கேட்கிறது, அதற்கு தர்க்கரீதியான காரணத்தை விளக்க வேண்டியுள்ளது” என்றார்.
“இன்றைய தலைமுறைக்கு அதிக அளவிலான தனிப்பட்ட அரவணைப்பைக் கொடுக்க வேண்டிய அவசியம் உள்ளது. அவர்களுடன் நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்களுடன் பேச வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார். ஜந்தர் மந்தரில் மாணவர்களின் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்கு மத்தியில்தான் பாகவத்தின் இந்த கருத்து வந்துள்ளது.
தர்மேந்திர பிரதானின் ராஜிநாமா ஏற்படுத்தக்கூடிய தாக்கம் என்ன?
“தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவுக்கு பின்னால் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தமும், மோகன் பாகவத்தின் கருத்தும் இருப்பதாகத் தான் நம்புவதாகக் கூறுகிறார் லவ் குமார் மிஸ்ரா. “இந்த இயக்கம் எந்தவொரு அரசியல் தலைவரின் தலைமையிலும் நடக்கவில்லை. இது மாணவர்களின், மாணவர்களுக்கான மற்றும் மாணவர்களால் நடத்தப்பட்ட ஓர் இயக்கம். அந்த வகையில் இது மிகவும் சிறப்பு வாய்ந்தது.”
லவ் குமார் மிஸ்ராவின் கூற்றுப்படி, தர்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்யாமல் இருந்திருந்தால், அது அரசின் நம்பகத்தன்மைக்குப் பெரிய அச்சுறுத்தலாக மாறியிருக்க வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், ANI
“நேபாளம், வங்கதேசம், இலங்கை போன்ற அண்டை நாடுகளில் என்ன நடந்ததோ, அது குறித்த பயமும் அரசுக்கு இருந்தது. இந்தியாவிலும் மாணவர்களின் முன் வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பல பிரச்னைகள் உள்ளன, அவை வினாத்தாள் கசிவு விவகாரத்தில் ஒரே நேரத்தில் வெடித்துக் கிளம்பின. அரசாங்கம் இதில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் மேலும் கூறினார்.
“இளைஞர்கள் குறித்துக் கரப்பான் பூச்சி என்ற பெயரில் எந்த மாதிரியான கருத்துகள் கூறப்பட்டனவோ, அதைப் பார்க்கும்போது இவர்கள் இனி காக்ரோச் என்ற வார்த்தையையும் மறுவரையறை செய்ய வேண்டியிருக்கும் என்று தோன்றுவதாக” அவர் குறிப்பிட்டார்.
மே 15 அன்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்த் ஒரு வழக்கு விசாரணையின்போது, “வேலைவாய்ப்பு கிடைக்காததாலும் தொழிலில் தங்களுக்கான இடத்தை உருவாக்க முடியாததாலும் சில இளைஞர்கள் கரப்பான் பூச்சி போல எல்லா இடங்களிலும் பரவி விடுகிறார்கள்” என்று கூறியிருந்தார்.
இருப்பினும், தனது கருத்து குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, தனது கருத்துகள் போலி பட்டப் படிப்புகளின் உதவியுடன் வழக்கறிஞர் போன்ற தொழில்களில் நுழைந்தவர்களுக்கு எதிரானது மட்டுமே என்றும், இளைஞர்களுக்கு எதிராக பொதுவாகக் கூறப்பட்டது அல்ல என்றும் தலைமை நீதிபதி மே 16 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
ஆனால், அதற்குள் விஷயம் வெகுதூரம் சென்றுவிட்டது. அபிஜித் தீப்கே ‘காக்ரோச்’ என்ற வார்த்தையின் மூலம் சமூக ஊடகங்களில் நகைச்சுவையான பாணியில் தொடங்கிய முயற்சிக்குக் கிடைத்த ஆதரவைக் கண்டு, அவர் காக்ரோச் ஜனதா கட்சியை உருவாக்கினார்.
பட மூலாதாரம், ANI
“இது இளைஞர்களின் மிகப்பெரிய வெற்றி. இது செல்வாக்குமிக்க அரசியல் தலைவர்களை உருவாக்கியுள்ளது. இது ஜனநாயகத்துடன் சேர்த்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒரு வாய்ப்பை வழங்கும்” என நீர்ஜா சௌத்ரி கூறுகிறார்.
இருப்பினும், ரஷீத் கித்வாய் இந்த வெற்றியில் எதிர்க்கட்சிகளுக்குப் பெரிய சவால் ஒன்றும் உருவாகி இருப்பதாகக் கருதுகிறார்.
“இப்போது பிரதமர் மோதியும் அரசாங்கமும் விரைவு நீதிமன்றங்கள் போன்ற விஷயங்கள் பற்றிப் பேசுவார்கள், இருப்பினும் இது பொது மக்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது. ஆனால் தேர்தல் அரசியலில், இப்போது உத்தர பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இதில் உத்தர பிரதேச தேர்தல் மிகவும் முக்கியமானதாக இருக்கும்” என்கிறார் அவர்.
அவரது கூற்றுப்படி, “பாஜக மீண்டும் உத்தர பிரதேசத்தில் வெற்றி பெறுவதும், பஞ்சாபில் யாருடைய ஆட்சி அமைகிறது என்பதும், அனைத்துக் கட்சிகளுக்கும் ஒரு பெரிய செய்தியை வழங்குவதாக இருக்கும்.”
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு