கால்பந்து உலகில் `டாப் 5 லீக்ஸ்” (இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ்) என்பது மிகவும் கடினமான மற்றும் சவாலான களமாகக் கருதப்படுகிறது. இதுவரை இந்தப் போட்டிகளின் பயிற்சியாளர் இடத்தில் ஒரு பெண்ணைப் பார்ப்பது என்பது கனவாகவே இருந்தது. அந்த கனவை நனவாக்கியுள்ளது ஜெர்மனியின் `யூனியன் பெர்லின்’ கிளப். மேரி-லூயிஸ் எட்டா (Marie-Louise Eta) அந்த அணியின் உதவிப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டபோது, அது வெறும் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்கப்படவில்லை; அது ஒரு சமூக மாற்றத்தின் தொடக்கமாகப் பார்க்கப்பட்டது.

யார் இந்த மேரி-லூயிஸ் எட்டா?
மேரி-லூயிஸ் ஒன்றும் தற்செயலாக இந்தப் பதவிக்கு வந்துவிடவில்லை. கால்பந்தில் அவருக்கு நீண்ட கால அனுபவம் உண்டு. அவர் ஒரு முன்னாள் தொழில்முறை வீராங்கனை. 2010-ல் ஜெர்மனி அணியுடன் இணைந்து U-20 உலகக்கோப்பையை வென்றவர். ஜெர்மனியின் புகழ்பெற்ற `டர்பைன் பாட்ஸ்டாம்’ அணிக்காக விளையாடி பல வெற்றிகளைப் பெற்றுத் தந்தவர். கால்பந்து வீராங்கனையாக ஓய்வு பெற்ற பிறகு, பயிற்சியாளர் ஆவதற்கான மிக உயரிய உரிமங்களைப் (Coaching Badges) பெற்று தன்னைத் தயார்படுத்திக் கொண்டார்.