வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
புத்தகம் என்றவுடன் அனைத்து தரப்பினரும் மறுக்க மற்றும் மறக்க இயலாத சொல் “படிப்பு” (study). இந்த சொல்லால் சிறுவர் பருவத்தின் முதலே புத்தகத்தின் மீது ஏற்படுத்தப்பட்ட வெறுப்பின் காரணமாக பல அறிஞர்கள், அறிவியல் வல்லுனர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகளை இழந்துள்ளோம் என்று கூறினால் மிகையாகாது.
ஏனெனில், “வாசித்தல்” மற்றும் “படித்தல்” என இரு வேறு மதிப்பான பொருள் செம்மொழியான தமிழில் இருப்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாக “புத்தகம்” என்றாலே படிப்பதற்கு என்கிற நிலையில் மாற்றம் தேவைப்படுகிறது. இன்றைய காலக்கட்டத்தில் கல்வியாளர்கள் இதனை தங்களது கவனத்தில் எடுத்துக்கொள்ளுதல் இன்றியமையாதது.

வாசிப்பும் படிப்பும்
வாசிப்பு
புத்தகங்கள் உட்பட எந்த ஒரு தகவல் ஆதாரங்களையும் முதலில் எழுத்துக் கூட்டி வாசித்து அது தரும் பொருளை அறிந்து ஏன்? எதற்கு? எப்படி? என தன் சிந்தனை தூண்டப்படும் போது கிடைக்கப் பெறும் பதிலோடு நிறுத்திக்கொள்வதற்கு “வாசித்தல்” எனப் பொருள்படும்.
இதில் உலகெங்கிலும் மூலை முடுக்குகளில் கிடைக்கப்பெறும் முன்னோர்களின் வாழ்க்கை வரலாறு, கற்பனை, ஆய்வுகள், திட்டமிடுதல், நேர மேலாண்மை, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் மற்றும் இதன் மூலம் கிடைக்கப்பெற்ற அனுபவங்களை சுமந்து நிற்கும் புத்தகங்கள், தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் போன்ற வாசிப்பதற்கு ஏற்ற தகவல் ஆதாரங்கள் அடங்கும்.
இதன் வாயிலாக தம்மைச் சுற்றியுள்ள எந்த ஒரு விஷயத்தையும் மேலோட்டமாக தெரிந்து கொள்ள முனைவது என எடுத்துக் கொள்ளலாம்.
படிப்பு
மேற்கூறியவாறு வினாக்களுக்கு கிடைக்கப்பெற்ற விடைகளில் ஏதாவது குறிப்பிட்ட ஒன்றினை பற்றி முழுமையாக மற்றும் தெளிவாக தெரிந்து கொள்ள முனைவதுதான் “படித்தல்” என்று பொருள். மேலும், நாளைய தேவைக்காக நினைவில் நிலைநிறுத்துவதை குறிப்பது ஆகும்.
இதில் பாடப்புத்தகங்கள் அனைத்தும் அடங்கும். இதற்கென கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களில் தனிக்குழுக்கள் அமைக்கப்படுகிறது. இக்குழுவின் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில் உலகம் முன்னேற்றத்திற்கு ஏற்ப தனியான பாடத்திட்டங்கள் காலம் தவறாமல் தயார் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அவை படிப்பதற்கு ஏற்றதா? இல்லையா? என்பதனை வாசித்த பிறகு தான் அடையாளம் காணமுடியும் என்பது திண்மையான ஒன்று.

வாசிப்பிற்கும், படிப்பிற்கும் உள்ள வேறுபாடு
ஒரு நூலகத்திற்குச் சென்று எத்தனை வகையான துறைகள் பிரிக்கப்பட்டுள்ளன மற்றும் அவைகளுக்கான புத்தகங்கள் என்னென்ன இருக்கின்றன என்பது போன்ற விபரங்களை திரட்டுதல் என்பது “வாசிப்பிற்கு” சமம்.
இதற்கு பிறகு, ஒரு துறை சார்ந்த பகுதிக்குச் சென்று அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட அலகிற்கு கிடைக்கப்பெறும் நூல்களை அலசி ஆராய்வது என்பது “படிப்பிற்கு” சமமாகும்.
பருவமும் புத்தகங்களும்
பள்ளிப்பருவம்
நமது முன்னோர்கள், மனிதன் குழந்தைப்பருவம் முதல் சிறுவர் பருவத்தினைக் கடந்து சுயமுடிவு எடுக்கும் நிலை (Major) அடையும் வரை பள்ளியிலேயே கல்வி பயிலவேண்டும் என கருத்தில் கொண்டு பள்ளிகளைப் பல நிலைகளாகப் பிரித்துள்ளார்கள். அவை மழலையர் (3-5), ஆரம்பக் கல்வி (5-9), நடுநிலை (10-12), உயர்நிலை (13-14) மற்றும் மேல்நிலைக் கல்வி (15-16) என்பதாகும்.
ஆரம்பக் கல்வி நிலை
ஆரம்பக் கல்வி நிலையான ஒன்று முதல் ஐந்தாம் வரை “எண்ணும் எழுத்தும் இரு கண்கள்” என்பதற்கு ஏற்றாற்போல் பாடத்திட்டத்தின் மூலம் பாடப்புத்தகங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆரம்பக் கல்வி நிலையில் பயிலும் மாணவர்களுக்கு, எண் என்றால் என்ன? அதன் பயன்கள் மற்றும் அதற்கான சூத்திரங்கள், எழுத்து என்று வரும் போது, அதன் வடிவம், எழுதப் பழக்குதல், தனியாக மற்றும் ஒன்றோடு ஒன்று இணையும் போது மேற்கொள்ளவேண்டிய உச்சரிப்பு போன்றவற்றை கற்றுக் கொடுத்து படிக்க வைப்பதற்கு ஏற்றார் போல் புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்.

இந்த ஆரம்ப கல்வி நிலையில் ஆசிரியர்கள் மிகவும் பொறுமையுடன் பயிற்சிகளை திட்டமிடுதல் மிகவும் அவசியமான ஒன்று. மேலும், இப்பருவத்தில் மாணவர்களுக்கு திறந்த புத்தகத் தோ்வுகளை மேற்கொள்வது சாலச் சிறந்தது.
நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி நிலைகள்
இங்கு எதிர்காலத்தில் பொது வாழ்க்கை மற்றும் பணிகளில் ஈடுபடும்போது உபயோகிக்கப்படவேண்டிய வார்த்தைகள் மற்றும் அதற்கான அர்த்தங்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளும் விதம் பாடத்திட்டத்தின் மூலம் பாடங்கள் உருவாக்கப்பட்டிருக்கும். இதில் மொழி, அறிவியல், கணிதம், சமூகம் போன்ற பாடங்கள் அடங்கும். இதன் காரணமாகத் தான் பத்தாம் வகுப்பில் பெறப்படும் மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்கான துறைகள் ஒதுக்கப்படுகின்றன.
இந்த கல்வி நிலையில், பொது வாழ்க்கையில் உபயோகிக்கும் வார்த்தைகள் மற்றும் அதற்கான அர்த்தங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தாவது படித்துள்ளார்களா? என்பது தான். பாடங்களைப் புரிந்து கற்றுக் கொண்டார்களா? என்கிற கேள்விக்கு இங்கு பதில் இல்லை.
இதற்கு தமிழ்நாடு பொது தோ்வு வாரியம் மேற்கொள்ளப்படும் அனைத்து நிலை தோ்வுகளுக்கும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடப்புத்தகங்களே பாடத்திட்டத்தில் உள்ளன என்பதே இதற்கு சான்று.
திறன் மற்றும் மனிதநேய மதிப்பு கல்வி நிலைகள்
மனிதன் சுயமுடிவு எடுக்கும் பருவநிலையில் (Major) கல்லூரியில் நுழைகிறார்கள். இப்பருவத்தில் மூளை வளர்ச்சி 90 சதவீதம் முழுமையடைந்த காலம் என்பதால் ஓரளவிற்குப் புரிந்து கொண்டு செயல்படும் நிலையினை அடைகிறான் என்பது கவனிக்கத்தக்கது. இதன் காரணமாகத்தான் 18 வயது பூர்த்தியான மனிதனுக்கு ஓட்டுரிமை உட்பட அனைத்திலும் சுயமுடிவு எடுக்கும் அதிகாரம் கொடுக்கப்படுகிறது.
வாழ்க்கையின் முக்கியமான இந்த பருவ நிலையில் திறன் மற்றும் மனிதநேய மதிப்பு என்கிற இரண்டு விதமான கல்வி நிலைகள் கல்லூரிக் காலங்களில் தேவைப்படுகிறது். ஆனால் வேலைவாய்ப்பினை உறுதி செய்வதற்கு “திறன்” கல்வியை மட்டுமே உயர்கல்வி நிறுவனங்கள் இன்றைய காலக்கட்டத்தில் கவனம் செலுத்தி வருவது கவனத்திற்குரியது. இதற்கு உயர்கல்வி நிறுவனங்களில் செயல்படுத்தப்படும் பாடத்திட்டங்களே சாட்சி.

உயர்கல்வி நிறுவனங்களில் மனிதநேய மதிப்புக் கல்வியினை ஈடு செய்வதில் “நூலகம்” முக்கியத்துவம் பெறுகிறது. நூலகத்தில் தான் பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஏடுகளோடு முன்னோர்களின் கை வண்ணத்தில் உருவாக்கம் பெற்ற பல்துறைச் சார்ந்த புத்தகங்கள் மற்றும் தினசரி நாளிதழ்கள், வார மற்றும் மாத இதழ்கள் போன்றவை “வாசிப்பதற்கு” ஏற்ற தகவல் ஆதாரங்கள் தவறாமல் சேகரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
அதுபோல இத்தகைய ஆதாரங்களை மிகவும் கவனத்துடன் சேகரிப்பதும் கையாளுவதும் நூலகர்களின் கடமையாகும். இதற்கு கல்வித்துறை மற்றும் கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் ஆகும். இதன் மூலம் நூலகம் என்பது படிப்பதற்கு மட்டுமே உபயோகப்படுத்தும் இடமல்ல; அது தன்னிலை அறிந்த ஒரு மனிதன் விருப்பமான சிலையினை தனக்கு தானே சுயமாக செதுக்கிக் கொள்ளும் இடம் என அனைவரும் புரிந்துக் கொள்வது சாலச்சிறந்தது.
தவிர்ப்போம் படி… படி…
புத்தகங்கள் என்பது படிப்பதற்கு மட்டுமே என்கிற நிலைமாறிடவேண்டும். அதுபோல பாடப்புத்தகங்களைத் தாண்டியும் வாசிப்பதற்கு ஏற்ற மேற்கூறிய தகவல் ஆதாரங்கள் உள்ளன என்பதனை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு எடுத்துரைத்தால் “படி…படி…” என்னும் எரிச்சலை தரக்கூடிய வார்த்தை அழிவு நிலைக்குச் செல்லும்.
இதன் மூலம் வயதின் மூப்பு காரணமாக இழந்த பேரறிஞர்கள், அறிவியல் வல்லுநர்கள், தத்துவ மேதைகள் போன்ற திறமைசாலிகள் மீட்டு மறுபிறவி எடுப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசிக்கும் என்பது புலப்படும்.
வாசிப்பு என்பது ஒரு தேடல்; படிப்பு என்பது அந்தத் தேடலின் இலக்கு
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.