WTC Final: இந்திய அணியின் ஃபார்ம் ஓகேதான்; ஆனால், வானிலை ஒத்துழைக்குமா? சாம்பியனாகப்போவது யார்?

Share

இந்திய அணிக்கு 2011-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு உலகக்கோப்பையை வெல்ல ஒரு இறுதிப்போட்டி கையில் இருக்கிறது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா, இல்லை ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி, மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் உலகக்கோப்பைகளை வென்ற ஒரே அணி எனும் பெருமையை பெறுமா? அதற்கான விடை லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்கும் போட்டியில் தெரிந்துவிடும்.

Bumrah

இந்த முறை டெஸ்ட் கிரிக்கெட் விளையாட இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் மூவரும் இல்லாதது பின்னடைவுதான். ஆனால் இங்கிலாந்து சென்றிருக்கும் ஒட்டுமொத்த இந்திய அணியின் கிட் பேக்கில் ஒட்டுமொத்தமாக பார்த்தோமானால் பல பாசிட்டிவ்வான அம்சங்களுமே இருக்கின்றன.

கடந்த ஆண்டின் பிற்பகுதியிலிருந்து ஆரம்பித்து தற்பொழுது வரை இளம்வீரர் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம், காற்று வீசும் திசையில் பறக்கும் பட்டம் போல உயர்ந்துகொண்டே செல்கிறது. அவரை அடுத்த விராட் கோலி என்று பேச ஆரம்பித்து, தற்பொழுது

“விராட் கோலியின் பேட்டிங்கில் வீக்னஸ் இருக்கிறது; சச்சின் போல கில்லுக்கு பேட்டிங் வீக்னஸ் கிடையாது!” என்று முகமத் கைஃப் சொல்லும் அளவுக்குச் சூழ்நிலைகள் மாறி இருக்கின்றன.

Virat Kohli

2021 இலங்கையின் இந்திய சுற்றுப்பயணத்தில் புஜாரா, ரஹானே இருவரும் மோசமான பேட்டிங் காரணமாகக் கழட்டி விடப்பட்டார்கள். இதில் புஜாரா ஐபிஎல் தொடரைத் தவிர்த்து விட்டு இங்கிலாந்து கவுன்ட்டி அணி சசெக்ஸ்க்கு விளையாடச் சென்று நன்றாக ஆடி இங்கிலாந்துக்கு எதிரான 2021 டெஸ்ட் தொடரில் எஞ்சியிருந்த ஒரு டெஸ்ட் போட்டிக்கு இந்திய டெஸ்ட் அணிக்கு மீண்டும் திரும்பி வந்தார். இறுதியாகக் கடந்த ஆண்டு பங்களாதேஷுக்கு எதிராகச் சதமடித்து தனது சத வறட்சியை முடிவுக்கும் கொண்டு வந்தார்.

இன்னொரு பக்கத்தில் ரஹானே, புஜாரா போல் நகராமல் ஐபிஎல் தொடரிலும், மாநில மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் பங்கேற்று பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து, ஸ்ரேயாஸ் ஐயரின் இடத்துக்கு இந்திய டெஸ்ட் அணிக்குள் மீண்டும் வந்திருக்கிறார்.

கடந்த ஆண்டின் மத்தியில் நடைபெற்ற 20 ஓவர் வடிவிலான ஆசியக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து மீண்டு வந்த விராட் கோலியின் பேட்டில் இருந்து ஒருநாள் மட்டும் டெஸ்ட் கிரிக்கெட் சதங்கள் வந்ததோடு, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் இரண்டு சதங்கள் வந்திருக்கின்றன. தற்கால கிரிக்கெட்டின் அரசரின் வாள் கூர்மையாக்கப்பட்டு மீண்டும் மின்ன ஆரம்பித்திருக்கிறது.

Virat Kohli

மேல் வரிசையில் ரோஹித் சர்மாவை எடுத்துக் கொண்டால் பேட்டிங்கில் அவர் ஒரு வித்தியாசமான நிலைமையில் இருக்கிறார். அவரது பேட்டிங் ஃபார்ம் என்பது அவருடைய பேட்டிங் அணுகுமுறையில்தான் இருக்கிறது. மற்றபடி அவரது பேட்டிங் தொழிற்நுட்பத்தில் எந்தப் பிரச்சனையும் இருப்பதாகத் தெரியவில்லை.

2021-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் சுற்றுப்பயணத்தில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் மிக அற்புதமானதொரு பேட்டிங் அணுகுமுறையில், இங்கிலாந்தின் ஸ்விங் பந்துவீச்சு தாக்குதலை முறியடித்து இருந்தார்கள்.

Rohit Sharma

நேராகக் கண் பார்வையின் பாதையில் (eye line) இருக்கும் பந்துகளை மட்டுமே பேட் கொண்டு தடுக்கவோ அடிக்கவோ செய்தார்கள். இதையும் முன் காலில் வந்து, பின்பு பந்துக்குத் தகுந்தவாறு விளையாடினார்கள். சந்தித்த ஒவ்வொரு பந்துக்கும் ஒரே அளவில் கவனத்தையும் அணுகுமுறையையும் அமைத்திருந்தார்கள். இதுவொரு பேட்டிங் தவம்.

இறுதியில் கேஎல் ராகுலுக்கு லண்டன் லார்ட்சிலும், ரோஹித் சர்மாவுக்கு கென்னிங்டன் ஓவலிலும் வரமாக வந்தன சதங்கள். இப்பொழுதும் ரோஹித் சர்மாவிடம் தேவை இப்படியொரு பேட்டிங் அணுகுமுறைதானே தவிர பேட்டிங் தொழில்நுட்ப மாற்றம் அல்ல!

இந்தவகையில் பார்த்தால் இந்திய அணியின் பேட்டிங் யூனிட் கடந்த சில ஆண்டுகளை விட இப்பொழுது நன்றாகவே இருக்கிறது.

புஜாரா, விராட் கோலி, ரஹானே பேட்டில் இருந்து ரன் வரும் பொழுது, ரிஷப் பண்ட் பேட்டிங் யூனிட்டில் இல்லாதது பெரிய பிரச்னையாகவே தெரியாது என்பதுதான் உண்மை.

Shami

இந்திய அணியின் பௌலிங் யூனிட்டைப் பொருத்தவரை முகமத் ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ், ஜெயதேவ் உனத்கட், ஷர்துல் தாக்கூர், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல் என்று உலகத் தரத்தில் இருக்கிறது. இந்தியா பட்டத்தை வெல்லுமென்றால் இவர்களே முன்வரிசையில் நின்று சண்டையிட்டு இருப்பார்கள்!

ஆஸ்திரேலிய அணியை எடுத்துக் கொண்டால் வார்னரின் பேட்டிங் ஃபார்ம் மங்கியிருந்தாலும், கடைசி ஆஷஸ் தொடரில் பெற்ற உத்வேகத்தில் உஸ்மான் கவாஜா எந்த அணிக்கும் எந்த நாட்டிலும் ஆபத்தானவராக இருக்கிறார்.

இதற்கு அடுத்து வந்தால் உலகின் நம்பர் – 1, நம்பர் – 2 டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் மார்னஸ் லபுசேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் எதிரணி பந்துவீச்சாளர்களை எப்படியெல்லாம் தண்டிக்கலாம் என்று காத்திருப்பவர்களாக இருக்கிறார்கள்.

Siraj

இவர்களுக்கு அடுத்து அச்சமற்ற டிராவிஸ் ஹெட் பேட்டிங் யூனிட்டின் இரண்டாம் பகுதிக்குத் தலைமை ஏற்கிறார்!

இவர்களோடு அணிக்குக் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக மட்டுமில்லாமல் பெரிய ரன்களையும் கொண்டு வரக்கூடியவர்களாக அலெக்ஸ் கேரி மற்றும் கேமரூன் கிரீன் சத்தமில்லாமல் நிற்கிறார்கள். கீழ் வரிசையில் பந்தோடு பேட்டையும் கிட் பேக்கில் வைத்திருக்கக் கூடிய கேப்டன் பாட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க் கைகோர்க்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவின் பௌலிங் யூனிட்டை பார்த்தால் மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ், ஸ்காட் போலண்ட், மைக்கேல் நேஸர், நாதன் லயன், டாட் மர்பி என்று துல்லிய தாக்குதலுக்கான கூட்டணியாக இருக்கிறது!

“இதுவரை ஓவலில் வானிலை வறண்டு கிடக்கிறது என்று நீங்கள் என்னிடம் சொன்னீர்கள். வானிலை இப்படியே இருந்தால் ஓவல் மைதானம் ஆஸ்திரேலியா மைதானம் போல்தான் இருக்கும்!” என்கின்ற ஆஸ்திரேலியா லெஜன்ட் கிரேக் சேப்பல், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் மிகச் சிறப்பாக செயல்பட்ட விராட் கோலிக்கு இந்தச் சூழ்நிலை சாதகமாக இருக்கும் என்கிறார்.

Smith

அப்படியென்றால் இந்தச் சூழ்நிலை ஆஸ்திரேலிய அணிக்குச் சாதகமாக இருக்காதா? என்ற கேள்வியின் ஊடாகவே, கடந்த இருமுறை ஆஸ்திரேலியாவில் வைத்து இந்திய அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது என்பதும் பதிலாக வருகிறது!

இவர்கள்தான் இந்த இறுதிப்போட்டியில் முன்னணியில் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாத அளவுக்கு அலசல்களின் முடிவில் சாதகங்கள் இரு அணிக்கும் சமநிலையின் அருகிலேயே இருக்கிறது. இதனால்தான் இந்த இருவருமே இறுதிப் போட்டியில் இருக்கிறார்கள்.

Labuschagne

ஒரு மாறுபட்ட சூழ்நிலைக்கு எவ்வளவு வேகத்தில் தகவமைகிறோம்? அதற்கு குறிப்பிட்ட இடத்தில் எவ்வளவு நாட்கள் செலவழித்திருக்கிறோம்? வீரர்களின் உடற்தகுதி எந்த அளவில் இருக்கிறது? எந்த அளவில் வீரர்களின் பணிச்சுமை மேலாண்மை நிர்வகிக்கப்பட்டிருக்கிறது? என்பதுதான் தற்போது இரு அணிகளுக்கும் இடையே வித்தியாசமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் ஆஸ்திரேலியா அணி இந்திய அணியை விட சிறிதளவு முன்னே நிற்கிறது.

ஆனால் உளவியலில் ஏற்படும் மாற்றங்களின் தொகுப்பாக அமையும் கிரிக்கெட்டில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதுதான் நிதர்சனம். இந்திய அணி கோப்பையை வெல்லுமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com