டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், நீலம் பண்பாட்டு மையம் மற்றும் நீலம் மாணவர் இயக்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சென்னை, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன், பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அதில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “நாம் மேற்கொள்ளும் போராட்டம் என்பது வெறும் “நியாயமான நீட் தேர்வுக்காக’ (Fair NEET) இருக்கக் கூடாது. அது ‘நீட் தேர்வை முழுமையாக ஒழிப்பதற்கான’ (Ban NEET) போராட்டமாக மாற வேண்டும்.

இதற்கான முன்னெடுப்புகளை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்த்து, தொடர்ந்து போராட வேண்டும். என் நண்பர்களின் பிள்ளைகளுக்கு ஏற்பட்ட அனுபவங்களை நேரில் பார்க்கும் போது, நீட் தேர்வு மாணவர்களுக்குத் தரும் அழுத்தத்தை என்னால் உணர முடிகிறது. பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1170-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற, பாடங்களை ஆழமாகப் புரிந்து படிக்கக்கூடிய திறமையான மாணவர்களால் கூட முதல் முயற்சியில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடிவதில்லை. இரண்டாவது முறை எழுதியும், அவர்களது பெற்றோரால் கட்டணம் செலுத்தக்கூடிய வகையிலான மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காத சூழலே நிலவுகிறது.