வளையாம்பிகையின் சிசு மரணிக்கயில், நம்மையும் அறியாமல் கண்கள் கசியும்… வேங்கை பொன்னியின் ஆலயத்தில் வஞ்சியம்மா புலி வாய் அகப்பட்ட மானாய்த் தவிக்கையில் , நம்மையும் பதை பதைக்க வைக்கும் உயிரோட்டம் கொண்டது இந்த கோட்டைப்புரத்து வீடு..
விசுவும் அர்ச்சனாவும் சேர்ந்து விட வேண்டுமே என்ற தவிப்பை , இந்தப் புதினத்தைப் படிக்கும் ஒவ்வொருவரின் மனத்தினுள்ளும் ஆழமாய் பதிய வைத்த ஆசியரின் திறமைக்கு “ஒரு சோறு பதம் ” தவிர வேறென்ன உவமை சொல்ல முடியும்?
விஷ்ணு சித்தன் வழியாக உண்மையை அர்ச்சனா அறியும் கட்டத்தில் , நம் மனமும் ரூப சேகர கோட்டைபுறத்தார் ராஜாக்களின் அகால மரண சாபத்துக்கு நியாயம் கற்பிக்கத் துவங்குவது நவீன வகை ஹிப்னாடிசம் அன்றி வேறென்ன??

பெண்களை போகப் பொருளாகவே எண்ணி தம் ஆணாதிக்க வெறியில், ஆணவத்தின் பிடியில் , மிருக இச்சையின் உச்சத்தில் நடத்தப்படும் ” ராஜ பிரசாதம் ” என்னும் அருவருக்கத் தக்க சடங்கின் அரங்கேற்றம் , இதே வகையிலான நிஜங்களின் நிதரிசனத்தை நம் கண் முன் உலவ விடுகிறது . பல நூற்றாண்டுகளாக நிகழ்த்தப்பட்ட இந்த வக்கிரத்தின் தண்டனையாகவே இந்தக் கதையின் முடிவையும் அமைத்திருப்பது சிறப்பு .
கதையின் கடைசி வரி வரைக்கும் மர்மத்தை நீட்டித்து , இவர் தான் நடந்த அத்தனை நிகழ்வுகளுக்கும் சூத்திரதாரி என்று மர்ம முடிச்சு அவிழும் கட்டம் ” அடடே” சொல்ல வைக்கும் ..
ஒரு திகில் கதையின் இலக்கணங்கள் எதையும் மீறாமல் , எந்த எல்லைக்குள்ளும் சிக்காமல் கடந்த காலத்துக்குள்ளும் நிகழ் காலத்துக்குள்ளும் எவ்வித குழப்பமும் இன்றி மாறி மாறி பயணித்து இறுதியில் காரணமின்றி காரியங்கள் இல்லை என உணரவைக்கும் ரோலர் கோஸ்டர் பயணம் இந்தப் புதினம் ..
“எனக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது ..பேசினா புரிஞ்சிக்குவேன் ” என்று பெருமை (?) பேசித் திரியும் நமது ஈராயிரக் குளவிகள் (நம்ம 2k கிட்ஸ் தாங்க) இது போன்ற மர்ம கதைகளைப் படித்து சுவைக்கும் வாய்ப்பை இழந்து விட்டார்களே என்று ஆதங்கப்படும் என்னைப் போன்ற 90 களின் குழந்தைகளுக்கு (ரொம்ப திட்டாதீங்க..இப்போ சொல்லறது நம்ம 90ஸ் கிட்ஸ் பத்தி தாங்க.. ) விகடனின் ” விகடன் ப்ளே ” நிஜமாகவே ஒரு வரப்பிரசாதம் தான் ..
கோட்டைப்புரத்து வீடு… அன்றும் , இன்றும் என்றும் மிரட்டும் திகில் திருவிழா ..
-செல்வ கிருத்திகா கௌரிநாதன்
கலிபோர்னியா