Ind vs Aus | இந்திய சுழலில் சுருண்ட ஆஸ்திரேலிய அணி.. பேட்டிங்கில் அசத்திய ரோஹித் சர்மா

Share

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் மோதும் நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக கே.எஸ்.பரத் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களது அறிமுக போட்டியில் விளையாடி வருவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து முதலில் ஆட்டத்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் மார்னஸும், ஸ்டீவன் ஸ்மித்தும் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். எனினும், மார்னஸ் 49 ரன்களிலும், பின்னர் வந்த மட் ரென்ஷா, ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். மேலும், ஸ்டீவன் ஸ்மித், 37 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அலெக்ஸ் கேரி 36 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பினர். இதனால், அந்த அணி 177 ரன்களில் முதல் இன்னிங்சை இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களையும், ரவிசந்திரன் அஸ்வின் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இதை தொடர்ந்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த இந்த ஜோடி முதல் நாள் முடியும் நேரத்தில் கே.எல்.ராகுல் 20 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் நைட் வாட்ச்மேனாக ரவிசந்திரன் அஸ்வின் களமிறங்கினார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்துள்ளது. கேப்டன் ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்த நிலையில் களத்தில் உள்ளார்.

இந்திய அணி 100 ரன்கள் பின்தங்கி உள்ள நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் ஆஸ்திரேலிய அணியை விட அதிக ரன்களை முன்னிலை வகிக்க வாய்ப்புள்ளது. ரவிந்திர ஜடேஜா 5 மாதங்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பிய நிலையில் 5 விக்கெட்களை வீழ்த்தி ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளார்.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com