CSK Vs MI: மும்பையை எலிமினேட் செய்த சென்னை! – சேப்பாக்க சம்பவத்தில் என்னென்ன நடந்தன?

Share

நடப்பு சீசனில் மொத்தமே நான்கு வெற்றிகளை சிஎஸ்கே பதிவேற்றியுள்ளது, அதில் இரண்டு மும்பைக்கு எதிராக வந்தது என்பதுதான் கவனிக்கத்தக்கது…

“உடைத்த உண்டியலில் கிடைத்தது வரை லாபம்” என மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக ஆடினாலே இரு புள்ளிகள் உறுதி என்ற மனப்போக்கோடுதான் பல அணிகளும் அவர்களை எதிர்கொள்கின்றனர்.

ஏனெனில் மும்பை தனது அவுட்டேடெட் வெர்ஷனோடுதான் இந்த சீசன் முழுவதுமே ஆடிவருகிறது. “மும்பை எக்ஸ்பிரஸா அல்லது மும்பை சர்க்கஸா?” எனுமளவு பிளேயிங் லெவனை இறுதி செய்வது தொடங்கி, கேம் பிளான் வரை முதலில் மட்டுமல்ல முற்றிலுமே கோணல்தான். மும்பையின் பேட்டிங்கும் அதையேதான் உணர்த்தியது.

CSK vs MI Match
CSK vs MI Match

ஐபிஎல்லில் தொடர்ச்சியாகப் போடப்பட்டு வந்த ஹைவே போல சேப்பாக்கம் பிட்ச் களம் இப்போட்டியில் இல்லை. டாஸின் போது பாண்டியா கடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக இந்தியா இந்தக் களத்தில் ஆடியிருந்ததை நினைவு கூர்ந்து பேசியிருந்தார்.

அதேபோல் இந்தப் போட்டியிலும் பேட்டிங்கிற்கு களம் கைகொடுக்கும் என்பது அவரது கருத்து. ஏறக்குறைய கெய்க்வாட்டும் அதையேதான் கூறியிருந்தார். ஆனால் களம் முற்றிலுமாக பேட்டிங்கிற்கு மட்டுமே கைகொடுப்பதாக இல்லை.

`Two Paced Pitch’ ஆக பேட்ஸ்மேனுக்கு சற்றே சவால்விடும்படிமாகவும் தான் இருந்தது. குறிப்பாக பந்தின் வேகம் ஊகித்தறிய முடியாதபடி அவ்வப்போது ஆச்சரியங்களைத் தாங்கி வந்தது.

சிஎஸ்கே பௌலிங் படை அந்தச் சூழலைச் சரியாகவே கையாண்டிருந்ததுதான் ஆச்சரியம். காரணம், பெரும்பாலும் Uncapped பிளேயர்களின் அணிவகுப்பே அது. இருந்தபோதிலும் மும்பைக்குச் சிறப்பாகவே நெருக்கடி கொடுத்தனர் சிஎஸ்கே பௌலர்கள்.

முதல் ஆறு ஓவர்களில் ஏழு சிக்ஸர்களை மும்பை அடித்திருந்தது. ராமக்கிருஷ்ணா கோஷின் அற்புத கேட்சினால் வில் ஜாக்ஸ் விரைவிலேயே வெளியேற்றப்பட்டதைத் தவிர பெரியளவில் எதுவும் சிஎஸ்கேவிற்கு சாதகமாக பவர்பிளேயில் நடந்து விடவில்லை. அதன் பிறகு 11-வது ஓவர் வரை கூட ஓவருக்கொரு பவுண்டரி தவறாமல் வந்து சேர்ந்து ரன்ரேட் சரிவை தவிர்த்தன.

எனினும் இந்தக்கட்டத்தில் விழுந்த ரிக்கல்டன் மற்றும் சூர்யாவின் விக்கெட்டுகள்தான் போட்டியின் போக்கை மாற்றி அமைத்து மும்பையை டிஃபென்ஸ் மோடுக்கு எடுத்துச் சென்று விட்டது. “The Best Defence Is Offence” என்பார்கள். மும்பையில் இதற்கு செயல் வடிவம் கொடுக்கும்படி பெரிதாக யாரும் இல்லை என்பதுதான் பிரச்னை.

நமன் தீர் மட்டுமே ஒரே ஆளாகப் போராடி அரைசதம் கடந்து ரன்ரேட்டைப் பாதுகாத்திருந்தார். மற்றபடி இந்த சீசனில் குஜராத்திற்கு எதிராக அவர் பதிவேற்றிய அதிவேக சதத்தைக் கழித்துப் பார்ததால் திலக் வர்மா திக்கற்ற வர்மாவாகி விட்டாரோ என்ற கவலை மேம்படுகிறது. அதைவிடவும் கவலையளிக்கிறது பாண்டியாவின் ஃபார்ம்.

CSK vs MI Match
CSK vs MI Match

தனியொரு வீரராக, ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவிற்கு உள்ளிருந்த வேட்கை தணிந்து விட்டதோ என்றே தோன்ற வைக்கிறது களத்தில் அவரது செயல்பாடுகள். 2024 உலகக்கோப்பையில் நாம் பார்த்த பாண்டியா இவர் இல்லை என்பது மட்டும் உறுதி.

இந்தப் போட்டியில் பந்துகளைச் சந்திக்கவே தடுமாறியதை கவனிக்க முடிந்தது. 78.3 என்ற ஸ்ட்ரைக்ரேட்டினை அவரைப் பொறுத்தவரை அபாயக் குறியீடாகவே பார்க்க முடிகிறது. இரு டி20 உலகக்கோப்பை வெற்றிகளுக்கு நடுவேயும் அவர் நிரம்பவே மாறிவிட்டார் என்றாலும் நடப்பு ஐபிஎல் அவரது பலவீனங்களை எல்லாம் சிவப்புக் கோடிட்டுக் காட்டுகிறது.

பும்ரா, சூர்யா மற்றும் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டங்களில் ஏற்பட்டுள்ள இந்தத் தேக்கநிலையை இந்தியாவைப் பொறுத்தவரை `Personal Loss’ என்போமே அப்படித்தான் பார்க்க வேண்டியுள்ளது. `Get Well Soon Guys’ என்பதே இந்திய ரசிகர்களின் எண்ண ஓட்டமும்.

மும்பையிடம் ஆட்டத்திற்கான ஒரு திட்டமிடலே இல்லை என்பதனைதான் மிக தெளிவாகவே மத்திய ஓவர்களும் டெத் ஓவர்களும் நிருபித்தன. 12 ஓவர்களிலேயே 106 ரன்களை எட்டி விட்ட மும்பை அடுத்த எட்டு ஓவர்களில் வெறும் 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

மும்பையை ரன் எடுக்க விடாமல் தடுப்பதற்கான சுவர் சிஎஸ்கே பௌலிங்கால் கட்டமைக்கப்பட்டதை விட மும்பையின் அணுகுமுறையால் ஏற்படுத்தப்பட்டது எனச் சொல்லலாம். பந்துகள் களத்தின் இயல்பால் அனுமானிக்க முடியாததாக வந்தன, சிஎஸ்கே பௌலர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றாலும் மும்பை பேட்ஸ்மேன்களும் மொத்தமாகவே சரணடைந்து விட்டார்கள் என்பதே நிஜம்.

மொத்தம் 42 டாட் பால்கள் மும்பை இன்னிங்க்ஸில் இடம்பெற்றிருந்தன. பெரிய ஷாட்டுக்கு போவது வேண்டுமெனில் கடினமானதாக இருந்திருக்கலாம். இந்த டாட் பால்களை ஒன்றாகவும் இரண்டாகவும் மாற்றி இருந்தாலே 200+ ரன்களை மும்பை இலகுவாக சிஎஸ்கேவுக்கான இலக்காக ஆக்கியிருக்கலாம். ஏன் இப்படியொரு அணுகுமுறையைக் கூட அவர்கள் கையிலெடுக்கவில்லை என்பதுதான் விசித்திரம்.

CSK vs MI Match
CSK vs MI Match

மும்பை 42 டாட் பால்களால் தவறு இழைத்திருந்தது என்றால் சிஎஸ்கே வெறும் 5 உதிரிகளை மட்டுமே கொடுத்திருந்தது. பிரசாந்த் வீர் தவிர்த்து மற்ற எல்லோருமே குறைவான எக்கானமியோடே முடித்திருந்தனர்.

குறிப்பாக விக்கெட் எண்ணிக்கையில் புவ்னேஷ்வர் குமாரை சமன் செய்திருந்த அன்சுல் கம்போஜ் நடப்பு சீசனில் சிஎஸ்கேவிற்கு கிடைத்துள்ள பொக்கிஷம். 3/32 என்ற சிறப்பான அவரது பந்துவீச்சு மும்பையை 159-க்குள் சுருட்ட உதவியிருந்தது.

ரிக்கல்டன் மற்றும் திலக் வர்மாவின் விக்கெட்டுகளை வீழ்த்தியதன் வாயிலாக நூர் அஹம்மதும் அதே அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். கோஷ் மற்றும் சர்ஃப்ராஸ் கான் பிடித்த அந்த இரு கேட்ச்களும் ரெய்னா, டூ ப்ளஸ்ஸிஸ், ஜடேஜா என சிஎஸ்கேவோடு முன்பாக பயணித்த ஒப்பற்ற ஃபீல்டர்களை எல்லாம் நினைவூட்டினாலும் ஷிவம் துபேயின் கேட்ச் டிராப் நம்மை நிகழுலகில் கொண்டு வந்து நிறுத்துகிறது.

160 என்பது மிக எளிதான இலக்கு என்பதால் அதிவிரைவாக சிஎஸ்கே இதனை எட்டி மொத்த ரன்ரேட்டில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நினைத்தது போல் மும்பை பந்துவீச்சால் அதனை தாமதப்படுத்த முடிந்ததே தவிர தடுத்து நிறுத்த முடியவில்லை. சஞ்சு சாம்சனை இரண்டாவது ஓவரின் இறுதியிலேயே பும்ரா வெளியேற்றியது, பும்ரா மற்றும் அறிமுக வீரர் ரகு ஷர்மா ஆகியோரின் எக்கானமி ஆகியவை மட்டுமே மும்பை பௌலிங் தரப்பிலான ஹைலைட்.

சிஎஸ்கே இன்னிங்ஸிலும் 32 டாட் பால்கள் இருந்தன. ஆனாலும்கூட மும்பை செய்த முக்கிய தவறினை சிஎஸ்கே முடிந்தளவு தவிர்த்திருந்தது. களம் முழுவதுமாக பேட்டிங்கிற்கு மட்டுமே கை கொடுக்கவில்லை என்பதால் விக்கெட்டுகளை விட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

வாய்ப்புக் கிடைத்த போது பந்தை எல்லை தாண்ட வைத்தனர், இல்லையென்றாலும் ரன்கள் ஒன்றோ ரெண்டோ வருவதை உறுதி செய்து கொண்டே இருந்தனர்.

கார்திக் ஷர்மா
கார்திக் ஷர்மா

கெய்க்வாட் – கார்திக் ஷர்மா இணையின் பேட்டிங் அந்தக் கோட்பாடுக்குள் பொருந்தி `ரிஸ்க் ஃப்ரீ’ கிரிக்கெட்டையே ஆடியிருந்தது. அதுவே போதுமானதாகவும் இருந்தது. நாளின் முடிவின் இரு புள்ளிகள் தானே பேசும்!? 75 பந்துகளில் 98 ரன்களைச் சேர்த்த இந்த இணை 11 பந்துகள் மீதமுள்ள போதே இலக்கினை எட்டியது.

கடந்த சீசனில் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்திலிருந்த மும்பை நடப்பு சீசனில் தனது ப்ளே ஆஃப் கனவுக்கு இந்தத் தோல்வியின் வாயிலாக ஏறத்தாழ மூடுவிழா எடுத்துள்ளது.

சமீப காலமாகவே இந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் சிஎஸ்கேவின் கையே ஓங்கி இருக்கிறது. `El Clasico’ என்பதெல்லாம் பிராவோ – பொல்லார்ட் காலத்தோடு முடிவுக்கு வந்துவிட்டது. அந்த ஹை வோல்டேஜ் நாட்களை ரசிகர்கள் மிஸ் செய்திருக்கிறார்கள் என்பதே நிதர்சனம்…..

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com