இரண்டாம் பாதியில்தான் சென்னை அணியின் ஆட்டமே ஆரம்பித்தது. மைதானத்தின் மின்விளக்குகளில் பிரச்னை ஏற்பட ஆட்டம் சில நிமிடங்கள் தடைப்பட்டது. இந்த சில நிமிட இடைவேளைக்குப் பிறகுதான் சென்னை அணி இரண்டு கோல்களையும் அடித்தது. 59வது நிமிடத்தில் ஃபாலோவுக்கு பதிலாக சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்தார். அவர் உள்ளே வந்த அடுத்த சில நிமிடங்களிலேயே சென்னை அணி Equaliser-ஐ அடித்துவிட்டது.
இதே கரிகரிதான் இன்னொரு கோலுக்கும் அசிஸ்ட் செய்து கொடுத்தார். 83வது நிமிடத்தில் கரிகரி ரைட் ஃப்ளாங்கிலிருந்து கட் செய்து லாகவமாக ரஹீம் அலிக்கு பாஸ் செய்ய ரஹீம் அதைக் கச்சிதமாகக் கோலாக்கியிருந்தார். 2-1 என சென்னை அணி முன்னிலை பெற்றது. கடைசி வரை ATK-வால் ஈக்குவலைசரை அடிக்க முடியவில்லை. ஆட்டம் 2-1 என்றே முடிந்தது. சென்னை அணி வென்றது.
இரண்டாம் பாதியில் சப்ஸ்டிடியூட்டாக கரிகரி உள்ளே வந்து ஆடிய அந்த 31 நிமிடங்கள்தான் சென்னை அணிக்குத் திருப்புமுனையாக அமைந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் ATK ஆதிக்கம் செலுத்திய போதே கோல்களை கன்வர்ட் செய்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறியதன் விளைவே ATK-வின் தோல்வி. சென்னை அணியுமே தொடக்கத்தில் டிஃபன்ஸில் கொஞ்சம் சுணக்கமாகவே இருந்தனர். அடுத்தடுத்தப் போட்டிகளில் அதைச் சரி செய்ய வேண்டும். மேலும், முதல் போட்டியில் பெற்றிருக்கும் வெற்றியையும் சென்னை அணி தொடர வேண்டும்.