ஓடும் விதிகளைப் பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் 45 நிமிடம் ஓடும் பயிற்சி இருக்கும். ஆனால், ரன்னிங் குழுவில் இருந்த அனைத்து நபர்களாலும் 45 நிமிடம் வரை ஓட இயலவில்லை. அதே போல ஓடுவதில் அவர்கள் காட்டும் முனைப்பும் குறைவாகவே இருந்தது.
ஆனால், மருந்துகளை எடுத்துக் கொள்ளும் குழுவில் இருந்த நபர்களில் பெரும்பாலானோர் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக்கொண்டனர். இவர்களுக்கு மூளையில் செரட்டோனின் அளவை அதிகரிக்கப் பயன்படுத்தப்படும் escitalopram என்ற மருந்து கொடுக்கப்பட்டது.
இந்த இரண்டு குழுக்களிலுமே 44 சதவிகித பங்கேற்பாளர்கள் மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகிய அறிகுறிகளில் இருந்து மீளும் முன்னேற்றங்களைக் கண்டனர்.
ஆனால், மனஅழுத்தத்தைக் குறைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்ட குழுவோடு ஒப்பிடுகையில், ரன்னிங் தெரபியை எடுத்துக் கொண்ட குழு மனதளவில் மட்டுமல்லாமல் உடலளவிலும் முன்னேறி இருந்தது. இவர்களின் எடை, ரத்த அழுத்தம், இதய செயல்பாடு அனைத்தும் சீராக இருந்தன.
இந்த ஆய்வு முடிவு குறித்து, ஆராய்ச்சியாளர் பிரெண்டா பென்னிக்ஸ் கூறுகையில், “ஒரு சிகிச்சையாக உடற்பயிற்சி செய்வதில் பலர் ஆர்வமாக உள்ளனர். ஆனால் குறிப்பிடத்தக்க நன்மைகள் அதில் இருந்தபோதிலும் தொடர்ச்சியாக அதனைச் செய்வது சவாலாக இருக்கிறது. பதற்றம் மற்றும் மனச்சோர்வைக் கொண்ட நபர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளில் தங்களுக்குத் தேவையான சிகிச்சையைத் நோயாளிகள் தேர்வு செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது’’ என்றார்.
மருந்தா, உடற்பயிற்சியா இந்த இரண்டில் எது உங்களின் தேர்வாக இருக்கும்?!