சருமப் பொலிவு: வெளிப்பூச்சுகள் தற்காலிகம்தான், உள்ளிருந்து ஊட்டம் பெறவைக்கும் இந்த உணவுகள்!

Share

சருமப் பொலிவு என்பது வெளிப்பூச்சு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. சொல்லப்போனால் உள்ளே உட்கொள்ளும் உணவுகளால்தான் உண்மையான, நீடித்த சரும ஆரோக்கியத்தை பெற முடியும். அதற்கு என்ன வகையான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம், எவற்றையெல்லாம் செய்யக் கூடாது என்பது குறித்து விளக்குகிறார், உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ…

உணவியல் நிபுணர் விஜயஸ்ரீ

சத்துகள் இல்லாத பதப்படுத்தப்பட்ட உணவு

“இன்று பலரும் 30% மட்டுமே ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்கிறோம். உடலுக்குத் தேவையானதைவிட குறைந்த அளவே கொழுப்புச்சத்தும் ஊட்டச்சத்துகளும் கிடைக்கின்றன. சமைக்கும்போது வெளியேறும் ஊட்டச்சத்துகளைவிட, பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (Processed food) உள்ள ஊட்டச்சத்து முற்றிலுமாக வீணாகிவிடுகிறது.

நல்ல கொழுப்பு, விட்டமின் சி, இ போன்றவை சரும ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமானவை. முட்டைக்கரு, வேர்க்கடலை போன்றவற்றில் நல்ல கொழுப்பு இருக்கும். குறிப்பாக விட்டமின் டி, இ இவற்றில் நிறைந்துள்ளன.

ஹெல்தி டயட்

சைவம் சாப்பிட்டால் சத்து கிடைக்காதா?

உடலின் மிகப்பெரிய உறுப்பான தோலுக்கு, அதிகமான புரதச்சத்து தேவைப்படுகிறது. புரதச்சத்து பற்றாக்குறை ஏற்படும்போது சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு சருமம் வறண்டு போகலாம். இதனால் செல்கள் இறக்க நேரிட்டு, பிற்காலத்தில் சருமப் பிரச்னைகள், சருமத்தில் காயங்கள் ஏற்பட்டாலும் உடலால் எளிமையாக சீரமைத்துக்கொள்ள முடியாது.

அசைவ உணவுகளில் உள்ள சத்துகள், சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்குக் கிடைப்பதில்லை என்று கூறுவதுண்டு. ஆனால், இரண்டிலுமே நம் உடலுக்குத் தேவையான சத்துகள் உள்ளன. அது நாம் எடுத்துக்கொள்ளும் அளவைப் பொறுத்து மாறுபடும்.

ஆன்டி- ஆக்ஸிடன்ட்ஸ், இயற்கையாகவே பளபளப்பான நிறமுள்ள பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் மிகுதியாகக் காணப்படுகிறது. உடல் ஆரோக்கியமாகவும், சருமம் பளபளப்பாகவும் இருப்பதற்கு இவற்றை உட்கொள்ளலாம். மாதுளை, பப்பாளி, எலுமிச்சை, ஸ்ட்ராபெரி போன்ற பழங்களில் இது நிறைந்துள்ளது. தினமும் கேரட், பீட்ரூட் சாப்பிட்டு வர சருமம் பொலிவுடன் காணப்படும்.

எடைக்குறைப்பு

எடை குறைந்தால் மட்டும் போதுமா?

டயட் எனக் கூறிக்கொண்டு, பலர் உடல் எடையைக் குறைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கண்டுகொள்வதில்லை. இதனால், உடல் எடை மட்டும்தான் குறையுமே தவிர, உடலுக்கு சத்து கிடைக்காது. ஆனால், அனைத்து டயட் பிளான்களிலும், உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துள்ள உணவுகள் உள்ளன. டயட்டில் இருப்பதில் நல்லது; என்ன வகையான உணவுகள் எடுத்துக்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். உடல் எடையைக் குறைப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், உட்கொள்ளும் உணவிலும் கவனம் செலுத்த வேண்டும்.

எடுத்துக்காட்டாக, முட்டையில் விட்டமின் சி தவிர, பிற அனைத்து ஊட்டச்சத்துகளும் காணப்படுகின்றன. முட்டை சாப்பிடாதவர்களுக்கு சோயா பீன்ஸ், பனீர், டோஃபு, சோயா பால் ஆகியவற்றில் முட்டைக்குச் சமமான ஊட்டச்சத்துகள் கிடைக்கும். முட்டைக்குப் பதிலாக மாற்று உணவாக சோயாவை எடுத்துக்கொள்ளலாம். முளைக்கட்டிய பயறு வகைகள், பருப்பு வகை உணவுகள் எடுத்துக்கொள்வதால் உடலுக்குத் தேவையான புரதச்சத்துகள் கிடைத்துவிடும்.

WHO – உலக சுகாதார நிறுவனம்

ஒருநாளில் நாம் சராசரியாக எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகளின் அளவை, உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய மருத்துவ ஆய்வு மன்றம் (ICMR) வெளியிட்டுள்ளன. ஒரு சராசரி மனிதன் ஒரு நாளில் 1,800 கலோரிகள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் 60% தானியங்கள், பருப்பு வகைகள், அரிசி மற்றும் கோதுமையிலிருந்தும், 20% புரதச் சத்திலிருந்தும், மீதமுள்ள 20% நல்ல கொழுப்புச்சத்தில் இருந்தும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வரையறுத்துள்ளனர். ஒருவர் பொதுவாக ஒருநாளில் 400 முதல் 500 கிராம் அளவுக்கு காய் மற்றும் பழங்கள் உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை… இவர்கள் தவிர்க்கவும்!

உணவு உட்கொள்ளும் நேரம், மற்றும் காலை உணவு என்பது மிகவும் முக்கியம். பலர் காலை உணவு எடுத்துக்கொள்ள மறந்து/ மறுத்துவிடுகின்றனர். ஆனால் நள்ளிரவில் `3 மணி பிரியாணி’ சாப்பிட்டு வீடியோ போடுகின்றனர். எந்நேரம், எதைச் சாப்பிட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஓர் உணவு எடுத்துக் கொள்வதற்கும் அடுத்த வேளை உணவு எடுத்துக்கொள்வதற்கும் இடையே சரியான கால இடைவெளி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. PCOD, இதய பாதிப்புகள், உடல் எடை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சர்க்கரையைத் தவிர்ப்பது நல்லது.

மேக் – அப் | மாதிரிப்படம்

முகப்பொலிவுக்கு…

தினமும் முகத்துக்கு க்ரீம் போடுவதில் செலுத்தும் கவனத்தை, தினமும் காய்கறிகள் சாப்பிடுவதில் செலுத்த வேண்டும். வெயிலில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி, தேன் அல்லது எலும்பிச்சை சாற்றுடன் பால் கலந்து முகத்தில் தடவிக்கொண்டு, 10 நிமிடத்துக்குப் பின் முகம் கழுவலாம். கருமை நீங்கும்.

சருமம், கேசத்துக்கான உணவுகள்…

சைவம் மட்டுமே சாப்பிடுபவர்கள் என்றால் தயிர், பாதாம், வால்நட், சோயா, பட்டாணி, பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளலாம். Vegan உணவு முறை என்றால் தேங்காய்ப் பால், சோயா பால்; அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பின் முட்டை, முட்டையின் கரு, மீன் வகைகள், கடல் மீன்களை எடுத்துக் கொள்ளலாம்.

அதே நேரம் எந்த வகை உணவு எடுத்துக்கொள்வோரும், பழங்கள் சாப்பிடுவது மிகவும் முக்கியமாகும். காய்கள் மற்றும் பழங்களில்தான் அதிக அளவு உடல் மற்றும் சருமத்துக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் இருக்கின்றன.

Diet

தொடர்ந்து ஜூஸ் குடித்து வருவதால் ஓரிரு மாதங்களில் முகப்பொலிவை பெறலாம். வாழைப்பழத்துடன், வால்நட் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து மில்க் ஷேக் போல் செய்து வாரத்தில் மூன்று நாள்கள் குடித்து வர… சருமத்துக்குப் பொலிவும், கேசத்துக்கு ஊட்டமும் கிடைக்கும். கீரையில் அதிகமாக இரும்புச்சத்து இருப்பதால், வாரத்தில் மூன்று நாள்கள் சாப்பிட்டு வர, ஹீமோகுளோபின் அதிகரிக்கும்.

ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் உடல் நலனுக்கு மட்டுமல்ல… சரும ஆரோக்கியத்துக்கும்தான்!

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com