உலக டெஸ்ட் சாம்பியனுக்கான போட்டியில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது. இதில் வெற்றி பெற்று இந்திய அணி புதிய வரலாறை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். இதில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 280 ரன்களும், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன. 444 ரன்களை இலக்காக கொண்டு விளையாடி வரும் இந்திய அணி நேற்றைய 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7 ஆம்தேதி புதன் அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த மேட்ச்சின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 469 ரன்களும், இந்திய அணி 296 ரன்களும் எடுத்தது. 2 ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடி வருகின்றனர். டெஸ்ட் போட்டி வரலாற்றில் இந்த ரன்னை எந்த அணியும் வெற்றிகரமாக சேஸிங் செய்தது கிடையாது. இந்நிலையில் மிக முக்கியமான ஆட்டத்தில் வரலாற்று சாதனையை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடுகின்றனர். தொடக்க வீரர்களாக களம் இறங்கிய சுப்மன் கில் 19 பந்துகளில் 18 ரன்கள் எடுத்திருந்தபோது சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆகவில்லை என்று ரீப்ளேயில் தெளிவாக தெரிந்த பின்னரும் நடுவர் எதற்காக அவுட் கொடுத்தார் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.
மற்றொரு தொடக்க வீரரான கேப்டன் ரோஹித் சர்மா 60 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து லயோன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா 47 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதையும் படிங்க – WTC Final : சர்ச்சையை ஏற்படுத்திய சுப்மன் கில் விக்கெட்… ரசிகர்கள் கடும் அதிருப்தி
அணி 3 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்திருந்த போது கோலியும், ரஹானேவும் இணைந்தனர். ரஹானே மெதுவாக ரன்களை சேர்க்க கோலி ஒன்டே மேட்ச் போல ரன்களை குவித்தார். இருவரும் 4 ஆவது விக்கெட்டிற்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தபோது நேற்றைய 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இன்று கடைசி நாள் ஆட்டத்தில் அதிகபட்சாக 90 ஓவர்கள் வீச முடியும். இதில் இந்திய அணியின் வெற்றிக்கு 280 ரன்களும், ஆஸ்திரேலியா வெற்றி பெற 7 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் எந்த அணியும் 444 ரன்களை வெற்றிகரமாக சேஸிங் செய்தது கிடையாது. அந்த வகையில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி இன்னும் 280 ரன்களை சேர்த்து வரலாற்று சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.