தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை என தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மரக்காணம் தாலுக்காவில் உள்ள அரசு புறம்போக்கு நிலம் மற்றும் தனியார் பட்டா நிலங்களில் பல்வேறு கனிமவளங்கள் உள்ளதாகவும்அதில், நல்முக்கல் மற்றும் கீழ் அரங்குணம் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள கனிம வளங்களை மாவட்ட நிர்வாகம் 5 முதல் 10 ஆண்டுகள் ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு குத்தகைக்கு விட்டுள்ளதாக கூறியுள்ளார்.
2019ம் ஆண்டிலேயே நல்முக்கல் கிராமத்தில் குத்தகை காலம் முடிந்தும், பொதுமக்கள் உயிருக்கு ஆபத்தான வெடிப்பொருட்களை உபயோகித்து பாறைகளை உடைத்து சட்டவிரோதமாக கனிம வளங்களை எடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
சுற்றுச்சூழல் துறை அனுமதி இல்லாமல் இயங்கும் குவாரிகளால் அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் நிலையில் இதுகுறித்து அரசுக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார். அதனால், குத்தகை காலம் முடிந்து சட்டவிரோதமாக இயங்கி வரும் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அரசு பீளிடர் முத்துகுமார் ஆஜராகி, தமிழகத்தில் சட்டவிரோத கனிமவள குவாரிகள் எதுவும் செயல்படவில்லை எனவும் அவ்வாறு சட்டவிரோதமாக செயல்பட்ட குவாரிகள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து, அரசு விளக்கத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.