சஃபினா நமுக்வயா (Safina Namukwaya) என்ற பெண்ணுக்கு 70 வயதாகிறது. இவருக்கு உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் உள்ள கருத்தரிப்பு மையத்தில் IVF சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கருத்தரிப்பு மையத்தில் சிசேரியன் மூலம் ஓர் ஆண் மற்றும் பெண் குழந்தையை புதன்கிழமையன்று பெற்றெடுத்தார். இவருக்கு 2020-ல் பெண் குழந்தை பிறந்தது. இது இவரின் இரண்டாவது பிரசவம்.
பொதுவாகப் பெண்களுக்கு 45 முதல் 55 வயதுக்குள் மாதவிடாய் நின்றுவிடும். இந்த நேரத்தில் கருவுறுதலுக்கான வாய்ப்புகள் குறைகிறது; ஆனால் மருத்துவத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் வயதான காலத்திலும் குழந்தை பிறப்பதைச் சாத்தியமாக்கியுள்ளது.
அந்த வகையில் செயற்கைமுறை கருத்தரித்தல் (IVF) முறையில் ஒரு பெண்ணின் கருப்பையில் இருந்து கருமுட்டை எடுக்கப்பட்டு, ஆய்வகத்தில் விந்தணுவுடன் சேர்த்துக் கருத்தரிக்கப்படுகிறது. கருவுற்ற முட்டை பின்னர் பெண்ணின் வயிற்றில் வைக்கப்பட்டு வளர்ச்சியடைகிறது.
மேற்குறிப்பிட்ட உகாண்டா பெண், சிறுவயதில் சேமித்து உறையவைக்கப்பட்ட தனது கரு முட்டையைப் பயன்படுத்தியிருக்கிறாரா அல்லது கருமுட்டை தானம் மூலம் முட்டையைப் பயன்படுத்தி இருக்கிறாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
70 வயதில் பெண் ஒருவர் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற சம்பவம் பலரிடையே கவனம் பெற்று வருகிறது.