முதல்வரின் திறமையான செயல்பாடுகளால் தமிழகம் சிறந்த மாநிலமாக உள்ளது: துரைமுருகன் பேச்சு

Share

அம்பத்தூர்: பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், வில்லிவாக்கம் பேருந்து நிலையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. வில்லிவாக்கம் மேற்கு பகுதி செயலாளர் மற்றும் 8வது  மண்டல குழு தலைவர் கூ.பி.ஜெயின் தலைமை வகித்தார். திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், அமைச்சர் சேகர்பாபு, ஜெகத்ரட்சகன் எம்பி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், ஜெகத்ரட்சகன் எம்பி பேசுகையில், ‘‘திமுகவினர் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என சிலர் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சியில் இதுவரை 5000 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு உள்ளது. மத்தியில் 10 வருடம் ஆட்சியில் உள்ள பாஜ எத்தனை கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளது. திராவிட மாடல் ஆட்சி என்பது அனைவருக்கும் சமமான ஆட்சி,’’ என்றார். அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், ‘‘இந்து சமய அறநிலையத்துறையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் செய்யாத பல செயல்களை கடந்த ஒன்றரை ஆண்டுகளில் அமைச்சர் சேகர்பாபு செய்துள்ளார். அதுமட்டுமின்றி பல்வேறு கோயிலுக்கு சொந்தமான பல்வேறு சொத்துக்களை மீட்டுள்ளார். அறநிலையத்துறை நமக்கு எதிரான துறை இல்லை. பெரிய பெரிய ஆட்கள், ஒரு சில சமூகத்தினர் கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். இப்போதும் சிதம்பரம் கோயில் எங்களுக்கு தான் சொந்தம் என்கிறார்கள்.

எடுத்துக்கொண்ட பொறுப்பை சேகர்பாபு சிறப்பாக செய்கிறார். திமுக பலமாக இருக்க காரணம் இருப்பவர்களையும், இறந்தவர்களையும் பாராட்டுவது தான். உழைத்தவனை, சிறைக்கு சென்றவனை, சித்ரவதை அனுப்பவித்தவனை பாராட்டும் குணம் திமுகவிற்கு உண்டு. இப்படி திமுக விதை ஊன்றப்பட்ட போதே அதனுடன் ஊன்றியவர் பேராசிரியர் அன்பழகன். திராவிட இயக்கத்தின் வரலாறு பற்றி தெரியாமல் இருக்கலாம் ஆனால் அறியாமல் இருக்கக்கூடாது.
இந்த கூட்டத்தின் நோக்கம் என்பது திராவிடத்தின் வரலாற்றை இளைஞருக்கு தெரியபடுத்துவதே. தமிழன் தமிழ்நாட்டில் மேடையில் தமிழில் பாடுவதை இழுக்கு என்று கருதுகிறான். சட்டசபை கூடுதே என்று அதிமுக நிர்வாகி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவரோ அட ஏனே நாங்க எங்க உட்காறதுனே தெரியல.

இரண்டு நாளில் சட்டசபையை முடிச்சுருங்க, என்கிறார். ஒன்றரை ஆண்டுகளில் சிறப்பான செயல்களை வைத்து தான் இந்தியாவில் சிறந்த முதல்வராக நமது தலைவரும், சிறந்த மாநிலமாக தமிழ்நாடும் உள்ளது. மழைக்காலங்களில் முதல்வரின் தலைமையில் சிறப்பாக அரசு செயல்பட்டத்தால் இந்த முறை சென்னையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கவில்லை. இன்னும் வரக்கூடிய காலங்களில் மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொண்டு சென்னையில் எங்கும் மழைநீர் தெங்காமல் இருக்கும். எனவே அடுத்த ஆண்டு மழையைப்பற்றி பொதுமக்கள் கவலைப்படாமல் இருக்கலாம். இருக்கும் காலம் வரை திமுக கழகத்திற்கு உழைப்பேன், என் தலைவன் கலைஞர், என் கட்சி திமுக,’’ என்றார்.

Source link

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com