கடந்த 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று, உலகம் முழுவதும் பரவி கடும் உயிர்ச்சேதம், பொருளாதார இழப்புகளை கொடுத்தது. இந்தியாவையும் விட்டுவைக்காத இந்தத் தொற்று, பல லட்சம் உயிர்களை பலி கொண்டது. அரசின் தொடர் முயற்சி, சிகிச்சைகள், தடுப்பூசிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால், கொரோனா பரவல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்த நிலையில், தற்போது சீனாவில் திரும்பவும் கொரோனோ தொற்று வேகமாகப் பரவத் தொடங்கி இருக்கிறது.
சீனாவில் உள்ள மருத்துவமனைகள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களால் நிரம்பி வருகின்றன. மறுபுறம், உலகம் முழுவதும் கொரோனாவின் புதிய வேரியன்ட்டுகளின் பரவலை தடுக்க, பல நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்திய அரசும் ஆலோசனை நடத்தி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கடந்த வியாழக்கிமை அன்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர், கொரோனா நோய் தடுப்பு தொடர்பாக முக்கிய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினர். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று பிரதமர் நரேந்திர மோடி மக்களைக் கேட்டு கொண்டிருக்கிறார்.
இதனிடையே, இந்தியாவில் டிசம்பர் 24-ம் தேதிக்கு பின்னர், அனைத்து விமான நிலையங்களில் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விமானங்களில் பயணம் செய்வோருக்கான பல கட்டுப்பாடுகளை அரசு வெளியிட்டுள்ளது.