பத்து முதல் பதினெட்டு வயது வரை:
பதின்ம வயதில் குழந்தைகளின் உடல், தசை, எலும்பு வளர்ச்சி வேகமாக இருக்கும்.
தசை வளர்ச்சிக்கு புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம்.
அத்தியாவசிய வைட்டமின்களுக்கு பருவ காலங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கனிமங்கள், நீடித்த ஆற்றலைத் தரக்கூடிய தானியங்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், கிழங்கு வகைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
எலும்புகள் உறுதியடைய பால், முட்டை, கீரை வகைகள், மீன் வகைகள் போன்றவற்றைக் கண்டிப்பாக வாரம் இருமுறையாவது உட்கொள்ள வேண்டும்.
தினமும் பால் குடிப்பது நல்லது.
ரத்தச்சோகை பிரச்னையைத் தவிர்க்க பேரீச்சை, முருங்கை, நெல்லிக்காய் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
19 வயது முதல் 64 வயது வரை…
இந்தக் காலகட்டத்தில் உடலின் ஆரோக்கியத்தைத் தக்க வைப்பது அவசியம். அதற்கேற்ற வகையில் உணவைத் திட்டமிட வேண்டும்.
குறைந்த அளவு புரதம் உள்ள உணவுகள், உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உடல் உறுப்புகள், இதயம், மூளை போன்றவற்றின் சீரான இயக்கத்திற்கு ஒமேகா -3, ஃபோலிக் ஆசிட் நிறைந்த உணவுகளான மீன், நட்ஸ் வகைகள், விதை வகைகள், போன்றவற்றைச் சாப்பிட வேண்டும்.
ரத்த அழுத்தத்தைத் தவிர்க்க சோடியம் நிறைந்த உணவுகளான வற்றல், வடகம், ஊறுகாய், சிப்ஸ், உப்புக்கடலை போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகள், ஆல்கஹால் சேர்க்கப்பட்ட உணவுகள், இனிப்புச்சுவை நிறைந்த பானங்கள் போன்றவற்றை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டாம்.
உடல் உறுப்புகள் சீராக இயங்க, மலச்சிக்கல் தவிர்க்க போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
நீங்கள் அன்றாடம் சாப்பிடும் தட்டில் 50 : 25 : 25 என்ற விகிதத்தில் நார்ச்சத்து, புரதச்சத்து , கார்போஹைட்ரேட் இருப்பது போல் உணவுகளைத் திட்டமிடுங்கள்.