உலகில் முதல் முறையாக, சிகரெட்டுகளில் எச்சரிக்கை லேபிளை அச்சிட உள்ளதாக கனடா அரசின் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஏற்கெனவே சிகரெட் பாக்கெட்டுகளின் அட்டையில் எச்சரிக்கை வாசகங்கள் இருக்கும் நிலையில், ஒவ்வொரு சிகரெட்டிலும் அதனை அச்சிட முடிவு செய்துள்ளது.
புதிதாக அச்சடிக்கப்பட உள்ள சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ள ஒவ்வொரு சிகரெட்டிலும், `புகையிலை புற்றுநோயை உருவாக்கும்’, `உள்ளிழுக்கும், வெளியிடும் ஒவ்வொரு புகையிலும் விஷம் உள்ளது’ போன்ற வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட உள்ளன.
இந்த ஒழுங்குமுறை நடவடிக்கை, ஆகஸ்ட் 1-ம் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. 2035-ம் ஆண்டுக்குள் கனடாவில் புகையிலை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை 5 சதவிகிதத்திற்கும் கீழாகக் குறைவாக்க வேண்டும் என்பதே இந்தப் புதிய முன்னெடுப்பின் குறிக்கோள்.
“இந்த நடவடிக்கையால் புகையிலை பொருள்கள் மீதான சுகாதார எச்சரிக்கைகளைத் தவிர்ப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. 2025-ம் ஆண்டுக்குள் கனடாவில் உள்ள சில்லறை விற்பனையாளர்கள் சிகரெட் மீது அச்சடிக்கப்பட்ட எச்சரிக்கையோடு விற்பனை செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என கனடாவின் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
கனடாவின் மனநலம் மற்றும் போதைப்பொருள் அமைச்சர் கரோலின் பென்னட் வெளியிட்டுள்ள அறிக்கையில், `ஒவ்வொரு வருடமும் புகையிலை பயன்பட்டால் சுமார் 48,000 மக்கள் உயிரிழக்கின்றனர். சுகாதார எச்சரிக்கை செய்திகளுடன் தனிப்பட்ட சிகரெட்டுகளை லேபிளிடும் உலகின் முதல் நாடாக நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த மாற்றம் தைரியமான ஒரு நடவடிக்கை’ என்று குறிப்பிட்டுள்ளார்.