`உலகக்கோப்பை நாயகன் சூர்யா…' பேட்டிங்கில் தடுமாற்றம்; ஒலிம்பிக் அணியில் இடத்துக்குப் போராட்டம்?

Share

2026 டி20 உலகக் கோப்பையை இந்திய அணிக்கு வென்று தந்து, ஒரு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் தன்னை நிரூபித்திருக்கலாம்.

ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக அவரது சமீபத்திய ஆட்டங்கள் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளன.

குறிப்பாக, 2028-ல் நடைபெறவிருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்குமா? என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இந்தச் சூழலில், வரும் ஜூன்-ஜூலை மாதங்களில் இந்திய அணி மேற்கொள்ளவிருக்கும் இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து சுற்றுப்பயணம் சூர்யகுமாரின் கிரிக்கெட் எதிர்காலத்திற்கு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தப் பயணத்தில், அவரது கேப்டன்சியைவிட பேட்டிங் திறனே அதிகமாக உற்றுநோக்கப்படும். 2028-ல் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பைவரை அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் அணியில் நீடிப்பாரா? என்பதை இந்தத் தொடர் தீர்மானிக்கக்கூடும்.

பயிற்சியாளரின் ஆதரவும், தேர்வாளர்களின் தயக்கமும்!

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் முதல் தேர்வாக சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து நீடிக்கிறார்.

கம்பீரின் பதவிக்காலம் 2028 டி20 உலகக்கோப்பைவரை நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சூர்யகுமாரின் தலைமைப் பண்பின்மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது.

ஆனால், அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு கம்பீரின் கருத்துடன் உடன்படுமா? என்பது சுவாரஸ்யமான கேள்வி. ஏனெனில், 2028 ஒலிம்பிக் போட்டியின்போது சூர்யகுமாருக்கு 38 வயது நெருங்கிவிடும்.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “சூர்யகுமார் தற்போது அணியை வழிநடத்துகிறார் என்பது உண்மைதான். ஆனால், ஒரு பேட்ஸ்மேனாக தனது ஆட்டத்தில் அவர் ஒரு நிலையான தன்மையைப் பராமரிப்பதையும் உறுதி செய்யவேண்டும்.

இங்கிலாந்து தொடரில் அவர்தான் கேப்டன். ஆனால், அதன்பிறகு 2028 வரையிலான அவரது இடம் என்பது, ஆட்டத்திறனை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்,” என்றார்.

புள்ளிவிவரங்கள் சொல்லும் கதை!

2025-ம் ஆண்டு சூர்யகுமாருக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது. அந்த ஆண்டில் அவரது ஸ்டிரைக் ரேட் 120-க்கும் கீழ் சரிந்ததுடன், ஒரு அரைசதம்கூட அடிக்க முடியாமல் திணறினார். 2026-ல் ஓரளவு மீண்டு வந்து, டி20 உலகக் கோப்பை வரை நான்கு அரைசதங்களை அடித்தார். அவரது ஸ்டிரைக் ரேட்டும் 160-க்கு மேல் உயர்ந்தது.

சூர்யகுமார் யாதவ்
சூர்யகுமார் யாதவ்

ஆனாலும், உலகக் கோப்பை போன்ற பெரிய தொடரில் அவரது ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியைத் தவிர, மற்ற பெரிய அணிகளுக்கு எதிராக அவரால் சோபிக்க முடியவில்லை.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 18, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 18, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 11, நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் டக் அவுட் என அவரது ஸ்கோர்கள் ஏமாற்றமளித்தன.

இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி!

இந்திய அணியின் டாப் 3 பேட்ஸ்மேன்கள் வலுவாக இருக்கும் நிலையில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். இந்த அழுத்தம் சூர்யகுமாரின் இடத்தை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது.

அயர்லாந்து தொடருக்கான 35 பேர்கொண்ட உத்தேச வீரர்கள் பட்டியலில் வைபவ் சூர்யவன்ஷியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், 16 வயதுக்கு முன்பாகவே இந்திய சீனியர் அணியில் அறிமுகமாகி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் முறியடிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

அயர்லாந்து தொடரிலா அல்லது அதன்பிறகு ஜிம்பாப்வே தொடரிலா, அல்லது செப்டம்பரில் ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலா அவரை அறிமுகப்படுத்துவது என தேர்வுக்குழு ஆலோசித்து வருகிறது.

வைபவ் சூர்யவன்ஷி
வைபவ் சூர்யவன்ஷி

தேர்வுக்குழுவின் தர்மசங்கடம்

வைபவ் தயாராகிவிட்டார் என்பதில் தேர்வுக்குழுவுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் போன்ற வீரர்கள் இருக்கும்போது, இவர்களில் ஒருவரை நீக்கிவிட்டு வைபவுக்கு எப்படி வாய்ப்பு கொடுப்பது என்ற தர்மசங்கடம் நிலவுகிறது.

நான்காவது தொடக்க ஆட்டக்காரராக யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இருக்கிறார். “அபிஷேக் அல்லது சஞ்சுவை நீக்கினால், சூர்யகுமார் மட்டும் எப்படி அணியில் நீடிக்கிறார் என்ற கேள்வி எழும். அதனால் தேர்வாளர்கள் மிகவும் கவனமாக முடிவெடுக்க வேண்டியுள்ளது,” என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒரே நேரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதால், இரண்டு தனித்தனி டி20 அணிகள் தேர்வு செய்யப்படும். அப்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com