How To: முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்வது எப்படி? I How To Cook Mudavatukal Kilangu Soup?

Share

கொல்லிமலை, ஏற்காடு போன்ற மலை வாசஸ்தலங்களுக்கு சென்றவர்களுக்கு முடவாட்டுக்கால் கிழங்கு சூப் பற்றி தெரிந்திருக்கும். ஆட்டுக்கால் சூப்பின் வாசனையுடன், சூடாக ஆவி பறக்க பறக்க மணக்கும் முடவாட்டுக்கால் கிழங்கு சூப்பை அந்த மலைகளின் குளிரில் அமர்ந்தபடி சாப்பிட அருமையாக இருக்கும். இந்த முடவாட்டுக்கால் கிழங்கு, சைவ ஆட்டுக்கால் என அழைக்கப்படுகிறது.

முடவாட்டுக்கால் கிழங்கு

’’முடவாட்டுக்கால் கிழங்கில் ஏகப்பட்ட மருத்துவ குணங்களும் இருக்கின்றன. மூட்டு வலிக்கும், முதுகு வலிக்கும், மலச்சிக்கலுக்கும் சிறந்த நிவாரணம் அளிக்கும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்றுவலிக்கும் சிறந்த தீர்வாக இருக்கிறது. இது மலைகளில் மட்டுமே கிடைக்கும் கிழங்கு வகை. பரவலாக இப்போது பல ஊர்களில் விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் சமைத்துச் சாப்பிடலாம்’’ என கூறும் மேட்டூரை சேர்ந்த ஃபிஸியோதெரபிஸ்ட் விஜயா, முடவாட்டுக்கால் கிழங்கு சூப் செய்முறையை விளக்குகிறார்.

தேவையான பொருள்கள்

முடவாட்டுக்கால் கிழங்கு – 250 கிராம்

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 1

 அரைக்க

இஞ்சி – சிறிய துண்டு

பூண்டு – 7 முதல் 10 பல்

கசகசா- 2 சிட்டிகை

தேங்காய் – சிறிதளவு

சீரகம் – 1 டீஸ்பூன்

பட்டை – சின்னது 1

மிளகு – 1 டிஸ்பூன்

செய்முறை

* அரைக்கக் கூறியுள்ளவற்றை அரைத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

* முடவாட்டுக்கால் கிழங்கின் மேற்பகுதியில் இருக்கும் தோலை நீக்கி எடுத்துவிட வேண்டும். பின்பு கிழங்கினை சின்னச் சின்னதாக நறுக்கி எடுத்து வைக்கவும்.  

* அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் சின்ன வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதனுடன் அரைத்து வைத்தவற்றை சேர்த்து, இதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும். இதனுடன் கிழங்கினை சேர்த்து வதக்கி, ஒரு லிட்டர் அளவிற்கான தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும்.

* 20 முதல் 30 நிமிடங்களில் கிழங்கு நன்கு வெந்து, மசாலா சேர்ந்து சூப் மணமணக்கும். இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து சூடாகப் பருகவும்.

நன்றி

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com