Doctor Vikatan: காதுக்குள் பூச்சி போய்விட்டால் ஆபத்தா… அதனால் காது கேட்காமல்போக வாய்ப்பு உண்டா… அந்தப் பூச்சியை எப்படி வெளியேற்றுவது?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, காது-மூக்கு- தொண்டை சிகிச்சை மருத்துவர் பி.நடராஜ்.
காதுக்குள் பூச்சிகள் செல்வதால் ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு. காது கேட்காமல் போவதற்கான வாய்ப்பும் மிகவும் குறைவு. எறும்பு, சின்ன வண்டு போன்ற பூச்சிகள் காதுக்குள் சென்று காது ஜவ்வு அல்லது சருமப் பகுதியைக் கடிப்பதால் வலி அல்லது ரத்தக் கசிவு ஏற்படலாம்.
காதுக்குள் பூச்சி சென்றுவிட்டால் அதற்கான சரியான தீர்வு, காது- மூக்கு- தொண்டை மருத்துவரிடம் சென்று அதை அப்புறப்படுத்துவதுதான். அது நடைமுறையில் சாத்தியம் இல்லாதபோது முதலுதவி செய்து நிவாரணம் பெறலாம்.
மிதமான சூடுநீரில் உப்பு கலந்து காதுக்குள் விடலாம் அல்லது மிதமான சூட்டில் சுத்தமான எண்ணெயை விடலாம். நீர் மிகவும் சுத்தமாக இருப்பது அவசியம். அதிகம் சூடு இல்லாமல் இருப்பது மிக அவசியம்.