சுருண்டு போன ஆஸ்திரேலியா; 11 வருட வெற்றி ஏக்கத்தை முடிவுக்கு கொண்டு வந்த நியூசிலாந்து! – T20 WorldCup : Newzealand beats Australia in their home ground

Share

டி20 உலகக்கோப்பையின் “சூப்பர் 12” சுற்று தொடங்கியிருக்கிறது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.

ஃபின் ஆலன் – டெவான் கான்வே இணை நியுசிலாந்து இன்னிங்ஸை தொடங்கினர். அதிரடிக்கு பெயர்பெற்ற டி20 பார்மட்டின் உலகக்கோப்பையை அதன் பாணியிலேயே ஆரம்பித்து வைத்தார் ஆலன். அனுபவசாலியான கப்தில் இடத்தில் ஆடிய ஆலன் 16 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் சிறிது நேரம் களத்தில் இருந்து 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். கான்வே தொடர்ந்து ரன்களை சேர்த்துக்கொண்டிருந்தார். பவுண்டரியை மட்டும் அடிக்காமல் தொட்டு விட்டு ஓடி ஆடுகளத்தின் தன்மையை அறிந்து ரன்களை சேர்த்தார் கான்வே. தான் அடித்த 92 ரன்களில் 40 ரன்கள் மட்டுமே பவுண்டரிகள் மூலம் எடுத்தார்.

கான்வே உடன் கடைசியில் இணைந்த ஜிம்மி நீஷம் அதிரடியாக ஆடியதன் மூலம் 200 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இது நியூசிலாந்து அணி டி20 உலகக்கோப்பையில் அடித்த முதல் 200 ரன்கள் ஆகும்.

பின்னர் 201 என்ற இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணியில் வார்னர் பவுண்டரியுடன் ஆரம்பித்தாலும் சௌதீ பந்தில் போல்டானார். பின்ச், மிட்செல் மார்ஷ் தொடர்ந்து அதிரடியாக ஆட முயற்சித்தாலும் ஒன்றிரண்டு பவுண்டரிகளுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அடுத்து வந்த ஸ்டாய்னிஸ், டிம் டேவிட் போன்ற பேட்ஸ்மேன்களும் விரைவில் பெவிலியன் திரும்பினர். கிளென் மேக்ஸ்வெல் ஸ்விட்ச் ஹிட்டில் சில பவுண்டரிகளை அடித்த நிலையில் அதே ஷாட்டை ஆட முயன்று சோதி பந்தில் போல்டானார். அத்துடன் ஆஸ்திரேலிய அணியின் வெற்றி வாய்ப்பும் முடிவுக்கு வந்தது. இறுதியில் 111 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலியாவின் பெரிய ஆடுகளங்களில் பீல்டிங் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நியுசிலாந்து அணி முதல் போட்டியிலேயே செய்து காட்டிவிட்டது. இந்த தோல்வி ஆஸ்திரேலியா அணியின் ரன்ரேட்டை கட்டாயம் பாதிக்கும் ; அதனால் வரும் போட்டிகளில் பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும்.

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com