தென் ஆப்பிரிக்க அணியுடன் 2-வது டி20 கிரிக்கெட்டில் இந்தியா இன்று மோதல் | guwahati match | India will clash with South Africa in the 2nd T20I today

Share

குவாஹாட்டி: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்று மோதுகிறது. இதில் வெற்றி பெறும் பட்சத்தில் உள்நாட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன்முறையாக டி 20 தொடரை இந்திய அணி வென்று சாதனை படைக்கும்.

இரு அணிகள் இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற முதல் டி 20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது. இந்த ஆட்டத்தில் அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர் ஆகியோர் ஆடுகளத்தின் தன்மையை சிறப்பாக பயன்படுத்தி 3 ஓவர்களுக்குள்ளேயே தென் ஆப்பிரிக்க அணியின் 5 முக்கிய விக்கெட்களை வீழ்த்தி மிரளச் செய்தனர்.

ஆனால் குவாஹாட்டி ஆடுகளம் திருவனந்தபுரத்தில் இருந்து மாறுபட்டது. இந்த ஆட்டம் இந்திய பந்து வீச்சுத்துறைக்கு சவால் நிறைந்ததாக இருக்கக்கூடும். பும்ரா இல்லாத நிலையில் முதல் ஆட்டத்தில் விளையாடிய அதே பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்கக்கூடும். திருவனந்தபுரத்தில் அக்சர் படேல், அஸ்வின் கூட்டணியும் அசத்தியிருந்தது.

இவர்கள் இருவரும் கூட்டாக 8 ஓவர்களை வீசி 24 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்திருந்தனர். அதிலும் அஸ்வின் ஒரு மெய்டனுடன் 8 ரன்களை மட்டுமே வழங்கியிருந்தார். டி 20 உலகக்கோப்பை நெருங்குவதால் மீண்டும் ஒரு முறை இந்த கூட்டணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் சுழற்பந்து வீச்சு துறை வலுப்பெறும்.

பேட்டிங்கை பொறுத்தவரையில் கே.எல்.ராகுல் மீண்டும் ரன்கள் சேர்க்கத் தொடங்கியுள்ளது பலம் சேர்த்துள்ளது. சூர்யகுமார் யாதவிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் உள்ளூரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முறையாக டி 20 தொடரை கைப்பற்றி சாதனை படைக்கும்.

நேரம்: இரவு 7.00

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

நன்றி

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com