இந்தியா முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமானது. அதன்படி முதல் போட்டி, அடிலெய்டு மைதானத்தில் நடைபெற்றது. அதில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் கோலி 74 ரன்களில் ஆடிக்கொண்டிருந்தார். நல்ல பார்மில் தென்பட்ட கோலி, அன்று தனது 71வது சதத்தைப் பதிவு செய்வார் என்றே எதிர்ப்பார்த்தனர். பிங்க் பந்தில் அந்த 71வது சதம் வருமோ என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், ரன் அவுட் ஆனார் கோலி. அடுத்த 3 போட்டிகளில் கோலி ஆடமாட்டார் என்பதால் இந்த ஆட்டத்தில் சதமடிக்காதது ஏமாற்றத்தையே அளித்தது. ரன் அவுட்டில் ஈடுபட்ட ரஹானேவின் மீது ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆனால், ரஹானேவே அடுத்த 3 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி தொடரை வென்று கொடுத்தது தனிக்கதை.
இந்திய அணியின் சிறந்த டெஸ்ட் கேப்டனான கோலிக்கு கடைசி போட்டி டெஸ்ட் கேப்டனாக கேப் டவுனில் நடந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி. இந்த போட்டியில் சதமடித்திருந்தால் பெர்ஃபெக்ட் தருணமாக இருந்திருக்கும்.
இங்கிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான போட்டிகளிலும் பங்கேற்றது. இந்தத் தொடரில் மட்டும் கோலி 7 அரை சதங்களை அடித்தார். ஆனால், இதில் ஒன்று கூட சதமாக மாறவில்லை. இந்தத் தொடரில் மட்டும் கோலி மூன்று பார்மட்டுகளிலும் 532 ரன்களை எடுத்திருந்தார்.
டி20ஐ உலகக்கோப்பை தொடரில் கோலி இருக்கவேண்டுமா என்றெல்லாம் கேள்விகள் எழுப்பப்பட்டன. சில தொடர்களில் ஓய்வு அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அத்தகைய கேள்விகள் எழுந்தன. இப்போது அந்த எல்லா கேள்விகளுக்கும் ஏற்ற பதிலை கோலி அளித்துவிட்டார். குறைந்த ஸ்ட்ரைக் ரேட், லெக் ஸ்பின்னருக்கு எதிராக சிரமப்படுவார் என எண்ணற்ற விமர்சனங்களுக்கு கோலியின் அந்த சதம் தான் பதில். தனது முதல் டி20 ஐ சதத்தை அடித்து மூன்று பார்மட்டுகளிலும் சதமடித்த நான்காவது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் படைத்தார்.