ஏஆர்ஒய் நியூஸ் என்ற சேனலின் பவுன்சர் என்ற நிகழ்ச்சியில் பேசிய முஷ்டாக் அகமது, இது தொடர்பாகக் கூறும்போது, “விராட் கோலி இங்கிலாந்தில் உடற்பயிற்சி நிலையத்தில் என்னை சந்தித்தார். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம், அப்போது அவரது பேட்டிங் டெக்னிக் பற்றி ஒன்றிரண்டு விஷயங்களைக் கூறினேன், அவர் நன்றாக கூர்ந்து கவனிப்பவர், கேட்பவர்.
அப்போது நான் அவரது பேட்டின் உத்தி பற்றி அறிவுரை வழங்கிய போது முதல் 10-15 ரன்களை எடுக்கும் போது அவரது முன் காலை முன்னால் தூக்கிப் போட்டு ட்ரைவ் ஆடும்போது முன் கால் நேராக இருக்கிறது, பந்தின் திசைக்கேற்ப இல்லை, இதனால் எட்ஜ் ஆகி விடுகிறது, பந்தின் திசை நோக்கி முன் கால் இல்லாவிட்டால் பேட்டிங் பிட்சில் கூட எட்ஜ் எடுக்கிறது உங்களுக்கு என்றேன் கோலியிடம்.
இந்த அறிவுரையை மனதில் வாங்கிய கோலி அதன் பிறகு நான் மேட்சில் பார்த்த போது பந்தை எதிர்கொள்ள கொஞ்சம் ஆஃப் ஸ்டம்புக்கு நகர்ந்து வந்து பந்தை நடுமட்டையில் வாங்கி ஆடினார், பந்துகள் ஸ்விங் ஆகும் போது ஷஃபுல் செய்து ஆடினால் தன் ஆஃப் ஸ்டம்ப் எங்கு இருக்கிறது என்பதை பேட்டர்கள் சில சமயங்களில் மறந்து விடுவார்கள். இதையும் கோலியிடம் கூறினேன்.
அவர் நான் கூறுவதை கவனமுடன் கேட்டார். பிறகு மிக முக்கியமான ஒன்றைக் கூறியுள்ளீர்கள் முஷிபாய் நான் இதை கவனத்தில் கொண்டு ஆடுகிறேன் என்றார் கோலி.
நான் இங்கிலாந்தின் பயிற்சியாளராக இருந்த போது வெள்ளைப்பந்து தொடரில் கோலிக்கு நாங்கள் தனியாக திட்டமிட்டோம். அப்போது கோலிக்கு அவர் முதல் 10-15 ரன்களை எடுப்பதற்குள் டைட் பீல்டிங்கை அமைக்க வேண்டும் என்றேன். அவர் மிட் ஆஃப், மிட் ஆன், கவர் திசையில் தூக்கி அடிக்கட்டும் என்றேன். ஆனால் கோலி அவ்வாறு அடிக்க மாட்டார், பயப்படுவார் என்றேன்.
பொதுவாக விராட் கோலி மிட் ஆன், மிட் ஆஃபில் தட்டி விட்டு ஒன்று ஒன்றாக எடுத்து தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வார் அந்த இடத்தை அடைத்து விட்டால் அவர் ரிஸ்க் எடுக்க வேண்டும், அப்போது அவுட் ஆவார் என்று திட்டமிட்டோம்” என்று கூறினார் முஷ்டாக் அகமது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.