திண்டுக்கல் NPR கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற TNPL 2026-ன் 7-வது போட்டியில், கோவை கிங்ஸ் – மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸ் 239 ரன்கள் குவிக்க, அதை 19.3 ஓவர்களில் துரத்தி பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறது மதுரை பாந்தர்ஸ்.
239 ரன்கள்… டி20 போட்டியில் இதைவிட பெரிய இலக்கு வேண்டுமா? கோவை கிங்ஸ் அப்படித்தான் நினைத்திருக்கலாம். ஆனால், மதுரை பேட்டர்கள் களத்தில் இருந்த அடுத்த சில மணி நேரத்தில் அந்த எண்ணமே தலைகீழாக மாறியது.
ஒருபுறம் கோவையின் 239 ரன்கள். மறுபுறம், அதை அசால்ட்டாக சேஸ் செய்த மதுரை. இந்த இரண்டுக்கும் நடுவே, போட்டியின் போக்கையே மாற்றிய ஒரு பெயர் — என்.எஸ். சதுர்வேத்!
239 ரன்கள்… கோவையின் மிரட்டல் தொடக்கம்!
முதலில் பேட்டிங் செய்த கோவை கிங்ஸுக்குத் தொடக்கம் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை. ஆனால், அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் ஆட்டத்தைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
லோகேஷ்வர் 38 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். அதன்பிறகு களமிறங்கிய பி. சச்சின், பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக ரன்கள் அடிக்க, மறுமுனையில் ஆண்ட்ரே சித்தார்த் அவருக்குச் சரியான துணையாக நின்றார்.
இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 143 ரன்கள் சேர்த்தனர். சச்சின் 84 ரன்களிலும், ஆண்ட்ரே சித்தார்த் 87 ரன்களிலும் அசத்த, 20 ஓவர்கள் முடிவில் கோவை கிங்ஸ் 239/4 என பிரமாண்ட ஸ்கோரை எட்டியது.