பட மூலாதாரம், Youtube/TVK
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு முதல் பொதுக்கூட்டத்தில் முதல்வர் விஜய் பங்கேற்றார்.
‘திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில்’ உரையாற்றிய அவர், தேர்தலில் அளித்த ஆதரவுக்காக வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த விஜய், பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த நிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தான் கோட் சூட் போடுவது, தவெகவுக்கு யாருடன் போட்டி, தவெக தொண்டர்கள் மீது வைக்கப்படும் விமர்சனம், திமுக மீது விமர்சனம், அதிமுக உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விஜய் பேசினார்.
இந்த நிலையில், திமுக மீதான விஜயின் விமர்சனத்துக்கு பதிலளித்த திமுக எம்.பி கனிமொழி, “அவர்கள் இன்று ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். சரியான ஆட்சியை நடத்துவதற்கான வழிமுறைகளை அறிந்துகொள்ள வேண்டுமே தவிர, திமுகவைக் குறை கூறிக்கொண்டிருப்பதால் மக்கள் அரசின் தவறுகளையும் சட்டம் – ஒழுங்கு பிரச்னைகளையும் மறந்துவிட மாட்டார்கள்” என்று தெரிவித்தார்.
“எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க” என இன்றைய முதல்வரின் உரையை அதிமுக விமர்சித்துள்ளது.
‘6 நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை’
பொதுக்கூட்டத்தில் முதலில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து பேசிய விஜய், ”என்னை பெரம்பூர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்றுதான் சொல்வார்கள். அது, தேர்தல் ஆணையத்தின் சட்டவிதிகளுக்காக மட்டுமே. ஆனால் என்னைப் பொறுத்தவரை, திருச்சி எவ்வாறு தமிழ்நாட்டின் இதயம் போன்றதோ அதுபோலவே என்னுடைய இதயத்திற்கு திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் மிக முக்கியமானவர்கள்.” என்றார்.
மேலும், ”ஆட்சி வந்து, ஆறு மாதங்கள் அமைதியாக இருப்போம் என்று சொன்னவர்களால் ஆறு நாட்கள் கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஆட்சிக்கு வந்த அரை மணி நேரத்திலேயே தொடங்கிவிட்டார்கள். கல்யாண வீட்டிற்கு சென்றாலும் புலம்புகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மாத்தி மாத்தி உங்களை ஏமாத்திக் கொண்டிருந்த இரண்டு தரப்பையும் வேண்டாம் என ஒதுக்கிவிட்டு, என்னை தேர்ந்தெடுத்துள்ளீர்கள். நான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் இந்த நேரத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்
பட மூலாதாரம், Youtube/TVK
‘எம்.ஜி.ஆரை விட அதிக வாக்கு’
” எம்.ஜி.ஆரின் முதல் தேர்தலில்கூட அவரால் இந்த அளவு வாக்கு சதவிகிதத்தைப் பெறமுடியவில்லை என்று சொன்னார்கள். ஆனால் நீங்கள் தவெக-வுக்கு பெரும் ஆதரவு தந்திருக்கிறீர்கள். நான் என்னை எம்ஜிஆருடன் ஒப்பிடவில்லை, எம்ஜிஆர், எம்ஜிஆர்தான். 1977-ல் நீங்கள் போடாத ஓட்டை 2026-ல் போட்டு உள்ளீர்கள். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரித்து இருந்தால் நன்றாக இருக்கும்.” என்றார் விஜய்.
‘கேலி கிண்டலுக்கு’ பதில்
”யாராவது இந்த நிலைமைக்கு உயர்ந்தால், கிண்டலும் கேலியுமாக பேசுவது இருக்கத்தானே செய்யும்? நம்மைப் பற்றி, நமது அரசியலைப் பற்றி, நமது பேச்சைப் பற்றி கிண்டலும் கேலியுமாக பேசிக் கொண்டுதான் இருப்பார்கள். அப்படிப் பேசுபவர்களிடம் என்னுடைய ஒரே வேண்டுகோள் என்னவென்றால், இப்படி பேசுவதை நிறுத்திவிடாதீர்கள்… நீங்கள்தான் என்னுடைய எனர்ஜி ஃபோர்ஸ். நீங்கள் பேசிக் கொண்டே இருங்கள். நான் மக்களுக்குத் தேவையான விஷயங்களை செய்துக் கொண்டே இருப்பேன்.” என விஜய் கூறினார்.
கோட் சூட் போடுவது பற்றி கூறியது என்ன?
”நான் கோட்-சூட் போட்டு வருவதைப் பார்த்து பேசுகிறார்கள். ஏன், நானெல்லாம் கோட்-சூட் போடக்கூடாதா? அதிகாரம் செய்பவர்களும் ஆதிக்க சக்திகள் மட்டும்தான் போடவேண்டுமா? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நான் என்ன கலர் கலராக போடுகிறேன்? நம் அனைவரின் மனதைப் போன்றே பிளாக் & வொயிட். அனைத்திலும் விஜய் பிளாக் & வொயிட்டாக இருப்பான் என்பதைக் காட்டுவதற்காகத்தான் அந்த கலர். அந்த கருப்புக் கலர் என்பது யாரைக் குறிக்கும், எதன் அடையாளம் என்பது நான் சொல்லித் தான் உங்களுக்குத் தெரிய வேண்டும் என்பதில்லை ”என்றார் விஜய்.
பட மூலாதாரம், Youtube/TVK
தவெக எதிரி யார்?
”உனக்கு எதிரிகளே இல்லையா என்றுகேட்டால், நான் எதிரிகளே இல்லை என்று நான் சொல்லமாட்டேன். அப்படி நினைக்கவும் மாட்டேன், அப்படி நினைக்கவும் கூடாது. இப்போதும் சொல்கிறேன், இரண்டே இரண்டு பேருக்கு இடையில்தான் போட்டியே.
ஒன்று தவெக மற்றொன்று திமுக. இதற்கு இடையில் வேறு யாருக்கும் எந்த வேலையும் கிடையாது. தேர்தலுக்கு முன்பும் அவர்களுக்கு ஒரு வேலையும் இல்லை. தேர்தலுக்குப் பிறகு சுத்தமாக இல்லை. ஆனால் திமுகவும் மற்றும் பலரும் [அதிமுக] ஒன்றாக சேர்ந்துகொண்டு நாம் வந்துவிடக்கூடாது என்று சொல்லி கடைசி ஐந்து நாட்கள் ஒரு கூத்து செய்தார்களே. நமக்கெல்லாம் இப்படியெல்லாம் கூட நடக்குமோ என்று தோன்றியது.
ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று நான் இப்போது சொல்கிறேன். இந்த விஜயா? இந்த விஜயின் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று நினைத்த ஸ்டாலினா? அவ்வளவுதான். இதற்கு நடுவில் வேறு யாரும் இடையில் வந்து தடுக்க முயற்சி செய்தால் நிர்வாகம் அதற்கு பொறுப்பில்லை.” என்றார் விஜய்.
மேலும் ”திமுக நம்மைத் தடுக்கத் தடுக்க, திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க, திமுக நம்மை அவமானப்படுத்தப் படுத்த அத்தனையும் நமக்கு நன்மையே” என கூறினார்.
ஷார்ட் வீடியோ
‘தற்குறி’ விமர்சனத்துக்கு பதில்
”முன்பெல்லாம் சட்டசபையில் யார் அடித்துக் கொண்டால் நமக்கென்ன? என்று இருந்தவர்கள் எல்லாம் தற்போது அங்கு என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். கவனித்தீர்களா? திமுகவின் வார்த்தைகளில் சொல்வதென்றால், முன்பு ரீல்ஸ் போட்ட கூட்டம் இப்போது நியூஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது நமக்கு மகிழ்ச்சி தான். இளைஞர்கள் நாட்டில் என்ன நடக்கிறது அரசியல் என்றால் என்ன என்று புரிந்துக் கொள்ளவேண்டும். அப்படியொரு விழிப்புணர்வு ஏற்பட்டிருப்பது நமக்கு மகிழ்ச்சிதான்.
இதெல்லாம் யாரால் நடந்திருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியதில்லை, உங்களுக்கே நன்றாகத் தெரியும். இப்படிப்பட்ட மக்களை தற்குறி என்று இப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
காஞ்சிபுரத்தில் நான் சொன்னதைப் போன்று, நீங்கள் தற்குறி என்று சொன்னவர்கள்தான் உங்கள் அரசியல் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியுள்ளனர். இன்னமும் ஆக்குவார்கள். அன்று நான் சொன்னபோது சிரித்தவர்கள், இன்று என்ன செய்வார்கள்? உண்மையைச் சொன்னால் அந்தக் கூட்டத்திற்கு கசக்கும். உண்மையில் மக்களின் மனது உங்களுக்குப் புரிந்திருந்தால், அவர்களை தவறாக பேசியிருக்க மாட்டீர்கள்” என கூறினார்.
திமுக மீது விமர்சனம்
“அண்ணா ஆரம்பித்த கட்சியை அடிமைக் கூடாரமாக மாற்றிவிட்டு, ‘உண்மையைச் சொல்லு உடன்பிறப்பே’ எனக் கூறுகிறார்கள். திமுக இப்படி ஆனதற்கு என்ன காரணம் என்பதை அந்தக் குடும்பத்துக்குள்ளேயே சென்று கேளுங்கள் என்று திமுகவினர் கூறுகின்றனர். இதைப் புரிந்துகொள்ளாமல் மக்களை பற்றி தவறாக பேசுகிறார்கள்” என்றார் விஜய்.
”கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற விசயங்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விரும்புகிறேன். இலவச மின்சாரம் 200 யூனிட் என்பதைப் பற்றி பேசுகிறார்கள். இதற்கு முன்பிருந்த 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பது கடந்த ஆட்சி கொடுத்தது இல்லை. அது, மேடம் ஜெயலலிதா இருந்தபோது செய்தது. ஸ்டாலின் சார் பதவி பறிபோன கடுப்பில், அறிக்கைகளாய் விட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறார் . இந்த ஒரு மாதத்தில் அதிகபட்சமாய் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்தேன். விவசாயிகளின் கடன்… நிதி தொடர்பாக நீங்கள் செய்துவிட்டு போயிருக்கும் பிரச்னைகளை சரிசெய்ய வேண்டாமா?” என கூறினார்.
ஷார்ட் வீடியோ
”அடுத்து சட்டம் ஒழுங்கு. அது சரியில்லை, இது சரியில்லை என்று திமுகவும் மற்றும் பலரும் மாறி மாறி சொல்கிறார்கள். மாடல் அரசு என்று சொன்னீர்களே, அதில் நீங்கள் என்ன செய்து வைத்திருக்கிறீர்கள்? ஒரு ஊர், ஒரு தெரு விடாமல் போதைப்பொருள் கலாசாரம் பரவிக்கிடக்கிறது. அதை ஆரம்பக்கட்டத்திலேயே கட்டுப்படுத்தி இருந்தால் பிரச்னை இருந்திருக்காது. இத்தனை பெண் குழந்தைகளை பெண்களை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட்டிருக்குமா? எல்லாவற்றையும் தாங்கள் செய்டுவிட்டு பழியை என்மீது போடுகிறார்கள்.
நீங்கள் என்மீது என்ன பழி போட்டாலும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கான வேலைகளை இந்த விஜய் செய்து காட்டுவான். அதற்காகத்தான் திறமைமிக்க காவல் அதிகாரிகளை நியமித்திருக்கிறேன். பெண்கள் பாதுகாப்புக்காக சிங்கப் பெண் காவல்படையை உருவாக்கியிருக்கிறேன். அடுத்த வாரம் அதை அறிமுகப்படுத்தப் போகிறோம். நீங்கள் என்மீது என்ன பழி போட்டாலும், மக்களுக்கான அனைத்து நல்ல விஷயங்களையும் செய்வேன்.” என கூறினார் விஜய்.
”அவர்கள்தான் ஆட்சியிலேயே இல்லையே அவர்களை ஏன் குறை சொல்கிறீர்கள் என்று கேட்பார்கள். வேரில் வெந்நீர் விட்டுச் சென்றவர்களை வேறு என்ன சொல்வது? நாம் மக்களுக்காக இவ்வளவு பணிகளை செய்கிறோம். ஆனால் அவர்கள் அதையெல்லாம் விட்டுவிட்டு, குதிரைபேரம் செய்கிறார், அது செய்கிறார்… இது செய்கிறார் என தப்புத்தப்பாய் கதை சொல்கிறார்கள்.
திமுகவும் மற்றும் பலரும் ஒன்றாக இணைந்த ஆட்சி அமைத்து ஒன்றாக கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்கள். அது ஏன் தெரியுமா? இந்த தவெக ஆட்சி அமைந்தால் அவர்களின் பொழைப்பே போய்விடும் என்ற அச்சம்தான்.”என கூறினார்.
”ஐம்பது அறுபதாண்டுகளாக தேர்தலில் இருந்த சாதியை உடைத்திருக்கிறோம், மதத்தை உடைத்திருக்கிறோம், காசு கொடுத்து வாக்கு வாங்குவதை உடைத்திருக்கிறோம். நாங்கள் எது செய்தாலும் அரசியல்சாசனத்திற்கு உட்பட்டே செய்வோம்.எதிர்வரும் இடைத்தேர்தலில் [ திருச்சி கிழக்கு] உங்கள் வீட்டுப்பிள்ளையைத் தான் வேட்பாளராக நிறுத்தப் போகிறோம். நீங்கள் எப்படி இந்த விஜய்க்கு வாக்களித்து வெற்றிபெற செய்தீர்களோ, அதேபோல இடைத்தேர்தலில் உங்கள் வேட்பாளரை வெற்றிபெறச் செய்வீர்கள் என நான் முழுமையாக நம்புகிறேன்.” என்றார் விஜய்.
எதிர்கட்சிகளின் விமர்சனம் என்ன?
”தனது பதவிக்கான பொறுப்பை உணராமல், எந்தவொரு தவறுக்கும் பொறுப்பேற்க மனமில்லாமல் ஆச்சரியக்குறித்தனமாக பேசியுள்ளார்.சட்டம் ஒழுங்கை சீர்செய்ய காவல்துறைக்கு அதிகாரிகளை நியமித்துவிட்டால் போதுமா? நிர்வாகம் தானாக செயல்படுமா?” என அதிமுகவின் ஐடி விங்க் எக்ஸ் தளத்தில் முதல்வர் விஜயின் உரை குறித்து பதிவிட்டுள்ளது.
மேலும், “இவர் மீது பழி போடுகிறார்களாம்… தனது ஆட்சியில் இத்தனை குற்றங்கள் நடக்கிறதே, இத்தனை மரணங்கள், பெண்கள் பாதுகாப்பு இல்லையே… இதைப் பற்றிய வருத்தம் முகத்திலோ, பேச்சிலோ துளிகூட தெரியவில்லை. தவறை சரிசெய்ய வேண்டும் என்ற பொறுப்பில்லாத இது தற்பெருமை பேச்சல்லாமல் வேறு என்ன? ‘அனைத்திற்கும் முந்தைய ஆட்சி தான் காரணம்’ என்று சொல்வது பெயர் தான் மாற்றமா? முந்தைய ஆட்சியின் நிதி நிலைமை மோசமாக இருந்ததை இப்போது தான் கண்டுபிடித்தீர்களா?” என கூறியுள்ளது.
”அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அதிகார வலைவீசி விலைபேசி, தலைமைச் செயலகத்தின் கீழ்மாடியில் ராஜினாமா செய்ய வைத்து, மேல்மாடியில் கட்சி இணைப்பு விழா நடத்தியது பற்றி ஏன் ஒருவார்த்தை கூட பேசவில்லை? எங்களை ‘மற்றும் பலர்’ என்று சொல்லும் இவர்கள், அடுத்து இங்கிருந்து யாரை இழுக்கலாம் என்றே மனதளவில் 24 மணிநேரமும் அதிமுக நினைப்பாகவே இருப்பது ஏன்? எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது என்பதை மட்டும் நினைவிற்கொள்க” என கூறியுள்ளது.
தவெக அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.
இந்த அரசு அமைந்தது முதல், கொலை – கொள்ளை – பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்காத நாளே இல்லை என முன்னதாக உதயநிதி விமர்சித்துள்ளார்.
சிங்கப் பெண்கள் படை தொடக்க விழா ரத்து செய்யப்பட்டதையும் அவர் விமர்சித்திருந்தார்.
பயிர்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை த.வெ.க அரசு ஏமாற்றி இருக்கிறது எனவும் முன்பு அவர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது தொடர்பாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட உதயநிதி ஸ்டாலின், ”தேர்தல் பிரசாரத்தின் போது, 5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள். ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள். இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

