“இரிட்டபுள் பவல் சிண்ட்ரோம்’ (IBS) அல்லது சென்சிட்டிவ்வான குடல் பாதிப்பு (sensitive gut) உள்ள சிலருக்கு, உணவோடு சேர்த்து பழங்களைச் செரிப்பது கடினமாக இருக்கும். இது வயிற்றில் பழங்கள் நொதித்துப்போக (ferment) வழிவகுத்து, வயிற்று உப்புசம் அல்லது வாயுத் தொல்லையை ஏற்படுத்தலாம்.
அதிக கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) உள்ள உணவோடு பழங்களையும் சேர்த்துச் சாப்பிடுவது, அந்த உணவின் கிளைசெமிக் குறியீட்டை (Glycemic index) அல்லது கிளைசெமிக் சுமையை (Glycemic load) அதிகரிக்கலாம்.
அதாவது, சாப்பிட்ட உணவானது, எவ்வளவு சீக்கிரம் ரத்தச் சர்க்கரையாக மாறுகிறது என்பதே கிளைசெமிக் இண்டெக்ஸ். இதனால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மிக வேகமாக உயரும்.

வயிறு நிறைந்த உணவுக்குப் பிறகு ஏற்படும் மந்தநிலை அல்லது கனமான உணர்வைத் தவிர்க்க, பழங்களைத் தனியாக ஓர் உணவாகச் சாப்பிடுவதே சிறந்தது என்று உணவுமுறைகள் அறிவுறுத்துகின்றன.
பழங்களில் வைட்டமின்கள் (முக்கியமாக வைட்டமின் சி) மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. வெறும் வயிற்றில் சாப்பிடும்போது இவை நன்றாக உறிஞ்சப்படலாம். இவற்றை உணவோடு சேர்த்து எடுக்கும்போது ஊட்டச்சத்துகள் உறிஞ்சப்படுவது தடைப்படலாம்.
உணவுக்கு முன் பழங்களைச் சாப்பிடுவது, அதிலுள்ள நார்ச்சத்து (fiber) மற்றும் நீர்ச்சத்து காரணமாக நாம் அதிகமாக உண்பதைத் தடுக்கிறது. இது உடல் எடையைக் குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு மிகவும் ஏற்றது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.