பட மூலாதாரம், Vikraman/Instagram
புது வசந்தம், பூவே உனக்காக, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உன்னை நினைத்து, வானத்தைப் போல போன்ற திரைப்படங்களை கொடுத்த இயக்குநர் விக்ரமனின் பிறந்தநாள் நேற்று (மார்ச் 30). அவர் இயக்கிய படங்களில் சூர்யவம்சம் திரைப்படத்துக்கு தனியிடமுண்டு.
வெள்ளிவிழா கண்ட இந்தப் படம் தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழியிலும் ரீமேக் ஆகி வெற்றி பெற்றது.
சூர்யவம்சம் வெளியாகி கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் ஆன நிலையில் திரைப்படத்தின் காட்சிகள், பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.
சூர்யவம்சம் உருவானது எப்படி? இவ்வளவு பெரிய வெற்றிக்கு என்ன காரணம்?
பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட ‘சூர்யவம்சம்’
சூர்யவம்சம் திரைப்படம் எப்படி உருவானது என்று படத்தின் இயக்குநர் விக்ரமனிடம் கேட்டோம்.
“நான் 1983-இல் சினிமாவுக்கு வந்தேன். உதவி இயக்குநராக இருந்த காலத்தில் இருந்தே கதைகள் எழுதிக்கொண்டே இருந்தேன். அந்த வகையில் என் வசம் 30, 40 கதைகள் இருந்தன. அப்படி எழுதி வைத்திருந்த கதைதான் சூர்யவம்சம். ஒரு மாறுபட்ட பாசக்கதையாக எழுதி இருந்தேன்.” என்று கூறினார்.
“அப்பா கேரக்டரில் விஜயகுமார், மகன் கேரக்டரில் கார்த்திக்கை நடிக்க வைக்கலாம் என யோசித்தேன். அந்த சமயத்தில் நாட்டாமை வெற்றிக்குப் பின் சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்திற்காக நான் சரத்குமாரை வைத்து ஒரு படம் இயக்குவதாக முடிவானது. நாட்டாமை பட கதாசிரியர் ஈரோடு சௌந்தர் எழுதி வைத்திருந்த ‘பாமரன்’ என்ற படத்தை முதலில் எடுக்கலாம் என நினைத்தோம். அதற்கான சில மாதங்கள் கதை விவாதம் கூட நடந்தது. ஆனால், எனக்கு கதை பிடிக்கவில்லை, என் உதவியாளர்களுக்கும் பிடிக்கவில்லை.” என்கிறார் விக்ரமன்.
“அப்போது சூர்யவம்சம் கதை நினைவுக்கு வர, அதை மெருகேற்றி, சரத்குமாரையே அப்பா, மகன் கேரக்டரில் நடிக்க வைத்தோம். சரத்குமார், ஆர்.பி.சௌத்ரி இருவருரின் விருப்பமும் அதுவாக இருந்தது. நான் இயக்கிய படங்களில் அதிக நாட்கள் படமாக்கப்பட்ட படங்களில் சூர்யவம்சமும் ஒன்று.”
காரணம், “அப்போது இரட்டையர் சம்பந்தப்பட்ட கிராபிக்ஸ் சீன்களை சிங்கப்பூரில்தான் உருவாக்க வேண்டும். அதற்கு நாட்கள் ஆகும் என்பதால் அப்பா, மகன் இணைந்து நடிக்கும் இரட்டை வேட சீன்களை மாஸ்க் போட்டு எடுத்தோம். அதற்கு நேரம் தேவைப்பட்டது,” என்று குறிப்பிடுகிறார்.
“தமிழில் திரைப்படம் வெள்ளி விழா கண்டது. தெலுங்கில் இந்தக் கதையில் வெங்கடேஷ் நடித்தார். கன்னடத்தில் விஷ்ணுவர்தன் நடித்தார். இந்தியில் நீண்ட காலத்துக்குபின் அமிதாப்பச்சன் அப்பா, மகனாக இரட்டை வேடத்தில் நடிக்க சூரியவன்ஷம் என்ற பெயரில் பெரிய ஹிட்டானது,” என்று கூறினார் விக்ரமன்.
“இன்னும் வெளிப்படையாக சொன்னால் சூர்யவம்சம் படக்கதையை அதிகம் கஷ்டப்பட்டு உருவாக்கவில்லை. 1988-இல் என்னிடம் இருந்த ஸ்கிரிப்டை கொஞ்சம் மாற்றினேன்,” என்றும் விக்ரமன் கூறுகிறார்.
பட மூலாதாரம், Vikraman/Instagram
‘பிரபலமான இட்லி உப்புமா’
”திருநெல்வேலியில் பூர்ணகலா என்ற தியேட்டரில் சூர்யவம்சம் திரைப்படம் சில்வர் ஜூப்ளி கொண்டாடியது. என் சொந்த ஊர் என்பதால் அங்கே நடக்கும் நிகழ்ச்சிகள், விழாக்களுக்கு செல்லும்போது இந்தப் படம் பற்றி பேசும் பெண்கள், சூர்யவம்சம் படத்தில் ‘இட்லி உப்புமா சீன் அருமை. எங்க வீட்டில் அப்படிதான் செய்வோம். நீங்க காப்பி அடித்துவிட்டீர்கள் என்பார்கள்,” என்று கூறுகிறார் இயக்குநர் விக்ரமன்.
“அதேபோல் தாத்தா பேரன் சீன்கள், கிளைமாக்ஸ் காட்சி குறித்து இன்றும் மக்கள் பேசுகிறார்கள். வட இந்திய மக்கள் கூட நான்தான் அந்த திரைப்பட கதாசிரியர் என்பதை அறிந்து ஆர்வமாக பேசிவிட்டு செல்கிறார்கள்,” என்று கூறினார்.
“திரைப்படத்தின் வெற்றிக்கு சரத்குமார் உட்பட பலரின் நடிப்பு காரணம் என்றாலும் தேவயானிக்கும் முக்கிய இடமுண்டு, காதல் கோட்டை திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் அவரை ஒப்பந்தம் செய்தோம்.” என நினைவுகூர்ந்தார் இயக்குநர் விக்ரமன்.
“அப்போது அவருக்கு தமிழ் தெரியாது. ஆனாலும் வசனங்கள் கற்று, தமிழ் அர்த்தம் புரிந்து நடித்தார்,” என்கிறார் அவர்.
“சூர்யவம்சம் வெற்றிக்கு முக்கியமான காரணம், தங்கள் நிஜ வாழ்க்கையுடன் இந்தக் கதையை, கதாபாத்திரங்களை மக்கள் பொருத்திப் பார்த்துக் கொண்டார்கள். ‘நட்சத்திர ஜன்னலில்’ பாடலில் வாழ்க்கையில் வெற்றி பெற்று ஒரு திருமண வீட்டுக்கு வரும் சரத்குமாரைப் பார்த்து, அவரை நிராகரித்த ப்ரியாராமன் வெட்கி தலை குனியும் காட்சிக்கு பல தியேட்டர்களில் அவ்வளவு கைதட்டல். காரணம், காதலில் தோற்றவர்களும் படத்தைக் கொண்டாடினார்கள்.” என்று தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டார் இயக்குநர் விக்ரமன்.

பட மூலாதாரம், Devayani/Facebook
‘சூர்யவம்சத்தை மறக்க மாட்டேன்’
சூர்யவம்சம் திரைப்படத்தின் கதாநாயகி தேவயானி பிபிசி தமிழிடம் பேசுகையில், “என் சினிமா வாழ்க்கையில் சூர்யவம்சத்தை மறக்க மாட்டேன். எனக்கு அப்போது தமிழ் தெரியாது. இந்தியில் வசனங்களை எழுதி வைத்துக்கொண்டு, தமிழ் அர்த்தம் புரிந்து பேசுவேன்.” எனக் கூறுகிறார்.
“இத்தனை ஆண்டுகளை கடந்த நிலையிலும் இன்றும் நான் விழாக்களுக்கு சென்றால் ‘ரோசப்பூ ரோசாப்பூ’ பாடலை ஒலிபரப்பி என்னை வரவேற்கிறார்கள்.”
“சூர்யவம்சம் திரைப்படத்தில் உதவி இயக்குநராக இருந்த ஒருவர் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். நடிகர், நடிகைகளை நன்றாக கவனிப்பார். நடிகர்களின் ‘காஸ்ட்யூம் கன்டினியூட்டி’ வேலைகளை அவர்தான் பார்ப்பார். டிரஸ், வளையல், பொட்டு இதெல்லாம் சரியாக உள்ளதா என பார்ப்பார்.”
“அவ்வப்போது வசனம் சொல்லி கொடுப்பார். அந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு அவரை தெரியும், ஆனாலும், அதிகம் பழக்கம் இல்லை. பிற்காலத்தில் அவர்தான் என் காதல் கணவராக வந்த ராஜகுமாரன். இயக்குநர் விக்ரமனை என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன்,” என்று கூறுகிறார் தேவயானி.
பட மூலாதாரம், SUPER GOOD FLIMS
பிபிசி தமிழிடம் பேசிய சூர்யவம்சம் பட இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார், ”இயக்குநர் விக்ரமனுடன் இணைந்து பணியாற்றுவது தனி அனுபவம். கதை எழுதும்போதே அவர் பாடல்களுக்கான இடம், ஏன் பாடல் வரிகளை எழுதிவிடுவார். ட்யூன் உருவாகும்போது இப்படி வரவேண்டும் என பாடி காண்பிப்பார்.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மு.மேத்தாவை வைத்து ஒரு பாடலை உருவாக்க அமர்ந்தோம். ‘நட்சத்திர ஜன்னலில் வானம் எட்டி பார்க்கிறது. சிறகை விரித்து பறப்போம், நம் உறவில் உலகை அளப்போம்’ என்று முதல் வரி தந்தார். அந்த பாடல் சூப்பர் ஹிட். படத்தில் 4 இடங்களில் வரும் என்பதால் ‘ரோசாப்பூ ரோசப்பூ’ பாடலுக்கு அதிகம் கவனம் கொடுத்தேன். ஹரிஹரன், சுஜாதா பாடிக்கொடுத்தார்கள்.” என்றார்.
“சூர்யவம்சம் படம் எனக்கு தமிழக அரசின் விருதை வாங்கிக் கொடுத்தது. இந்தப் படத்தை முன்னதாக பார்த்த அப்போதைய முதல்வர் கருணாநிதி என்னை அழைத்து பாராட்டினார். குறிப்பாக, ரோசப்பூ பாடலை நினைவுகூர்ந்தார்,” என்று கூறினார் எஸ்.ஏ.ராஜ்குமார்.
‘படம் வெற்றி பெறுமா என்ற சந்தேகம்’
சூர்யவம்சம் படத்தில் உதவி இயக்குநர் ராஜகுமாரன், “முதலில் இந்த படம் வெற்றி பெறுமா என்று சிலர் யோசித்தார்கள். கதை மெதுவாக நகர்ந்ததால் பலருக்குச் சந்தேகம். ஆனால் படம் சூப்பர் ஹிட். முதலில் இந்தப் படம் வெற்றி பெறும் என்று நம்பியவர் அப்போது விநியோகஸ்தராக இருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன். அவர்தான் பிற்காலத்தில் விக்ரமனை வைத்து வானத்தை போல என்ற தனது முதல் படத்தை தயாரித்தார்,” என்று கூறினார்.
சூர்யவம்சம் திரைப்படத்தில் நடித்த நடிகர் ரமேஷ்கண்ணா, “இயக்குநர் விக்ரமன் சினிமாவுக்காக சென்னை வந்து நிறைய கஷ்டப்பட்டார். எல்லோரிடமும் மரியாதையாக பேசுவார். அந்த அனுபவம், அவர் உழைப்புதான் சூர்யவம்சம் வெற்றிக்கு முக்கியமான காரணம். விக்ரமன் இரவு 3 மணிவரை ஸ்கிரிப்ட் எழுதுவார். மக்களின் வாழ்வை, உணர்வு, உறவை அழுத்தமாக காண்பித்தார்,” என்கிறார்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
‘கதைதான் வெற்றிக்கு காரணம்’
சூர்யவம்சம் படத்தின் தயாரிப்பாளரும், இந்தியளவில் பல மொழிகளில் திரைப்படங்களை தயாரித்தவருமான ஆர்.பி.சௌத்ரி, ”அந்தப் படத்தின் வெற்றிக்கு கதைதான் காரணம். அந்த குடும்ப கதை, சீன்கள் மக்களைக் கவர்ந்தது. தமிழில் நான் தயாரித்த முதல் படமான புது வசந்தத்தை விக்ரமன்தான் இயக்கினார். அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்தார். இந்த படமும் ஹிட். சூர்யவம்சம் படம் இன்னும் 30 ஆண்டுகள் ஆனாலும் இப்படியே பேசப்படும். சூப்பர்குட் (தயாரிப்பு நிறுவனம்), விக்ரமன், எஸ்.ஏ.ராஜ்குமார் கூட்டணி செய்த மாஜிக் அது.” என்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு