பட மூலாதாரம், Getty Images
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்
சனிக்கிழமை அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்கின, இதை ஈரானுக்கு எதிரான “பெரிய இராணுவ நடவடிக்கை” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விவரித்தார்.
தாக்குதல்களின் போது, இரானின் உச்ச தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி அலுவலகமும் குறிவைக்கப்பட்டது. அதில், காமனெயி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவிக்க, பின்னர் இரானிய அரசு ஊடகமும் அதனை உறுதிப்படுத்தியது.
இந்தத் தாக்குதல்களுக்குப் பிறகு, இரான் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைக்கத் தொடங்கியுள்ளது.
“பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க கடற்படைத் தளம் தாக்கப்பட்டுள்ளது. இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய பெரிய அளவிலான மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரான் பிராந்தியம் முழுவதும் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது” என்று இரானிய இராணுவம், கூறியது.
இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை ஒரு அறிக்கையில், “அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ‘உண்மையான வாக்குறுதி 4’ நடவடிக்கையின் கீழ் அமெரிக்க தளங்கள் மற்றும் சொத்துகளை குறிவைக்கிறோம்” என்று கூறியது.
அதே நேரத்தில், மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்களுக்கு அமெரிக்கா ஓர் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தோஹா மற்றும் பஹ்ரைனில் உள்ள தனது குடிமக்களை ‘உள்ளேயே பாதுகாப்பாக இருக்க’ அமெரிக்க அரசாங்கம் வலியுறுத்துகிறது” என்று அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்கள்
இதற்கிடையில், இரான் தற்காப்புக்காக அனைத்து இராணுவ வழிகளையும் பயன்படுத்தும் என்று இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறியுள்ளார்.
சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் இராக் போன்ற நாடுகளில் உள்ள தனது சகாக்களை அரக்சி அழைத்துப் பேசியதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
இரான் தனது இறையாண்மையைப் பாதுகாக்க “தன்னுடைய சுய பாதுகாப்புக்கான சட்டப்பூர்வ உரிமையின் கீழ் அதன் அனைத்து தற்காப்பு மற்றும் இராணுவ திறன்களையும்” பயன்படுத்தும் என்று அந்த அறிக்கை இந்த நாடுகளிடம் கூறியது.
அந்த அறிக்கையின்படி, “அமெரிக்காவும், இஸ்ரேலும் இரான் மீதான தாக்குதல்களுக்கு உங்கள் நாட்டிலுள்ள தளவாட வசதிகள் மற்றும் நிலப்பரப்பை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பது” அவர்களின் பொறுப்பு என்பதை அராக்சி இந்த நாடுகளுக்கு “நினைவூட்டினார்”.
இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சியின் இந்த அறிக்கைக்கு முன், கத்தாரின் தலைநகர் தோஹாவில் தாக்குதல்கள் மற்றும் சைரன்களின் சத்தம் கேட்டது.
“நாட்டை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்கள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன.” என்று கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் மேற்கோள் காட்டி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
“அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்பு இரானிய ஏவுகணையை இடைமறித்தது” என்று ஒரு கத்தார் அதிகாரி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
கத்தார் தலைநகரான தோஹாவிற்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளமானது, மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் வான் நடவடிக்கைகளின் தலைமையகமாகும்.

குவைத்தில் ஒரு நெடுஞ்சாலையில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படும் தாக்குதலின் பின்விளைவுகளைக் காட்டும் படங்களை பிபிசி பெற்றுள்ளது, அதில் எரிந்த லாரியும் அடங்கும்.
முன்னதாக, குவைத்தின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கர்னல் சவுத் அப்துல்அஜிஸ் அல்-அத்வான் ஒரு பேஸ்புக் பதிவில், “அலி அல்-சலேம் விமானத் தளம் (அமெரிக்க விமானப்படை இருக்கும் இடம்) பல பாலிஸ்டிக் ஏவுகணைகளால் குறிவைக்கப்பட்டது, ஆனால் குவைத் விமானப் பாதுகாப்புப் படைகள் அவற்றை வெற்றிகரமாகத் தடுத்தன” என்று கூறினார்.
இதற்கிடையில், பஹ்ரைனின் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் அவசர நிலை எச்சரிக்கை பற்றிய தகவலை வெளியிட்டது. பஹ்ரைனும் அதன் குடிமக்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தது.
“அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் ஏவுகணைத் தாக்குதலின் இலக்காக இருக்கிறது” என்று பஹ்ரைனின் தேசிய தகவல் தொடர்பு மையம் தெரிவித்துள்ளது.
“கூடுதல் தகவல்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“குடிமக்கள் அதிகாரிகள் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”
பஹ்ரைனில் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் சேவை மையம் உள்ளது. இது வளைகுடா, செங்கடல், அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகளை கண்காணிக்கிறது.

பஹ்ரைன் மீதான ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களின் அச்சுறுத்தல் காரணமாக குடிமக்களை வெளியேறுமாறு அமெரிக்க தூதரகம் முன்னர் எச்சரித்திருந்தாலும், அமெரிக்க இராணுவத்திடமிருந்து எந்தக் கருத்தும் இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “இரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகளின் தாக்குதலால்” நாடு பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
“ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அந்த ஏவுகணைகளை திறம்பட எதிர்கொண்டு பல ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்தன.”
“அபுதாபியின் குடியிருப்புப் பகுதியில் ஏவுகணை சிதைவுகள் விழுந்ததால், சில சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டது மற்றும் ஒரு ஆசிய நாட்டவரின் உயிரிழந்தார்” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதலை கடுமையாகக் கண்டித்த ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம், இது ஆபத்தை தூண்டும் செயல் என்றும் இதற்குப் பதிலடி கொடுக்கும் உரிமை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அபுதாபியின் தெற்கே அல் தஃப்ரா அமெரிக்க விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. அந்த தளத்திலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் விமானப்படையுடன் இணைந்து அமெரிக்க விமானப்படை செயல்படுகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ தளங்கள் எங்கே உள்ளன?
பட மூலாதாரம், Getty Images
மத்திய கிழக்கில் அமெரிக்கா பல இராணுவ தளங்களைக் கொண்டுள்ளது. வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் பஹ்ரைன் ஆகும்.
கத்தாரின் தலைநகரான தோஹாவிற்கு அருகிலுள்ள அல் உதெய்த் விமானத் தளம், மத்திய கிழக்கில் அமெரிக்க மத்திய கட்டளை மையத்தின் விமான நடவடிக்கைகளின் தலைமையகமாகும். இது மத்திய கிழக்கில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க விமானப்படைத் தளமாகும். சுமார் 10 ஆயிரம் அமெரிக்க வீரர்கள் இங்கு உள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அல் தஃப்ரா விமானப்படைத் தளமும் அமெரிக்க விமானப்படைக்கு ஒரு முக்கியமான தளமாகும்.
துபாயில் உள்ள ஜெபல் அலி துறைமுகம் ஒரு அதிகாரப்பூர்வ அமெரிக்க இராணுவத் தளம் அல்ல, ஆனால் பிராந்தியத்தில் முக்கிய அமெரிக்க கடற்படைத் துறைமுகமாகும்.
இராக்கில் உள்ள ஐன் அல்-அசாத் விமானப்படைத் தளத்தில் அமெரிக்கா தனது இருப்பைப் பேணுகிறது.
வடக்கு இராக்கில் உள்ள எர்பில் விமானத் தளமும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஒரு முக்கிய அமெரிக்க தளமாகும்.
சௌதி அரேபியாவில், 2,300க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகள் சௌதி அரசாங்கத்துடன் இணைந்து வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பை வழங்குகின்றன. பிரின்ஸ் சுல்தான் விமானப்படைத் தளம் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய இடமாகும்.
ஜோர்டானில் உள்ள முவாஃபாக் அல் சால்டி விமானப்படைத் தளம் லெவண்ட் பிராந்தியத்தில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க விமானப்படை மையத்தின் 332வது விமானப் பயணப் பிரிவுக்கு முக்கியமானது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு