டச்சில் இருந்த பேட்டர்கள் அவுட் ஆனதால் இந்திய அணியின் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 5 ஓவர்களை திலக் வர்மாவும் ஹர்திக் பாண்ட்யாவும் கையிலெடுத்தனர். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை சேர்த்தது இந்திய அணி. ஹர்திக்கும் திலக்கும் யார்க்கிங் லெந்த் பந்துகளையும் ஷார்ட் பிட்ச் டெலிவரிக்களையும் ஜிம்பாப்வே வேகங்கள் வீசினர். எதுவும் இருவரையும் கட்டுப்படுத்தவில்லை. சிக்சர்கள் சரளமாக பறந்தன. திலக் வர்மா 16 பந்துகளில் 44 ரன்களையும் ஹர்திக் 23 பந்துகளில் 50 ரன்களையும் சேர்த்திருந்தனர். இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 256 ரன்களை எடுத்தது.
ஜிம்பாப்வேவுக்கு 257 என்கிற இமாலய டார்கெட். வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான கடந்த போட்டியிலும் ஜிம்பாப்வேவுக்கு இப்படியொரு டார்கெட்தான். ஆனால், அவசரப்பட்டு ஆடி 18 வது ஓவரில் 147 ரன்களிலேயே ஆல் அவுட் ஆகியிருப்பர். வெல்ல வேண்டும் என்பதை விட கடந்த போட்டியில் செய்த தவறுகளை இந்தப் போட்டியில் செய்துவிடக்கூடாது என்பதில் மட்டுமே ஜிம்பாப்வே கவனமாக இருந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை விடவே இல்லை. ஆனால், 44 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தனர். ஓப்பனர்கள் மருமனியும் பென்னட்டும் நின்று ஆடியிருந்தனர். பவர்ப்ளேக்கு பிறகு வேகமெடுக்க நினைத்தனர். ஆனால், அப்போதே ரன்ரேட் 15 க்கு மேல் சென்றுவிட்டது. மருமனி அக்சர் படேலின் பந்தில் ஆட்டமிழந்தார். ராசாவும் பென்னட்டும் முடிந்தளவுக்கு அதிரடியாக ஆடி தோல்வி வித்தியாசத்தை குறைக்க நினைத்தனர். சிவம் துபேவின் ஒரே ஓவரில் 26 ரன்களெல்லாம் வந்தது. ஆனால், எட்ட வேண்டிய ஸ்கோர் இமாலயம் என்பதால் இதெல்லாம் போதவில்லை. ராசா அர்ஷ்தீப் சிங்கின் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். பென்னட் கடைசி வரை நின்று 97 ரன்களை சேர்த்தார். வெற்றிக்கு இது போதவில்லை. இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியை வென்றதன் மூலம் இந்திய அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. வெஸ்ட் இண்டீஸூக்கு எதிரான அடுத்த போட்டியும் இந்தியாவுக்கு Do or Die போட்டிதான்.