டயாபட்டீஸை உறுதிசெய்யும் HbA1c டெஸ்ட்; ரிசல்ட் தவறாகலாம் – எச்சரிக்கும் ஆய்வும் மருத்துவ விளக்கமும்!

Share

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மற்றும் மெட்ராஸ் நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளை (MDRF) இணைந்து நடத்திய ICMR-INDIAB ஆய்வின்படி, இந்தியாவில் சர்க்கரைநோயைக் கண்டறிய ஹெச்பிஏ1சி (HbA1c)  எனப்படும் மூன்று மாத சராசரி மற்றும் வெறும் வயிற்றுச் சர்க்கரை பரிசோதனையை (Fasting) மட்டும் நம்பியிருப்பது, ஒருவருக்கு நோய் இருப்பதைக் கண்டறிவதில் 2 முதல் 4 ஆண்டுகள் வரை தாமதத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஹெச்பிஏ1சி பரிசோதனை மூலம் கிட்டத்தட்ட 50 சதவிகித சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகிறது.

இந்தியர்களின் உடல்வாகு மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென உயரும் தன்மை (Postprandial spikes) அதிகம் இருப்பதால், வெறும் ஹெச்பிஏ1சி பரிசோதனை மூலம் கிட்டத்தட்ட 50 சதவிகித  சர்க்கரை நோயாளிகளைக் கண்டறிய முடியாமல் போகிறது. எனவே, குளுக்கோஸ் கரைசல் குடித்த 2 மணி நேரம் கழித்து எடுக்கப்படும் OGTT (Oral Glucose Tolerance Test) பரிசோதனை மட்டுமே இந்தியர்களுக்கச் சர்க்கரைநோயைத் துல்லியமாகவும் ஆரம்ப காலத்திலும் கண்டறிய உதவும் என்று இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.  

சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் தொடங்கி, சர்க்கரைநோய்க்கு முந்தைய ப்ரீடயாபட்டீஸ்  நிலையில் இருக்கிறோமா, சர்க்கரைநோய் கட்டுப்பாட்டில் இருக்கிறதா என சகலத்தையும் கண்டறிய பலரும் பல வருடங்களாகப்  பின்பற்றுவது ஹெச்பிஏ1சி ( HbA1c ) என்ற சோதனையைத்தான். இந்நிலையில், ஹெச்பிஏ1சி சோதனையானது, சர்க்கரைநோயைக் கண்டறிவதில் தாமதத்தை ஏற்படுத்தும் என்ற செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது… சர்க்கரைநோயை வேறு எப்படித்தான் உறுதிசெய்வது…. எதை நம்புவது, எதை விடுப்பது….  எல்லாக் கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் சண்முகம்.

நீரிழிவுநோய் சிகிச்சை மருத்துவர் சண்முகம் | சென்னை

அதென்ன  ஹெச்பிஏ1சி (HbA1c)?

 ”சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதில் மிக முக்கியமான டெஸ்ட் ஹெச்பிஏ1சி என்பது.  ஆர்பிசி (RBC) எனப்படும் ரத்தச் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அணுக்கள் இருக்கும். அதில் சர்க்கரையானது எந்த அளவுக்கு செரிமானமாகியிருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட் இது.  அதாவது ஹீமோகுளோபினில் சர்க்கரை எவ்வளவு படிந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் டெஸ்ட். இப்படி சர்க்கரை படிவதற்கு 2 முதல் 3 மாதங்கள் ஆகும். அதனால்தான் இதை 3 மாதங்களுக்கொரு முறை செய்து பார்க்கிறோம்.

ஹீமோகுளோபினின் சராசரி ஆயுட்காலம் 120 நாள்கள். அதன் பிறகு அவை அழிந்துவிடும். ஒருவேளை இந்த ஆயுட்காலமானது 120 நாள்களைத் தாண்டிப் போனால், ஹீமோகுளோபினில் சர்க்கரை படிவதும் அதிகரிக்கும். அதனால் ஹெச்பிஏ1சி அளவானது சற்று அதிகமாகக் காட்டலாம். அதுவே ஹீமோகுளோபின் 120 நாள்களுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டால்,  ஹெச்பிஏ1சி அளவானது சற்று குறைவாகக் காட்டலாம்.

ஹீமோகுளோபின் 120 நாள்களுக்கு முன்னதாகவே அழிந்துவிட்டால், ஹெச்பிஏ1சி அளவானது சற்று குறைவாகக் காட்டலாம்.

தொழுநோய் போன்ற சில நோய்களுக்குப் பயன்படுத்தப்படுகிற மருந்துகளும் ஹீமோகுளோபினில் சர்க்கரை படியும்  விகிதத்தை மாற்றும். அதனாலும் ஹெச்பிஏ1சி அளவு குறைவாகக் காட்டலாம்.  ஹீமோகுளோபின் அளவுக்கான வரையறையே நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம் மாறும் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஹெச்பிஏ1சி… எது நார்மல்?

ஹெச்பிஏ1சி அளவானது 5.6 என்ற அளவில் இருப்பதுதான் நார்மல். 6.5-க்கு மேல் போனால் நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்படும். 40 வயதுக்குக் குறைவானவர்களாக இருந்து நீரிழிவு உறுதிசெய்யப்பட்டால், அவர்கள், ஹெச்பிஏ1சி அளவை 6.5 என்ற அளவிலேயே கட்டுப்பாடாக வைத்துக்கொண்டால், பின்னாளில் பாதிப்புகள் வராமல் தடுக்க முடியும். அதுவே 60 வயதுக்கு மேலானவர்கள், இதய பாதிப்பும் இருக்கிறது என்றால், ஹெச்பிஏ1சி அளவை 7-க்கு மேல் போகாமல் வைத்துக்கொள்ளலாம். 70 ப்ளஸ் வயதினர் என்றால், அவர்களுக்கு வாழ்நாளை விட, வாழும் நாள்களின் தரமே முக்கியம் என்பதால், 7.5 என்ற அளவில்  வைத்துக்கொண்டாலே போதுமானது. எனவே, ஹெச்பிஏ1சி டெஸ்ட்டானது சர்க்கரைநோயைக் கண்டுபிடிப்பதற்கு மட்டுமன்றி, அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மிக முக்கியமான ஒரு டெஸ்ட்.

ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகவும் சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

ஸ்ட்ரெஸ்ஸாலும் கூடலாம்!

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் பாதித்து சிலர், எமர்ஜென்சியாக மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்படுவதுண்டு. அந்நிலையில அவர்களுக்கு சர்க்கரை அளவு அதிகமிருப்பது தெரியவரலாம். அவர்களுக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, மருத்துவமனையில் அட்மிட் ஆனநிலையில் அது அதிகரித்திருக்கிறதா அல்லது ஹார்ட் அட்டாக் அல்லது ஸ்ட்ரோக்  காரணமாக எகிறியிருக்கிறதா என்பதை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் தெரிந்துகொள்ளலாம்.  அதாவது ஹெச்பிஏ1சியில் அதிகமாக இருந்தால், அந்த நபருக்கு ஏற்கெனவே சர்க்கரைநோய் இருந்து, கண்டுபிடிக்காமல் விட்டிருக்கிறார் என தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை ஹெச்பிஏ1சி டெஸ்ட்டில் நார்மலாக இருந்தால், தற்போதைய மருத்துவநிலை, அதன் ஸ்ட்ரெஸ் காரணமாக அதிகரித்திருப்பதாகப் புரிந்துகொள்ளலாம். தற்போதைய மருத்துவநிலை குணமானதும், சர்க்கரை அளவும் நார்மலுக்கு வந்துவிடும்.

ஸ்ட்ரெஸ்ஸின் காரணமாகவும் சிலருக்கு ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். அதற்கு ‘ஸ்ட்ரெஸ் ஹைப்பர்கிளைசீமியா’ (Stress hyperglycemia ) என்று பெயர். அவர்களை நீரிழிவாளர்கள் என்று சொல்ல மாட்டோம்.

ஹெச்பிஏ1சி… இதற்கும் முக்கியம்!

ஹெச்பிஏ1சி என்பது 24 மணி நேரமும் உங்களுடைய ரத்தச் சர்க்கரை அளவு எப்படியிருக்கிறது என்பதைக் கண்காணிக்கும். சிலர், மருத்துவரைப் பார்க்க வேண்டிய தேதிக்கு ஒரு வாரம், பத்து நாள்கள் முன்பிலிருந்து உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் கட்டுப்பாடாக இருப்பார்கள். ஃபாஸ்டிங், பிபி டெஸ்ட்டுகளை மட்டும் நம்பாமல், ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யும்போது அவர்களது உண்மையான நிலையைக் காட்டிக் கொடுத்துவிடும். 

சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும்.

சிலருக்கு ஹெச்பிஏ1சி கட்டுப்பாட்டில் இருக்கும். ஃபாஸ்ட்டிங், பிபியில் அதிகமாக காட்டும். அன்றைய தினம் அவர்கள் இனிப்பு சாப்பிட்டிருக்கலாம் அல்லது திடீரென ஏதாவது இன்ஃபெக்ஷன் காரணமாக  சர்க்கரை அளவு அதிகரித்திருக்கலாம். எனவே, ஹெச்பிஏ1சி அளவை வைத்து, சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா இல்லையா என தெரிந்துகொள்ளலாம்.

சர்க்கரைநோயைக் கண்டறிய எதுதான் சரியான டெஸ்ட்?

சர்க்கரைநோயை பல விதமாக டெஸ்ட் செய்யலாம். ஒருவருக்கு சர்க்கரைநோய் இருக்கிறதா என்பதைக் கண்டறிவதில் ஹெச்பிஏ1சி  டெஸ்ட் துல்லியமாக இருக்காது என்கிறது மேற்குறிப்பிட்ட அறிக்கை. பொதுவாக மருத்துவர்கள், ஒருவருக்கு டயாபட்டீஸ் இருப்பதைக் கண்டறியவும், கண்டுபிடிக்கப்பட்ட பின் ரத்தச் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதைக் கண்டறியவும் ஹெச்பிஏ1சி டெஸ்ட் செய்யச் சொல்வார்கள். எந்தக் காரணத்துக்காக இருந்தாலும், இன்னொரு பக்கம் மருத்துவர்கள், சம்பந்தப்பட்ட நோயாளியின் ஹீமோகுளோபின் அளவையும் கருத்தில் கொண்டே, சிகிச்சையைப் பரிந்துரைப்போம். அதே சமயம், ஒரே ஒரு டெஸ்ட்டை மட்டும் வைத்து சர்க்கரை நோயைக் கண்டறிவதை மருத்துவர்களும் ஏற்றுக்கொள்வதில்லை.

ராண்டம் டெஸ்ட்டில் ஒருவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், அவருக்கு ஹெச்பிஏ1சி டெஸ்ட் எடுத்து அதை உறுதிபடுத்துவோம்.

ஒருவருக்கு நீரிழிவு உறுதியானால் அவர் வாழ்நாள் முழுவதும் நீரிழிவாளராகவே கருதப்படுவார். அந்த உண்மை, சம்பந்தப்பட்ட நபருக்கு அதிர்ச்சியை, மன உளைச்சலைக் கொடுக்கலாம். எனவே, ராண்டமாக (Random) எடுத்துப் பார்க்கும் சுகர் டெஸ்ட்,  ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ (Oral Glucose Tolerance Test ) போன்றவற்றையும் எடுக்கச் சொல்வோம். இரவு முழுவதும் எதுவும் சாப்பிடாமல், காலையில் வெறும் வயிற்றில் ஒருமுறை டெஸ்ட், பிறகு 75 கிராம் குளுக்கோஸை குடிக்கச் சொல்லி 2 மணி நேரம் கழித்து ஒரு முறை (Oral Glucose Tolerance Test )  என இரண்டு டெஸ்ட் எடுப்போம். வெறும் வயிற்றில் 126-க்கு மேல் இருந்தாலோ, குளுக்கோஸ் குடித்து 2 மணி நேரத்துக்குப் பிறகு 200-க்கு மேல் இருந்தாலோ நீரிழிவு உறுதிசெய்யப்படும்.  சர்வதேச அளவில் ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’  என்பது சட்டப்படி ஏற்றுக்கொள்ளப்பட்ட சோதனையும்கூட.  ஒருவேளை ராண்டம் டெஸ்ட்டில் ஒருவருக்கு சர்க்கரை அளவு அதிகமாகக் காட்டினால், அவருக்கு ஹெச்பிஏ1சி  டெஸ்ட் எடுத்து அதை உறுதிபடுத்துவோம்.

உங்களுக்கு சர்க்கரைநோய் ‘ஆன் த வே’யில் இருக்கிறதா?

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டீஸை உறுதிசெய்ய அமெரிக்கன் டயாபட்டிக் அசோசியேஷன், ஹெச்பிஏ1சி  டெஸ்ட்டையே பரிந்துரைக்கிறார்கள். 5.7 முதல் 6.4 வரை இருந்தால் ப்ரீடாயபட்டிக் என்றும், 5.7-க்கு கீழ் இருந்தால் சர்க்கரைநோய் இல்லை என உறுதிசெய்கிறார்கள். ஆனால்,  ப்ரீடயாபட்டீஸை உறுதிசெய்ய  ‘ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ தான் சிறந்தது.

சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையான ப்ரீ டயாபட்டீஸை உறுதிசெய்ய அமெரிக்கன் டயாபட்டிக் அசோசியேஷன், ஹெச்பிஏ1சி டெஸ்ட்டையே பரிந்துரைக்கிறார்கள்.

ஹீமோகுளோபின் குறைவாக இருப்பவர்கள், ஹெச்பிஏ1சி  டெஸ்ட் காட்டும் அளவை அப்படியே நம்ப முடியாது. அவர்கள் முதலில் ஹீமோகுளோபின் ஏன் குறைகிறது என பார்க்க வேண்டும். ஹீமோகுளோபின் தொடர்பான நோய்களை ஹீமோகுளோபினோபதீஸ் (Hemoglobinopathies ) என்று சொல்வோம். இதில் சில பிரச்னைகளில் ஹெச்பிஏ1சி அதிகரிக்கும், சிலவற்றில் குறையும். ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் மூலமே அதை உறுதிசெய்ய முடியும். எனவே, சர்க்கரைநோய் இருக்கிறதா எனத் தெரிந்துகொள்ள முதல்முறை டெஸ்ட் எடுப்பவர்கள், ஹெச்பிஏ1சி  டெஸ்ட்டை மட்டுமே நம்பி முடிவுக்கு வர வேண்டியதில்லை…” என்கிறார் டாக்டர் சண்முகம்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com