Doctor Vikatan: உடலில் பல இடங்களிலும் வலி… கெட்ட கொழுப்பு அதிகமானதன் அறிகுறி என்பது உண்மையா?

Share

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக உடல் வலி இருக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமானால், இப்படித்தான் உடலின் பல பகுதிகளிலும் வலி வரும் என்று கேள்விப்பட்டேன். அதுஉண்மையா… கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதை வேறு அறிகுறிகள் மூலம் உணர முடியுமா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த நீரிழிவு மருத்துவர் சஃபி 

நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி
நீரிழிவு சிறப்பு மருத்துவர் சஃபி

இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு முன், கொழுப்பு குறித்த சில விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டியதும் அவசியமாகிறது.

கொலஸ்ட்ராலில் பல வகைகள் உள்ளன. இதில் சில கொழுப்புகள், புரத வளர்சிதை மாற்றம் (Protein metabolism) போன்ற உடல் இயக்கங்களுக்கு அவசியமானவை. ஆனால், சில கொழுப்புகள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடியவை.

ரத்தத்தில் கொழுப்பு அதிகரிக்கும்போது, ரத்தத்தின் அடர்த்தி (Density) அதிகமாகிறது. இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் தாமதப்படும்போது, கை, கால் விரல்கள் மற்றும் பாதங்களில் லேசான வலி அல்லது சுருக்கென்று குத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.

பெரிய ரத்த நாளங்களின் உள்சுவர்களில் கொழுப்பு படிவதால் ரத்த ஓட்டம் தடைப்படுகிறது. இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றில் மிக மோசதானது நெஞ்சுவலி. 

ஆன்ஜினா (Angina) எனப்படும் இந்த நெஞ்சு வலி, இதயத்திற்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைப்படுவதாலும் வரும்… இதயத் தமனிகளில் கொழுப்பு படிவங்கள் (Plaque) உருவாவதாலும் ரத்த ஓட்டம் தடைப்பட்டு நெஞ்சுவலி  ஏற்படலாம்.

இதன் விளைவாக தோள்பட்டை வலி, பின் கழுத்து வலி, தாடை மற்றும் வாய்ப் பகுதிகளில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் கேட்டதுபோல, கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட வலிகள் தவிர, கொலஸ்ட்ரால் அதிகரிப்பது என்பது வேறு சிலஅறிகுறிகளையும் காட்டலாம். உதாரணத்துக்கு, கண்களுக்குக் கீழே வெள்ளையாகப் படிதல் (Xanthelasma), தேவையற்ற இடங்களில் கொழுப்பு சேருவதால் உடல் எடை அதிகரித்தல், எப்போதும் சோர்வாக உணருதல் (Fatigue) மற்றும் சுறுசுறுப்பின்மை, மன அழுத்தம் மற்றும் மூளை சுறுசுறுப்பின்றி மந்தமாக இருத்தல் போன்றவை கொலஸ்ட்ரால் அதிகரித்திருப்பதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

இதைத் தெரிந்துகொள்ள, வெறும் ‘டோட்டல் கொலஸ்ட்ரால்’ (Total cholesterol) பரிசோதனை மட்டும் செய்யாமல், குறைந்தது 8 முதல் 10 மணிநேரம் வரை உணவு உட்கொள்ளாமல் (Fasting) இருந்து ‘ஃபாஸ்டிங் லிப்பிட் புரொஃபைல்’ (Fasting Lipid Profile) பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை முடிவுகளுடன் தகுந்த மருத்துவரை அணுகி, உங்கள் உடலுக்குத் தேவையான மருந்துகளை எடுத்துக்கொள்வது அவசியம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com