இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார், சைத்ரா, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடித்திருக்கும் ‘மை லார்ட்’ திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வருகிறது.
இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் பாலா, மாரி செல்வராஜ், த.செ. ஞானவேல், பிரேம்குமார், விஜய் மில்டன், ரவிக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.
மேடையில் நடிகர் சசிகுமார் பேசுகையில், “‘மை லார்ட்’ திரைப்படம் ஒரு கோர்ட் ரூம் டிராமா கிடையாது. ‘முத்துச்சிற்பி’ங்கிற கடைகோடி மனிதனைக் குறிக்கக்கூடிய சொல்லுதான் ‘மை லார்ட்’.
இதுதான் இந்த டைட்டிலுக்கான விளக்கம். இந்த நிகழ்வுக்கு இயக்குநர் பாலா அண்ணனை அழைப்பதாக ராஜு முருகன் சொன்னார். அவர் வரமாட்டார், அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம்னு நான் சொன்னேன்.
ஆனால், ராஜு முருகன் சொன்னது மாதிரியே கூப்பிட்டு வந்துட்டார். இங்கு வந்து எங்களை வாழ்த்தினதுக்கும் ரொம்ப நன்றி.
இந்தப் படத்துல குரு சோமசுந்தரம் நா. கதிர்வேலன்னு ஒரு பத்திரிகையாளர் கேரக்டர்ல நடிச்சிருக்கார். அவருடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி. ராஜு முருகன் இந்தக் கதையைச் சொல்லும்போது ‘எனக்காக எந்தக் கதையையும் மாத்தாதீங்க.
நீங்க நினைச்சதை கடைசி வரைக்கும் எடுத்திடுங்க’னு சொன்னேன். அப்படித்தான் இந்தக் கதை இவ்வளவு தூரம் வந்திருக்கு. இப்படத்தின் தயாரிப்பாளர், ‘நான் ராஜு முருகனோட ஒரு படம் பண்ணினேன்.
ஆனால், அந்தப் படம் தோத்துடுச்சு. அவர் நல்லவர். அவர் ஜெயிக்கணும்’னு சொன்னார். ராஜு முருகன் மாதிரியான ஒரு இயக்குநர் தோல்வியடையவே கூடாது. அவர் ஜெயிக்கிறதுக்கு என்னால முடிஞ்ச விஷயங்களை நான் செய்வேன்” என்றார்.

மேலும், “நான் ராஜு முருகனோட படம் பண்ணப் போறேன்னு சொன்னதுக்குப் பிறகு என்னைச் சுத்தி இருந்தவங்க, அவரு ஒரு சைக்கோனு சொன்னாங்க. அப்புறம்தான் தரமான படங்களைக் கொடுக்கிறதுல சைக்கோ அவர்னு தெரிஞ்சது.
இந்தப் படம் ஒரு சமயத்துல ஷூட்டிங் தடைப்படும் சூழலுக்குப் போயிடுச்சு. ஒரு நடிகர் தவறாகப் புரிஞ்சுக்கிட்டு நடிக்க வரல. அப்போதான் குரு சோமசுந்தரத்தை நடிக்கக் கூப்பிடச் சொன்னேன்.
அவர் ஒரு கதையைப் படிச்சிட்டு, பத்து நாள் அவருக்குள்ள ஓட்டிப் பார்த்துட்டுதான் முடிவு சொல்லுவார்னு ராஜு முருகன் சொன்னார். ஆனால், இந்தப் படத்துக்கு அவர் கதையைக்கூடக் கேட்கல. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துதான் அனைத்தையும் கேட்டார்.” எனப் பேசினார்.