இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் நீண்ட நாள்களாக உலாவிக்கொண்டிருந்த, `அடுத்த ஒருநாள் அணி கேப்டன் கில்” என்ற பேச்சை உறுதிப்படுத்தி ரோஹித்தின் கேப்டன்சிக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது அஜித் அகர்கார் தலைமையிலான தேர்வுக்குழு.
மார்ச்சில் இந்திய அணிக்கு சாம்பியன்ஸ் டிராபி வென்று கொடுத்த ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கேப்டன் பதவி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் வசம் செல்லப்போகிறது என்ற பேச்சு அடிப்பட்டபோதே, ஐ.பி.எல் பாதியில் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் ரோஹித்.

அவ்வாறே, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாகவும், பேட்டிங்கில் கோலியின் இடத்திலும் களமிறங்கிய கில் அந்தத் தொடரை சமன் செய்து நற்பெயரை வாங்கினார்.
அதைத்தொடர்ந்து, ஒருநாள் அணிக்கும் கில்தான் அடுத்த கேப்டன் என்ற பேச்சு எழுந்தது.
இத்தகைய சூழலில்தான், ஆஸ்திரேலியாவுக்கெதிராக அக்டோபர் 19-ம் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை செய்தியாளர்கள் சந்திப்பில் வெளியிட்டார் இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கார்.
அதில், ஒருநாள் அணியில் சுப்மன் கில்லுக்கு கேப்டன் பதவியும், சாம்பியன்ஸ் டிராபியில் கில்லுக்கு வழங்கப்பட்டிருந்த துணைக் கேப்டன் பதவி ஸ்ரேயஸ் ஐயருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.