சுற்றுப்பயணத்தின் முதலாவதாக தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தொகுதி மக்களிடையே பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “ஆண்டிபட்டி தொகுதி இரண்டு முதலமைச்சர்களை உருவாக்கிய தொகுதி. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் நின்று வெற்றி பெற்ற ஒரே தொகுதி என்றால் அது ஆண்டிபட்டிதான். விவசாயிகள் நிறைந்த தொகுதி.
திமுக ஆட்சிக்கு வந்து 51 மாதமாகிறது இந்த தொகுதிக்கு ஏதாவது திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களா? ஆனால் அதிமுக அப்படியல்ல. 2021ல் விவசாயிகளுக்காக பயிர்க் கடன் ரத்து செய்திருக்கிறோம், சொட்டு நீர்ப் பாசனத்திற்கு 75 சதவீத மானியம் கொடுத்தோம், டிராக்டர் வாங்குவதற்கு 50 சதவீதம் மானியம், 24 மணி நேரம் மோட்டர் இயக்குவதற்கு மும்முனை மின்சாரம் கொடுத்தோம்.
தேனியின் மக்களின் முக்கிய ஆதாரமாக இருக்கக்கூடிய முல்லை பெரியாறு அணையின் நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் சென்று சட்ட போராட்டம் நடத்தி 136 அடியிலிருந்து 142 அடி வரை அணையில் நீரைத் தேக்கிக் கொள்ளலாம் என்றும் அணையைப் பலப்படுத்திய பிறகு 152 அடி வரை அளவை உயர்த்திக் கொள்ளலாம் என்றும் ஆணை வாங்கினார்.

அதோடு 142 அடி வரை முல்லை பெரியாறு அணையில் நீரைத் தேக்கிக் காட்டியவர் ஜெயலலிதா. நான் முதலமைச்சராக இருந்த போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அணையைப் பலப்படுத்துவதற்குப் பக்கத்தில் உள்ள பேபி அணை மற்றும் தடுப்புச் சுவர்களைப் பலப்படுத்துவதற்கான உபகரணங்களைக் கொண்டு செல்வதற்கு மரங்களை அகற்ற வேண்டும் என்றார்கள். மரங்களை அகற்றுவதற்கான வேலைகளைச் செய்தபோது கேரளா அதை நிறுத்தியது.