மீளும் வழி என்ன?
ஆட்டத்தில் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ அவரவர் தங்களின் பங்களிப்பை செலுத்துவதை போலவே, ஃபீல்டராக அனைவருமே சிறப்பாகச் செயல்பட வேண்டியது கட்டாயம். பெங்களூரு டெஸ்டில் அத்தனை ஃபீல்டிங் மிஸ்டேக். தற்போதைய இந்திய டெஸ்ட் அணியில் கோலி, ஜடேஜாவைத் தவிர வேறு யாரும் களத்தில் பீல்டிங்கில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகத் தெரியவில்லை. வரக்கூடிய காலங்களில் இந்திய டெஸ்ட் அணியில் ஃபீல்டிங் வெற்றிடத்தை நிரப்பவில்லையென்றால் வெற்றிபெறுவது நிச்சயமாக எளிதாக இருக்காது.

அணியின் வெற்றிக்கு சீனியர், ஜூனியர் வீரர்கள் என்பதையெல்லாம் விட ஃபெர்பாமென்ஸ் தான் முக்கியம். மேலும், ரோஹித் கேப்டன்சியில் இந்திய அணி உலகக் கோப்பை உட்பட பல்வேறு வெற்றிகளைக் குவித்தாலும், களத்தில் அவர் உட்பட மற்ற வீரர்கள் கேட்ச் மிஸ் செய்வது உள்ளிட்ட ஃபீல்டிங் மிஸ்டேக் செய்யும்போது தனது முகத்தில் அவர் வெளிப்படுத்தும் சின்னச் சின்ன விரக்தியும் அணியின் சூழலை நிச்சயம் பாதிக்கும். அணிக்குள் அதிரடி முடிவுகளை எடுக்காமல் வெற்றி என்பது சாத்தியமில்லை.
பொதுவாக புதிய பயிற்சியாளர் அணிக்குள் வரும் போது, புதிய முயற்சிகள் செய்யப்படும். அதுமாதிரி புதிய முயற்சிகள் செய்யப்பட்டு, அதன் முலம் முடிவுகளில் பாதிப்புகள் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் அதில் இருந்து விரைந்து முன்னேறுவது முக்கியம். காரணம் நடந்து முடிந்த டெஸ்ட் போட்டி என்பது தனி போட்டி கிடையாது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அங்கம். ஒரு தோல்வியும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இனிவரும் போட்டிகளை இந்திய அணி எப்படி எதிர்கொள்ளப்போகிறது, எந்த மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.!