கும்பகோணத்தில் அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்களும் ஆண்களும் கலந்து கொண்டதுடன் உடலுக்கு நன்மை தரக்கூடிய, அதே நேரம் சுவையான நூற்றுக்கும் மேற்பட்ட பாரம்பர்ய உணவுகளைக் காட்சிப்படுத்தினர்.

தமிழகம் முழுவதும் பரவலாக சமைக்கப்படும் பாரம்பர்ய, சத்தான, ஆரோக்கியம் தரக்கூடிய உணவுகளை பிரபலப்படுத்தும் வகையில் அவள் விகடன் சார்பில் சமையல் சூப்பர் ஸ்டார் போட்டி தமிழகம் முழுவதும் 11 ஊர்களில் நடத்தப்பட்டு வருகிறது. மதுரை, திருச்சி, கோவை, திருநெல்வேலியை தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், இதயா கல்லூரியில் நேற்று இப்போட்டி நடைபெற்றது. சமையல் திறமையை நிரூபிக்கக் கூடிய சவாலான இந்த மேடையில் கும்பகோணம் மற்றுமன்றி அதைச் சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
சமையலில் பெண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என கெத்து காட்டும் விதமாக ஆண்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இளம் வயதினர் தொடங்கி முதியவர்கள் வரை எல்லா வயதுகளிலும் போட்டியாளர்கள் இடம்பெற்றனர்.
ஆரோக்கிய சமையல், பாரம்பர்ய சமையல், குடும்பத்தில் வழி வழியாகப் பின்பற்றப்பட்டு வரும் சமையல், வட்டார சிறப்பு சமையல் என நான்கு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்றவர்கள் முதல் சுற்று போட்டிக்கு, வீட்டிலேயே உணவு சமைத்து எடுத்து வந்து காட்சிப்படுத்தியிருந்தனர்.

அரேபியன் டிஷ் முதல் கும்பகோணம் கடப்பா வரை நூற்றுக்கும் மேற்பட்ட உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன. பீட்ரூட் சாறு கலந்து செய்யப்பட்ட அசோகா அல்வா, பனங்கிழங்கு பாயசம், சக்கரவள்ளிக் கிழங்கு கட்லெட், கும்பகோணம் கடப்பா, ஹோம் மேட் பீட்சா, வாழைக்காய் கோலா உருண்டை, வெந்தயக்களி, பருத்திப் பால் சாதம், அஞ்சுகறி ரைஸ், மரவள்ளிக் கிழங்கு அடை, பரங்கிக்காய் கூட்டு, கோதுமை ஜாலூர், உளுந்து சோறு, வெந்தய சாதம், சிக்கன் கோலா உருண்டை, ரோஹன் கோஸ், முருங்கை கீரை இடியாப்பம், கேரட் இடியாப்பம், சிக்கன் – பிரட் சேர்த்து செய்யப்பட்ட கேண்டி சிக்கன், நெல்லிக்காய் லட்டு, ரஸ்க் நட்ஸ், இளநீர் இட்லி உள்ளிட்ட ஏராளமான உணவுகள் போட்டியில் நாவூற வைத்தன.
கருவாட்டு பத்தியக் குழம்பு குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு நலன் தரக்கூடியது; வெந்தயக்களி வெயிலால் ஏற்படும் உடல் சூட்டுக்கு சிறந்தது; திருமணமான புது மாப்பிள்ளை, மனைவியின் வீட்டிற்கு முதல் முறை வரும்போது பரிமாறக் கூடிய அஞ்சு கறி ரைஸ் உடலுக்குத் தேவையான சத்தை தரும்; பரங்கிக்காய் கூட்டு பெண்களுக்கான மாதவிடாய் பிரச்னையை தீர்க்கும், உளுந்து சோறு இடுப்பு வலியை தீர்ப்பதுடன் எலும்பை உறுதியாக்கக் கூடியது எனத் தாங்கள் காட்சிப்படுத்திய உணவு உடலுக்கு தரும் நன்மைகளை உற்சாகமாக எடுத்துக் கூறினர் போட்டியாளர்கள்.

போட்டியின் நடுவர் செஃப் தீனா உணவை ருசிபார்த்து மதிப்பெண் வழங்கினார். முதல் சுற்றில் தீனா தேர்வு செய்த பத்து போட்டியாளர்கள் இரண்டாவது சுற்றான நேரடி சமையலில் பங்கேற்றனர். மேலும் கனீஷா பேகம், பரீனா ஜாவிட் என்ற இரண்டு போட்டியாளர்களும் நேரடியாக இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறும். அதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ. 1 லட்சம் மதிப்பிலான பரிசுகள் காத்திருக்கின்றன.