சிகரெட்டில் உள்ள நிகோட்டின் மிகவும் ஆபத்தானது. அது கருவில் வளரும் குழந்தையின் நுரையீரல் மற்றும் மூளையை பாதிக்கும் அளவுக்கு ஆபத்தானது. அந்த பாதிப்பானது நிரந்தரமாகவும் வாய்ப்புகள் அதிகம். நிகோட்டின் என்பது தாய் மற்றும் குழந்தையின் ரத்தக்குழாய்களைக் குறுக்கி, ரத்த ஓட்டத்தையே தடைசெய்யும். அதனால் குழந்தைக்குப் போக வேண்டிய ஆக்ஸிஜன் சப்ளையும், ஊட்டச்சத்துகளும் தடைப்படும்.
இதன் விளைவாக மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் தவிர்த்து, குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடரும் ‘செரிப்ரல் பால்சி’ போன்ற பாதிப்புகளுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கும். இன்று நிறைய பெண்களுக்கு புகைப்பழக்கம் இருப்பதைப் பார்க்கிறோம். அவர்கள் கர்ப்பகாலத்தில் மட்டுமல்ல, கர்ப்பத்துக்குத் திட்டமிடும்போதே அந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டியது முக்கியம். கணவரின் புகைப்பழக்கத்தையும் நிறுத்தச் சொல்ல வேண்டும்.
இதே விதி மதுப்பழக்கத்துக்கும் பொருந்தும். குடிப்பழக்கம் உள்ள பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு ‘ஃபீட்டல் ஆல்கஹால் சிண்ட்ரோம்’ பாதிப்பு வரலாம். அந்த பாதிப்பு குழந்தையின் மூளை வளர்ச்சி, உடல் வளர்ச்சி, நடத்தைப் பிரச்னைகள் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு காரணமாகலாம். எனவே ஆணோ, பெண்ணோ…. சிகரெட் மற்றும் மதுப்பழக்கங்கள் அற்ற வாழ்க்கைக்குப் பழகுவதுதான் அவர்களுக்கும் அவர்களால் உருவாகும் சந்ததியினருக்கும் ஆரோக்கியமானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.