சாலை ஓரங்களில் திடீரென மஞ்சள் காடாக காட்சியளிக்கும் பூக்களை பார்த்திருப்போம். ’என்னம்மா பூ இது?’ என அம்மாவிடம் கேட்க, ’ஆவாரம் பூ’ என அதன் பெயரைக் கூறிவிட்டு,’ இதெல்லாம் எவ்ளோ மருத்துவ குணம் நிறைஞ்சது தெரியுமா?’ என்றெல்லாம் பலவற்றை சொல்லி அடுக்கியிருப்பார்கள். அப்படி ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் கைக்கொடுக்கக்கூடியது ஆவாரம் பூ.

’’ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை. அதனால்தான் ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா என்பார்கள்’’ என ஆவாரையைப் பற்றிய பெருமைகளைக் கூறும் திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் (ஒய்வு) காமராஜ் ஆவாரையின் பட்டை, இலை , பூ, வேர், மகரந்தம், பிசின் அனைத்தும் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது என்பதை வலியுறுத்தி, அவற்றை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்தும் விளக்குகிறார்…
1.காயகற்ப மருந்து
ஆவாரை தாவரத்தின் அனைத்து பாகங்களையும் கொண்டு செய்யப்படும் இந்த சூரணத்தை ஏதேனும் நோய் இருப்பவர்கள் என்றில்லாமல், உடல் ஆரோக்கியம் வேண்டும் என்பவர்களும், வலிமையுடன் இருக்க வேண்டும் என நினைப்பவர்களும் எடுத்துக் கொள்ளலாம். காயகற்ப மருந்து செய்ய, ஆவாரை மூலிகையை (தாவரத்தின் அனைத்துப் பகுதிகளையும்) சேகரிக்க வேண்டும். இதனை ஒவ்வொரு பாகமாக எடுத்து நன்கு கழுவ வேண்டும்.

அவற்றை நிழலில் உலர்த்த வேண்டும். பொடியாக அரைக்கும் அளவிற்கு இரண்டு நாள்கள் வரை நன்றாக உலர்த்தி எடுக்க வேண்டும். பிறகு அரைத்து சலித்து வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தினசரி காலை ஒரு வேளை மட்டும் 5 கிராம் எடுத்து தேனில் கலந்து தொடர்ந்து சாப்பிட்டு வரலாம். இதனால் உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இந்த ஆவாரை மூலிகை சூரணத்தை நீரிழிவு நோய் உள்ளவர்கள் நோயின் தீவிரத்தை கணக்கில் கொண்டு தினமும் இரண்டு வேளை அல்லது மூன்று வேளை, மருத்துவர் குறிப்பிடும் அளவு எடுத்து வெந்நீரில் கலந்து, உணவு உண்பதற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோய் தீவிரத்தால் ஏற்படும் கண்பார்வை பாதிப்பு, இதய பாதிப்பு, ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, ஆண்மைக்குறைவு, உள்ளங்கால், உள்ளங்கை எரிச்சல், மலக்கட்டு போன்ற பிரச்னைகள் தீரும்; இவை வராமலும் தடுக்கும். ஆனால், மருத்துவ ஆலோசனை பெற்றே இதனை உட்கொள்ள வேண்டும்.

2. சரும பாதுகாப்பு
ஆவாரம் பூவை சேகரித்து பூக்களை மட்டும் தனியாக எடுத்து நிழலில் உலர்த்த வேண்டும். உலர்த்திய பூவை பொடி செய்து சலித்து எடுத்து வைத்துக்கொள்ளவும். தினசரி குளிக்கும்போது, இந்த ஆவாரம் பூ பொடியை நீரில் அல்லது பன்னீரில் கலந்து முகம் மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் காயவைத்து, பின்னர் குளிக்க வேண்டும். இப்படிக் குளித்து வந்தால் சருமத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவாவதுடன் தொடந்து பயன்படுத்தி வர முகப்பரு, தேமல் போன்றவை நீங்கும்.
3. பேன், ஈறு, பொடுகு பிரச்னை நீங்க..
மேலே சொன்ன காயகற்ப பொடியை எடுத்துக்கொள்ளவும். சீயக்காய், பாசிப்பயறு, வெந்தயம், பூந்திக்கொட்டை, கறிவேப்பிலை, எலுமிச்சை பழத்தோல் போன்றவற்றை தனித்தனியாக உலர்த்தி எடுத்து, தனித்தனியாக அரைத்துக்கொள்ளவும். காயகற்ப பொடியுடன் இந்தப் பொடிகளைச் சேர்த்து, இவற்றுடன் வடித்த கஞ்சியைக் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… நெடுநாளைய கேச பிரச்னைகள் தீரும். எவ்வளவு காயகற்ப பொடி எடுத்துள்ளோமோ அதே அளவிற்கு மற்ற பொருள்களின் அளவையும் சமமாக எடுத்துக்கொள்ளவும். உதாரணமாக காயகற்ப பொடி 2 டீஸ்பூன் என்றால், சீயக்காய் பொடி இரண்டு ஸ்பூன், பாசிப்பயிறு பொடி 2 ஸ்பூன் என ஒவ்வொன்றின் அளவும் ஒரே அளவாக இருத்தல் அவசியம்.

4. ஆவாரம் பூ டீ
ஆவாரை இலையை சேகரித்து, உலர்த்தி, ஒன்றிரண்டாக இடித்து திப்பியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். இந்தப் பொடியை தினசரி காலை, மாலை இரண்டு வேளைகளிலும் 2 கிராமுக்கு மிகாமல் எடுத்து, இதனுடன் ஓர் ஏலக்காய், ஒரு சிறிய துண்டு சுக்கு, சிறிது வரமல்லி கலந்து, வேண்டிய அளவு நீர் ஊற்றிக் கொதிக்கவைத்து டீ போல் தயாரித்து குடிக்க உடலுக்குப் புத்துணர்ச்சி தரும்.