Doctor Vikatan: அஜீரணமா… ஹார்ட் அட்டாக்கா… அறிகுறியை வைத்து வேறுபடுத்திப் பார்க்க முடியுமா?

Share

Doctor Vikatan: என் நண்பனுக்கு இரண்டு நாள்களாக அஜீரணம் போன்ற அறிகுறிகள் இருந்தன. அதற்கான மருந்துகளை எடுத்து வந்த நிலையில் திடீரென இறந்துவிட்டான். மருத்துவர்கள் அவன் மாரடைப்பால் மரணம் அடைந்ததாகச் சொல்கின்றனர்.

ஹார்ட் அட்டாக்கை அஜீரணம் என தவறாகப் புரிந்துகொண்டு அலட்சியமாக இருந்ததாகவும் சொல்கின்றனர்.

இதை எப்படிப் புரிந்து கொள்வது?

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்.

அஜீரணமா, ஹார்ட் அட்டாக்கா… இரண்டையும் எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்ற சந்தேகம் பலருக்கும் இருப்பதைப் பார்க்கிறேன். பலரும் அஜீரணம் என்ற எண்ணத்தில் ஹார்ட் அட்டாக் அறிகுறிகளை அலட்சியம் செய்கிறார்கள்.

இதுபோன்ற அறிகுறிகளை உணரும்போது, நீங்களாக அதற்கான சுய வைத்தியம் செய்து கொள்ளாதீர்கள். பல நேரங்களில் மருத்துவர்களாலேயே இதை வேறுபடுத்திப் பார்க்க முடியாது.

ஏனெனில் அஜீரணத்தைப் போன்ற அறிகுறிகள், வயிற்றுப் பிரச்னைகளாலும் வரலாம்… இதய பாதிப்பாலும் வரலாம். அது சாதாரண வயிற்றுப் பிரச்னை என அலட்சியப் படுத்தி, ஒருவேளை அது ஹார்ட் அட்டாக் அறிகுறியாக இருந்தால், உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

இதயம் சார்ந்த பிரச்சினைகள்

உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தால், இசிஜி பரிசோதனை, சில ரத்தப் பரிசோதனைகள் செய்வார்கள். தேவைப்பட்டால் அடுத்தடுத்த பரிசோதனைகளைச் செய்வார்கள். அதுவரை நீங்கள் பாதுகாப்பான சூழலில் இருப்பீர்கள்.

எனவே முகம், வயிறு, நெஞ்சுப் பகுதி போன்ற இடங்களில் அசாதாரண அறிகுறிகளை உணர்ந்தால் அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரை அணுகுங்கள். உங்கள் நண்பர் இந்த விஷயத்தில் அலட்சியமாக இருந்ததுதான் அவரது மரணத்துக்கு காரணமாக இருக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com