Doctor Vikatan – 16 January 2016 – அலர்ஜியை அறிவோம் – 1 | Allergy: Symptoms and Treatment – Doctor Vikatan

Share

அலர்ஜிக்கு அடிப்படை!

உடலில் ஒரு நோய்க் கிருமி நுழையும்போது, அதை எதிர்த்து உடல் செயல்படுவதைப் போலவே ஒவ்வாத பொருளையும் எதிர்க்கிறது. ஆனால், தீங்கற்ற பொருளைக்கூட தீங்கு செய்யும் பொருளாகத் தவறாக அடையாளம் கண்டு எதிர்க்கிறது இதுதான் அலர்ஜிக்கு அடிப்படைக் காரணம்.  இந்த உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டுமானால், நம் உடலில் இயங்கும் ‘தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்று சொல்லக்கூடிய தற்காப்புப் படையை உங்களுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.

அலர்ஜியை அறிவோம்

அலர்ஜியை அறிவோம்

உடலின் ராணுவம்!

  நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; 24 மணி நேரமும் நம்மைக் காவல் காக்கும் வேலைதான். நாட்டைக் காக்கும் ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் கேம்ப் ஆபீஸ். ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். ‘டி’ அணுக்கள், ‘பி’ அணுக்கள், ‘மேக்ரோபேஜ்’ அணுக்கள், ‘எதிர் அணுக்கள்’ (Antibodies) எனப் பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள். ரத்தக் குழாய்களும் ரத்தக் குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க் குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள்.

  சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத கிருமிகள், நஞ்சாகிப்போன உணவுகள், எதிர்பாராத விஷக்கடிகள் போன்றவற்றுடன்தான் யுத்தம். இந்த ‘எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப்படை தன்னிடம் உள்ள சிப்பாய்களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக்கொண்டு, இனியும் இந்த மாதிரியான எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்து, தளபதிக்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து அல்லது துன்பங்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை. 

இவ்வாறு, நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும் அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப்படை தருகின்ற சக்திக்கு ‘நோய் எதிர்ப்பு சக்தி’ (Immunity) என்று பெயர். இது எல்லோருக்கும் ஒரே மாதிரி நிகழ்கிற நிகழ்வு.    ஆனால், அலர்ஜி என்பது உடலுக்கு ஒவ்வாத பொருளை உடலிலிருந்து வெளியேற்றுவதற்கான எதிர்வினை. இது எல்லோருக்கும் ஏற்படுகிற நிகழ்வு அல்ல. ஒருவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் ஒரு பொருள்,  இன்னொருவருக்கு ஒன்றும் செய்யாது. அப்போது, இந்த எதிர்வினை அவருக்கு ஏற்படுவது இல்லை என்பதுதான் காரணம்.

அலர்ஜி ஏற்படும் விதம்

உடலுக்கு ஒவ்வாத ஒரு புறப்பொருள் அல்லது உடலின் உட்பொருள் உடலுடன் தொடர்புகொள்கிறபோது, ரத்த வெள்ளையணுக்களின் சிப்பாய்கள் அதை எதிரியாக எண்ணித் தாக்கத் தொடங்கிவிடும். அப்போது, ரத்தத்தில் அந்த ஒவ்வாத பொருளுக்கு ‘இம்யூனோகுளோபுலின் – இ’ (IgE) எனும் எதிரணுப் புரதம் உருவாகும். இதை, ரத்தப் பிளாஸ்மா செல்கள் உருவாக்குகின்றன. ஒவ்வாத பொருள் முதல் முறையாக உடலுக்குள் நுழையும்போது, இந்தப் புரதம் உருவாகி ரத்தத்தில் காத்திருக்கும். அதே ஒவ்வாத பொருள் மீண்டும் உடலுக்குள் நுழையும்போது, இது அந்த ஒவ்வாமைப் பொருளைக் ’கைது’ செய்துவிடும். புரதத்தால் ’கைது’ செய்யப்பட்ட ஒவ்வாமைப் பொருளால் உடலின் மற்ற பகுதிகளுக்குச் செல்ல முடியாது. இந்தப் புரதமும் ஒவ்வாமைப் பொருளும் சேர்ந்து, ரத்தக் குழாய் திசுவின் உள்ள மாஸ்ட் செல்களைத் தூண்டும். இதன் காரணமாக மாஸ்ட் செல்கள் ‘ஹிஸ்டமின்’, புரோட்டியேஸ், ‘லுயூக்கோட்ரின்’ போன்ற  வேதிப்பொருள்களை வெளியேற்றும். இவை ரத்தக் குழாய்களை விரிவடையச்செய்து அங்கு உள்ள நரம்புமுனைகளைத் தாக்கும். அதன் விளைவால், அலர்ஜியின் முக்கிய அறிகுறிகளான அரிப்பு, தடிப்பு, தோல் சிவப்பது போன்றவை ஏற்படும்.

அலர்ஜியை உருவாக்கும் ஆன்டிஜென், இம்யூனோஜென், ஹேப்டன் போன்றவற்றைப் பற்றி அடுத்த இதழில் விளக்கமாகப் பார்க்கலாம்.

– எதிர்வினை தொடரும்

Source link

Comments are closed.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com