டிஎன்பிஎல் இன் நான்காவது லீக் போட்டியில் திண்டுக்கல் மற்றும் திருச்சி அணிகள் மோதின.டாஸ் வென்ற திருச்சி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. கங்கா, ஜாபர் ஜமால் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாகக் களமிறங்கினர்.
திண்டுக்கல் அணியின் அசத்தலான பந்துவீச்சால் முதல் நான்கு ஓவர்களிலேயே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நடையைக் கட்டினர். அஷ்வின் தனது முதல் ஓவரில் விக்கெட்டை எடுத்துக் மெய்டன் ஓவராக மாற்றினார்.

பவர்பிளே முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் மட்டுமே திருச்சி அணி அடித்திருந்தது. 51/6 என்ற மோசமான நிலையில் இணைந்த கங்கா மற்றும் ராஜ்குமார் ஆகியோர் நிலைத்து நின்று அசத்தலாக ஆடினர்.
இதற்கிடையே 13-வது ஓவரை வீசிய அஷ்வின், ராஜ்குமார் பேட்டில் எட்ஜாக கள நடுவர் ‘அவுட்’ கொடுத்தார். இதற்கு ராஜ்குமார் ரிவ்யூ எடுக்க,
அல்ட்ரா எட்ஜ் மூலம் பேட்டில் பந்து படவில்லை என்பதை உறுதி செய்த மூன்றாம் நடுவர், நாட் அவுட் என அறிவித்தார்.
முடிவை ஏற்றுக்கொள்ளாத அஷ்வின் ரிவ்யூ செய்ய, கள நடுவர் மீண்டும் மூன்றாம் நடுவரிடன் முடிவை கோரினார். மீண்டும் ‘நாட் அவுட்’ என அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆட்டத்தில் கங்கா மற்றும் ராஜ்குமார் இடையே 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க ஒரு வழியாக 100 ரன்களை கடந்தது திருச்சி. கடைசி ஐந்து ஓவர்களில் திருச்சி எழுச்சி பெற்றிருந்தால் 150 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கலாம். ஆனால் அஷ்வினின் எக்ஸ்பீரியன்ஸ் பௌலிங் வெளிப்பட, சிறப்பாக விளையாடிய கங்கா எல்பிடபிள்யூ ஆகி 48 ரன்களில் வெளியேறினார். முக்கியமான விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் அஷ்வின்.

அதிரடியாக ஆடிய ராஜ்குமார் அவுட் ஆக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 120 ரன்கள் டார்கெடாக செட் செய்தது திருச்சி. ஒரு பாலுக்கு ஒரு ரன் அடித்தாலே வெற்றி என்ற எளிய இலக்கு சேஸ் செய்ய வந்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு, முதல் ஓவரிலேயே நடராஜன் விக்கெட் எடுத்து ஷாக் கொடுத்தார். இருப்பினும் சிவம், இந்திரஜித் பொறுப்புடன் விளையாடி பவர் பிளேவில் சிக்ஸர் மழை பொழிந்தனர்.
பவர் பிளே முடிவில் மட்டும் 61 ரன்களை குவித்தது திண்டுக்கல். பவர் பிளேவில் தொடர்ந்த அதிரடி ஆட்டம் 15 ஓவரில் சிக்ஸருடன் வெற்றியை ருசித்தது திண்டுக்கல் டிராகன்ஸ். திருச்சி அணி மத்திய ஓவரில் நடராஜனிடம் பந்தை கொடுத்து விக்கெட்டெடுக்கும் முயற்சியை செய்திருந்தால் ஆட்டத்தில் கம்பேக் கொடுத்திருக்கலாம். பேட்டிங் பவுலிங் சிறப்பாக அமைய 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது அஷ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்.
இதற்கு முன்னர் நடைபெற்ற மூன்றாவது லீக் ஆட்டத்தில் மதுரை பந்தர்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மதுரை பந்தர்ஸ், நெல்லை அணியின் அபாரமான பந்துவீச்சால் 20 ஒவர்கள் முடிவில் 126 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தது. எளிய இலக்கை சேஸ் செய்த நெல்லை, நிதிஷ் ராஜகோபாலின் அபாரமான ஆட்டத்தினால் 13.4 ஓவர்களிலேயே 128 ரன்கள் எடுத்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் வெற்றி பெற்றது.