தொடர்ந்து, அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் தனது வாதத்தைத் தொடங்கினார். “செந்தில் பாலாஜியிடம் கைதுக்கான காரணம் குறித்த நோட்டீஸ் மற்றும் சம்மன் வ்பழங்கப்பட்டபோது அதை அவர் வாங்கவில்லை. அவர் மனைவி மற்றும் சகோதரரை தொலைபேசியில் அழைத்தோம். குறுஞ்செய்தி அனுப்பினோம். இவை எதற்குமே அவர்கள் பதிலளிக்காத நிலையில், மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவித்தோம். எங்கள் அழைப்பை ஏற்காமல், நோட்டீஸை வாங்காமல் சட்ட விரோத கைது நடவடிக்கை என்று சொல்வது நியாயமா?” என்று வாதிட்டார்.
PMLA எனப்படும் பண மோசடி தடுப்புச் சட்டம் குறித்த முக்கிய தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “நேற்று வரை நலமாக இருந்தவருக்கு திடீரென எப்படி 3 அடைப்புகள் ஏற்பட்டன. இதில் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் அவர் மாநில அரசு மருத்துவமனையில் இருப்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டு, “செந்தில் பாலாஜியை 15 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வேண்டும்” எனக் கூறி, அதற்கான கோரிக்கை மனுவை நீதிபதியிடம் சமர்ப்பித்தார். மேலும், சுதந்திரமான மருத்துவக் குழுவை அமைத்து செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்க அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
அப்போது குறுக்கிட்ட செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 3 ரத்த நாளங்களில் 70% அடைப்புகள் இருப்பதாக ஓமந்தூரார் மருத்துவமனை கூறியிருக்கிறது. இ.எஸ்.ஐ மருத்துவமனையும் இதையே கூறியிருக்கிறது. அமலாக்கத்துறையின் சார்பாக ஏற்பாடு செய்யப்படும் சிறப்பு மருத்துவக் குழுவும் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதிக்கட்டும். அவரைப் பார்க்கட்டும்” என்றார்.
தொடர்ந்து பேசிய அமலாக்கத்துறை வழக்கறிஞர், “சட்டத்தின் முன்பு அனைவரும் சமம். பல வழக்குகளில் தமிழ்நாடு அரசு சிறந்த மருத்துவர்களைக் கொண்டதாக வாதிடும்போது, ஏன் செந்தில் பாலாஜியை மட்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்… அப்படி என்றால் அனைத்து மக்களுக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை வழங்குவீர்களா” என கேள்வி எழுப்பினார். இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில், “அவரது Personal surgeon காவேரி மருத்துவமனையில் இருப்பதாலே அனுமதி கேட்கிறோம்” என பதிலளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அமலாக்கத்துறை 15 நாள்கள் போலீஸ் காவல் கேட்ட மனுமீது விசாரணை நாளை நடைபெறும் எனத் தெரிவித்தார். இந்த மனுமீதான விசாரணை முடிந்த பிறகே செந்தில் பாலாஜியின் ஜாமீன் குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும்.