இங்கிலாந்தில், ஓர் ஆண்டுக்கு மேலாக சிறுநீர் கழிக்க இயலாமல் அவதிப்பட்ட பெண்ணுக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில், அவர் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை சேர்ந்தவர் எல்லி ஆடம்ஸ். 30 வயதாகும் எல்லியின் வாழ்க்கையில், 2020-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதியும், ஒரு சாதாரண நாளைப்போலவே துவங்கியது. ஆனால் அப்போது அவருக்குத் தெரியாது… அது தனது வாழ்நாளின் மிக முக்கியமான நாளாக அமையும் என்று. காலை எழுந்த எல்லி, சிறுநீர் கழிக்க முயன்றபோது அவரால் முடியவில்லை. ஏன் என்று புரியாமல் பதறிய அவர், மருத்துவரிடம் சென்று ஆலோசனை மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அவருக்குப் பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. இறுதியாக, செயற்கை குழாய் மூலம் சிறுநீரை அகற்றினர். பொதுவாக ஆண்களுக்கு 750 மில்லி வரை சிறுநீரும், பெண்களுக்கு 500மில்லி அளவு சிறுநீரும் சிறுநீர்ப்பையில் இருக்கும். ஆனால் எல்லியின் சிறுநீர்ப்பையிலிருந்து 1 லிட்டர் அளவு சிறுநீரை அகற்றினர் மருத்துவர்கள். மூன்று வாரங்களுக்குப் பின் மீண்டும் பரிசோதனைக்கு வரும்படி கூறிவிட்டு, மருத்துவர்கள் அவரை அன்று வீட்டிற்கு அனுப்பினர்.
இருப்பினும், எல்லியின் சிறுநீர் பிரச்னை தீர்ந்தபாடில்லை. எவ்வளவு அதிகமான தண்ணீர் அருந்தியபோதும், சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு இருக்கும்போதும், அவரால் அது முடியவில்லை. மிகவும் மனம் உடைந்தார் எல்லி. அனைவராலும் செய்ய முடியும் ஒரு சாதாரண செயலைக் கூட தன்னால் செய்ய இயலாமல் போனதை எண்ணி வருந்தினார். மீண்டும் மருத்துவமனைக்குச் சென்றார் எல்லி. சிறுநீரக மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார்.
அவரை பரிசோதித்த மருத்துவரும் அவருக்கு எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், யோகா முதலானவை செய்து மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறினர். நாள்கள் கடந்துகொண்டே தான் இருந்தன, பிரச்னை தீருவதாக இல்லை. 14 மாதங்களாக தினமும் செயற்கை குழாய் மூலம் மட்டுமே சிறுநீர் கழித்து வந்த அவருக்கு, இன்னோர் அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவப் பரிசோதனை முடிவில், அவருக்கு ஓர் அரிய வகை நோய் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. இனி வாழ்நாள் முழுவதும் அவரால் சிறுநீர் கழிக்க இயலாது என்பதை அறிந்து விரக்தியின் உச்ச நிலைக்குச் சென்றார் எல்லி.