மாதவிடாய் ஆவணப்பட இயக்குநரும், `துப்பட்டா போடுங்க தோழி’ புத்தகத்தின் எழுத்தாளருமான கீதா இளங்கோவனிடம், `பிரா கல்ச்சர்’ பற்றி பேசினோம்.
“சமூகம், பெண் உடலை உயிரியல் கூறாகக் கருதாமல், அழகுக்கான பண்டமாகக் கருதுகிறது. பெண் உடலின் ஒரு பாகமாக இருக்கும் மார்பகங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை சமூகம் தீர்மானிக்கிறது. பெண்ணின் மார்பகங்கள் எந்தளவில் இருக்க வேண்டும், என்ன பிரா போட வேண்டும், பிரா போட வேண்டுமா, வேண்டாமா, துப்பட்டா போட வேண்டுமா, வேண்டாமா என்பதெல்லாம் தனிப்பட்ட பெண்ணின் விருப்பம், அதில் சமூகம் தலையிடுவது அநாகரிகம்.
மார்பகங்களை கவர்ச்சிப் பொருளாகப் பார்ப்பதன் விளைவுகளை வலிமிகுந்த இந்திய வரலாற்றுப் பதிவுகள் நமக்கு உணர்த்தும். 19-ம் நூற்றாண்டில் கேரளா மற்றும் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலியை உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் பட்டியலினப் பெண்கள், தங்கள் மார்பை மறைக்க அனுமதி இல்லை. பட்டியல் சாதியைச் சேர்ந்த பெண்கள் வேலை செய்துகொண்டிருக்கையில், வசதியான சீமான்கள் பார்த்து ரசிப்பதற்காக மார்பை மறைப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டது. அங்குள்ள பெண்கள் திரண்டு தோள் சீலைப் போராட்டத்தின் மூலம் மார்பை மறைக்கும் உரிமையைப் பெற்றனர்.
மார்பை மறைக்காதே என்று சொல்வதும், மூச்சு விடக்கூட முடியாமல் மார்பைச் சுற்றி இறுக்கமான ஆடை அணிந்து கொள் என்று கட்டாயப்படுத்துவதும் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடாகும். மார்பகங்கள் மீதான சமூகக் கட்டமைப்பால் பெண்கள், தங்கள் உடலையே வெறுக்கும் அவலநிலை ஏற்படுகிறது. மார்பகங்கள் அதிகமாக வளர்ச்சி பெற்றால் மோசமான வார்த்தைகளில் ஏளனப்படுத்துவதும், போதுமான வளர்ச்சி இல்லை என்றால் கேலி செய்வதும், வெப்பத்தின் காரணமாக காட்டன் பிராவை தேர்ந்தெடுக்கும் பெண்களை, முலைக்காம்பு தெரிவதாக கேலி செய்வதும் பெண் உணர்வுகளை பாதிக்கக்கூடியவை.
உடலமப்புக்குத் தகுந்தவாறு மார்பகங்கள் வளர்ச்சி அடைகின்றன. இதைப் பெண் தீர்மானிக்க முடியாது என்றபோது அவளை வார்த்தைகளால் புண்படுத்துவது சமூகத்தின் குறுகிய மனப்பான்மையையே வெளிப்படுத்துகிறது. இவ்வாறான பேச்சுகளுக்கு பயந்து பெண்கள் மார்பகங்களை அழகுபடுத்த முனைகின்றனர். இதற்கேற்றவாறு பேடட் பிரா (padded bra) போன்று பல்வகை பிராக்கள் சந்தையில் விற்கப்படுகின்றன. பெண்ணின் மார்பகங்கள் வர்த்தகமயமாகிவிட்டன. பிரா போட்டால்தான் நல்லபெண், இல்லையென்றால் மோசமான பெண் என்ற மூளைச்சலவையும் செய்யப்படுகிறது. சமூகத்துக்கு ஏன் பெண்ணுடல் மீது இவ்வளவு வன்மம்?” என்றார்.