இயற்கை தந்த பல மருத்துவ குணம் கொண்ட பொருள்களில் கடுக்காய்க்கு முக்கிய இடமுண்டு. `காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் மண்டலம் உண்டால் கோலை ஊன்றி குறுகி நடக்கும் கிழவனும், கோலை வீசி குலாவி நடப்பானே’ என்கிறது சித்தர்களின் வாக்கு. `ஈனாத மாட்டுக்கு ஒரு கடுக்காய்; இளம் பிள்ளைத்தாய்ச்சிக்கு ஏழு கடுக்காய்’ போன்ற பழமொழிகளும் கடுக்காயின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகின்றன.
`உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்றால், 60-க்கும் மேற்பட்ட காயகல்ப முறைகளைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக உடல், மனம், ஆன்மாவைத் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உள்ளது’ என்று கூறும் திருமூலர் அதை `அமுதம்’ என்கிறார்.
காலையில் இஞ்சிச்சாறு, பகலில் (மாலை) சுக்குக் காபி, இரவில் உறங்கப்போவதற்கு முன்னர் விதை நீக்கிய கடுக்காயைத் தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து அருந்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் உடலில் தேங்கியிருக்கும் கழிவுகள் அனைத்தும் நீங்கிவிடும். அதாவது மலச்சிக்கல் நீங்கும்; கபம் சமநிலைப்படும். இப்படி நோய்கள் நீங்குவதன் மூலம் கிழவனும் குமரனாகலாம் என்பதே அதன் பொருள். இதில் கடுக்காயின் பங்கு அதிகம்.
சித்தர்களின் கூற்றுப்படி கல்பங்கள் உடலுக்கு வலுவூட்டி, நீண்ட ஆயுளைத் தரக்கூடியவை. மொத்தம் 108 கல்பங்கள் உள்ளதாகவும், அவற்றைச் சாப்பிடுவதால் நோய் விலகும், பிற்காலத்தில் நோய் வராமல் தடுக்கும் என்கிறார்கள் சித்தர்கள். மேலும், உடல் செல்களைப் புதுப்பித்து, உடலை வலுவாக்கி, இளமையாக இருக்கச் செய்யும்.
இஞ்சி, சுக்கு, கடுக்காயில் செய்யப்படும் கல்பங்கள் ஆண்- பெண் உறவைப் பலப்படுத்தி, குழந்தைப்பேறு தரக்கூடியவை. ஆண்மைத்தன்மை குறைவதாக கருதினால், இந்த மூன்று கல்பங்களும் அருமருந்து. ஆண்களுக்கும் பெண்களுக்கும் உயிர் சக்தியை மீட்டுத்தந்து, குழந்தைப்பேறு கிடைக்கச் செய்யும். காலையில் வெறும் வயிற்றில் இஞ்சி கல்பம், மதிய உணவு உண்ட பிறகு, சுக்கு கல்பம், இரவில் கடுக்காய் கல்பம் என 48 நாள்கள் சாப்பிட்டு வந்தால், அடுத்த சில மாதங்களில் குழந்தைப்பேறு கிடைக்க வாய்ப்புள்ளது.