இந்திய கிரிக்கெட் அணி பலவீனமாக இருப்பதாகவும், 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்றும், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளருமான கிரேக் சாப்பல் கூறியுள்ளார். அவரது கருத்து இந்திய கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் வெளியாகும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற பத்திரிக்கைக்கு, கிரேக் சாப்பல் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது- இந்திய அணியின் முக்கிய ஆட்டக்காரரான ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் காயமடைந்துள்ளனர். இந்திய அணி முழுவதுமாக விராட் கோலியை நம்பியுள்ளது. இதன் அடிப்படையில் இந்திய அணி மிகவும் பலவீனமாக நிற்பதைப் பார்க்கலாம்.
ஆஸ்திரேலிய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முழு கவனம் செலுத்த வேண்டும். வேறு எதைப் பற்றியும் நினைக்க கூடாது. இதைச் செய்தால் இந்திய அணியை வெல்ல முடியும். இந்திய மைதானங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதனையும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கவனத்தில்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் வியாழனன்று நாக்பூர் மைதானத்தில் தொடங்குகிறது. சர்வதேச அளவில் ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதலிடத்தில் உள்ளது.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிரான அந்த அணியின் ரெக்கார்டுகள் மோசமானதாக உள்ளன. இந்திய மண்ணில் ஆஸ்திரேலிய அணி, கடைசியாக 2004 -ஆம் ஆண்டு டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. இதன் பின்னர் நடந்த எந்த ஒரு டெஸ்ட் தொடரிலும், இந்திய அணியை ஆஸ்திரேலியாவால் வெல்ல முடியவில்லை. இந்த மோசமான சாதனையை இந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணி முடிவுக்குக் கொண்டு வருமா என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 50, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.